
“நம்மிடம் ஒரு பொருள் இருந்து, அதை நாம் உபயோகிக்கா விட்டால்.. அந்தப் பொருள் நம்மிடம் இல்லாததற்கு சமம்.”
இந்த அற்புத தத்துவத்தை சொன்னது எந்தவொரு மேதையும் இல்லை. ஏவாளை வழிக்குக் கொண்டு வந்து ஆப்பிளைச் சாப்பிட வைக்க சாத்தான் சொன்னது. அதையே இப்ப நான் உங்களுக்கு சொல்கிறேன்.
“என்ன வளமில்லை இந்த தமிழ்நாட்டில்” என நான் பாட்டாவே படிச்சிடுவேன். சரி வேணாம் விடுங்க. சித்தரியல் என்ற அரிய விஷயம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுப் போன பெரும் கொடை. சித்தர்கள் தான் உலகின் முதல் விஞ்ஞானிகள் என ஆதாரங்களுடன் நிருபித்தாலும்.. அதை சந்தேகிக்க தான் துணை புரிகிறது மெக்காலே கல்வித் திட்டம். நம்ம நம்பிக்கைகள் இப்படிப் பாதாளத்தில் இருக்க.. பாபா ராம்தேவ்வும், ஸ்ரீலஸ்ரீயும் அதில் நம்பிக்கை வைத்து கோடிகளில் உழல்கின்றனர். அப்படி நாம் கோடிகளில் உழலா விட்டாலும் கூட, மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவுமாவது வாழலாமே!!
இதில் ஓர் எளிய மூச்சுப் பயிற்சியின் மூன்று கட்டங்களைப் பகிர்ந்துள்ளார் தோழி. அதில் ஒரே ஒரு கட்டத்தினை மட்டும் ஆற்றோரத்தில் அமர்ந்து செய்யும் பாபா ராம்தேவ்வைப் பாருங்கள்.
அவரின் சொத்து மதிப்பை, ஒரு பத்தியில் சுருக்கமாகக் கூட சொல்லி விட முடியாது. பல பல கோடிகளுக்கு அதிபதி. அது போதாதோ என யாரோ ஒரு புண்ணியவான் இவரது சேவையைப் பாராட்டி, சுவிட்சர்லாந்தில் 900 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவினை யோகா பீடம் திறக்கப் பரிசளித்துள்ளார்.
இதை தான் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலையில் “சுதர்சன க்ரியா” என்ற பெயரில் சொல்லிக் கொடுக்கின்றனர். அவருக்கு 151 நாடுகளில் 300 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். சொத்து மதிப்பு சொல்லணுமா என்ன? கோடிகளில் தான்
‘சின்ன கல்லு; பெத்த லாபம்’னு பஞ்சதந்திரம் படத்தில் வருகின்ற வசனம் போல.. நமது அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு சிறு கூறாய் இருக்க வேண்டிய ஒரு சாதாரண பயிற்சியை பணம் கொடுத்தும் பயிலும் அவல நிலையில் இருக்கின்றோம். வீட்டிலேயே முயலக் கூடிய எளிய பயிற்சியாக இருப்பதால் தான்.. குருவருள் துணை கொண்டு முயலுங்கள் என்றோ ஆய்வுக்கு உட்பட்டது என்றோ மிரட்டாமல் வழக்கத்திற்கு மாறாகத் தெளிவாகப் பகிர்ந்துள்ளார். இல்லை நான்.. பாபா கிட்டயோ, ஸ்ரீஸ்ரீ கிட்டயோ காசைக் கொட்டி தான் கத்துப்பேன் என்றாலும் பாதகமில்லை. ஏதோ அனைவரும் நன்றாக இருந்தால் சரி தான். முக்கியமாகப் பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டுப் பயனடையணும்.
உள்ளே வெளியே என மங்காத்தா ஆடும் மூச்சை கவனித்தாலே, வாழ்க்கை ‘ஓஹோ’ன்னு இருக்குமே!!
– சிம்ம வாகனி