Search

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

மாயலோகத்தில்..

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைநாஞ்சில்நாடு இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதி. 1956இல் மொழி வாரி மாகாணங்கள் அமைவது வரை திருவிதாங்கூர் – கொச்சி சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. மலையாளத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்த அந்த நாஞ்சில் நாட்டுப் பகுதி தமிழுக்கு அளித்த கொடை மிக அதிகம்.

தசாவதானி செங்குத்தம்பி பாவலர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ம.அரங்கநாதன், பொன்னீலன், தமிழவன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், ஹெப்சிபா ஜேசுதாசன், கிருத்திகா, தோப்பில் முகம்மது மீரான் போன்ற மிகச் சிறந்த இலக்கிய வாதிகளை தமிழுக்குத் தந்திருக்கிறது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மிகச் சிறந்த கவிஞர். பெரியவர்களுக்கு மாத்திரம் என்று இல்லாமல், குழந்தைப் பாடல்கள் பலவும் மிகச்சிறப்பாக இயற்றியுள்ளார்.

‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு,
அங்கே துள்ளிக்குதிக்குது கன்றுக் குட்டி’

‘தம்பியே பார், தங்கையே பார்,
சைக்கிள் வண்டி இதுவே பார்’,

போன்ற குழந்தைப்பாடல்கள், அக்காலங்களில் ஆரம்பப் பள்ளிப் புத்தகங்களில் தவறாது இடம் பெறுவது வழக்கம்.

பெரியவர்களுக்காக, மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம், மருமக்கள் வழி மான்மியம் போன்ற கவிதை நூல்களைப் படைத்துள்ளார். இவைகள் யாவுமே மிகுந்த இலக்கியத்தரம் வாய்ந்தவை.

கவிமணியின் ‘மருமக்கள் வழி மான்மியம்’ மிகவும் பரபரப்பாக அக்காலத்தில் பேசப்பட்டது. மருமக்கள் வழி மான்மியம் என்பது திருவிதாங்கூரில் அக்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த சொத்துரிமை சம்பந்தமான ஓர் ஏற்பாடு. சட்டம் போல் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த முறையின்படி ஒருவருக்குப் பிறந்த மகனுக்கோ, அல்லது மகளுக்கோ தகப்பனாரின் சொத்தில் உரிமை கிடையாது. மருமகன் (சகோதரியின் மகன்) களுக்கே தந்தையின் சொத்துகள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அரசர்களுக்கும் அப்படித்தான் இவ்வாறே தான் திருவிதாங்கூரின் அரசர்கள் அனைவரும் ஆட்சிக்கு வந்தார்கள்.

கவிமணி இம்மாதிரியான ஏற்பாட்டிற்கும், சட்டங்களுக்கும் எதிர்ப்பாளர். எனவே இம்முறையைக் கிண்டல் செய்து எழுதப்பட்ட கவிதை நூல்தான் ‘மருமக்கள் வழி மான்மியம்’.

அக்காலத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளை மிகவும் தைரியமாக விமர்சனம் செய்திருக்கிறார்.

ஒரு நீதிமன்றக் காட்சி, சாட்சியிடம் வக்கீல் ஒருவர் கேள்வி கேட்டு விசாரணை செய்கிறார்.

வக்கீல் – ஓடுற குதிரைக்கு கொம்பு ஒண்ணா? ரெண்டா?
சாட்சி – குதிரைக்கு ஏதுங்க கொம்பு?
வக்கீல் – கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. கேட்ட கேள்விக்கு
பதில். கொம்பு ஒண்ணா? ரெண்டா? அதைத்தான் சொல்லணும்.

இந்த ரீதியில் தான் நீதிமன்ற நடவடிக்கை அக்காலத்தில் திருவிதாங்கூரில் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

சுசீந்திரம் என்கிற ஊரின் அருகிலிலுள்ள எழில் நிறைந்த தேரூர் என்னும் சிற்றூர் இவரது சொந்த ஊரானாலும், நாகர்கோவில் நகரை அடுத்த புத்தேரி’ என்கிற ஊரில்தான் கடைசி வரை வாழ்ந்து 1954இல் நம்மை விட்டுப் பிரிந்தார்.

இவராகத் திரைப்படத் துறையில் பக்கம் செல்லவில்லை. இவரது பல பாடல்களைத் திரை உலகம் அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கிறது. இப்பாடல்கள் கூட திரைப்படத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. முதன்முதலில் என்.எஸ்.கே. பிக்சர்ஸ் தயாரித்த பைத்தியக்காரன் (1947) படத்தில் இவரது பாடல் ஒன்று பயன் படுத்தப்பட்டது. இதையடுத்து 1951இல் இதே நிறுவனத்தின் தயாரிப்பான ‘மணமகள்’ படத்தில் ஒரு பாடல். பின்பு ‘தாயுள்ளம்’ என்கிற படத்தில்,

கோயில் முழுதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏரி கண்டேன்
தேவாதி தேவனை நான்
எங்கெங்கும் தேடினும் கண்டிலனே

என்கிற ஒரு அற்புதமான பாடலை எம்.எல்.வசந்தகுமாரி பாட அப்பாடல் மிகவும் பிரபலமாயிற்று. இவைகள் தவிர 1952இல் ‘வேலைக்காரன்’. 1955இல் ‘கள்வனின் காதலி’, 1956இல் ‘கண்ணின் மணிகள்’, ‘நன் நம்பிக்கை’ ஆகிய படங்களிலும் இவரது பாடல் இடம் பெற்றன.
‘கள்வனின் காதலி’ படத்தில் இவரது,

‘வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு’

என்ற பாடல் பி. பானுமதி, கண்டசாலா குரலில் மிகவும் வெற்றியடைந்தது.

1954இல் இவர் காலமானபோது, நாஞ்சில் நாட்டை உள்ளடக்கிய குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்குப் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு கவிமணி பெருமைப்படுத்தப்பட்டார்.

அஞ்சலி செய்யும் வாய்ப்பு, சிறுவனாக இருந்த இக்கட்டுரையாளருக்குக் கிடைத்தது என்றொரு பெருமிதமுண்டு.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்