Shadow

காட்சியின் மொழி – நுட்பமும் ரசனையும்

Vishwesh Obla

நான் எடுக்கும் சில புகைப்படங்களுக்கு பின்னூட்டமாக ‘அழகான புகைப்படம், என்ன கேமரா வைத்துள்ளாய்?’ என்று அடிக்கடி வரும் கேள்வியானது, சில வருடங்களாகவே என்னை ஆயாசப்படுத்தினாலும், இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவதே சரி என்று ஒதுங்கியும் விடுகிறேன்.

தற்காலத்தைய ஃபேஸ்புக் யுகத்தில் அத்தகைய கேள்விகளுக்கு விளக்கமான பதிலை அளித்தாலும், கேள்வி கேட்பவர்கள் அந்த பதில்களை கிரகிப்பவர்களாக எனக்குத் தோன்றவில்லை — என் நண்பர்களில் பலர் இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதை என்னவென்று சொல்வது?

நன்றாகத் தோன்றும் புகைப்படங்களைப் பார்த்து உடனடியாக ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவோர் பலர் அது வெறும் அபிப்பிராயமன்றி ஒரு ரசனைக்குரிய விஷயமும் ஆகும் என்பதை அறிந்திருப்பதில்லை. விலை உயர்ந்த ஒரு கேமராவினால் எடுக்கப்படும் புகைப்படங்கள் அவ்வாறாக இருக்கும் என்ற எண்ணமே அவர்களில் சிலரை அத்தகைய கேமராக்களை வாங்கவும் வைத்து விடுகிறது.

என்னுடைய நண்பர் ஒருவர் நான் சொல்லியும் கேளாமல் நான்காயிரம் அமெரிக்க டாலர் கொடுத்து ஃபுல் ஃபிரேம் கேமரா மற்றும் எல்-லென்ஸ் என்றழைக்கப்படும் விலை உயர்ந்த லென்ஸ்களையும் வாங்கி ஒரு வாரம் படங்கள் எடுத்து தள்ளினார். இவர் 2007ல் வெளிவந்த காலாவதி ஆகாத ஒரு DSLR கேமராவையும் வைத்துள்ளார்! அந்த கேமராவின் மெகா ஃபிக்ஸல்கள் மிகவும் கம்மியானது ஆகவே அதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சரியாக இல்லை என்று வறட்டு வாதம் வேறு — நான் உபயோகிக்கும் கேமரா அதை விட சற்றே அதிகமான அம்சங்கள் கொண்டிருப்பதைச் சொல்லியும் கூட. வாங்கிய ஒரே வாரத்தில் அந்த நான்காயிரம் டாலர் கேமராவும் அதற்கு முந்தையதைப் போலவே அடுக்களையில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று டெக்னிக்கல், மற்றொன்று ரசனை.

எந்த ஒரு பொருளினையும் நம் கண்களால் பார்ப்பதற்கும், ஒரு கேமரா வழியாகப் பார்ப்பதற்கும், நிறைய வித்தியாசங்கள் உள்ளது. கண்கள் பொதுவாக பார்ப்பதை மட்டுமே கேமராவில் பதிவு செய்வது ஒரு நல்ல புகைப்படமாக ஆகிவிடுவதில்லை. நம் கண்களால் நாம் பொதுவாகப் பார்க்கப்படக்கூடிய ஒரு பொருளானது, நம் கண்களும் பல காரணங்களினால் பார்க்க இயலாமல் போனதை பதிவு செய்யும்பொழுது தான் ஒரு புகைப்படம் சிறப்பு அடைகிறது.

நம் கண்கள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. முழுமையாக இயலாதெனினும் நம் கண்களைப் போல நமது கேமராவின் லென்ஸ்களைப் பார்க்க வைக்க கேமராவின் டெக்னிக்கல் அம்சங்கள் உதவுகின்றன.

ISO, EXPOSURE மற்றும் Shutter speed ஆகியவைகளை எப்படிக் கட்டுப்படுத்தி நல்ல புகைப்படங்களை எடுக்கலாம் என்பதற்கான குறிப்புகள் இணையமெங்கும் கிடைக்கின்றன. இந்த மூன்றும் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து ஒரு பொருளினை நம் கண்கள் போல பார்க்க உதவுகின்றன எனும் அடித்தளத்தில் தான் ஒரு நல்ல புகைப்படம் உருவாகிறது.

ஆனால், இந்த அடித்தளமானது ஓர் ஆரம்பமே! ஒரு ஓவியனுக்கு எவ்வாறு சில நிறங்கள் கலந்தால் ஒரு சில நிறங்கள் கிட்டும் என்பதைப் போன்ற அறிவே ஆகும்.

Vishwesh Obla Photography

நாம் காணும் பல பொருட்கள் நம் மனதில் பதிவதில்லை. ஆற்றோரமாக நடந்து செல்கையில் நாம் பார்க்கும் ஒரு பூவானது நம் கண்களில் தென்பட்டு நாம் அதைப் பார்த்து ரசித்தாலும் அந்தப் பூவானது எப்படி சற்றே கலைந்த மேகங்களுடன் கூடிய ஆற்றின் பின்னணியில் இனைந்து ஒரு பிரபஞ்ச நாடகத்தினை நமக்கு காட்டுகிறது என்பதை நம் கண்கள் அறியாமல் போகலாம். நம் கண்களும் நம் மனதும் வழக்கமாக இணைந்து செயலாற்றுவதால் நமக்கு வயது ஆகஆக, நம் மனதில் என்ன வழக்கமாக பதிவு ஆகியுள்ளதோ அதை மட்டுமே நம் கண்களும் பார்க்க கூடியவர்களாக நாம் மாறுகிறோம்.

ஒரு சிறு குழந்தையின் ஆச்சரியம் அடைந்த கண்களும் ஒரு வயதானவரின் ஆச்சரியம் அடைந்த கண்களும் வெவ்வேறானவை. குழந்தை பார்ப்பது ஒரு பொருளுடைய உயிர் வடிவை. வயதானவர் பார்ப்பது ஒரு பொருளின் படித்துணர்ந்த எண்ண வடிவை. எப்படி ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் ஒரு குழந்தையால் பார்க்க இயலக்கூடிய ஆனால் விவரிக்க இயல முடியாத ஒரு பொருளின் உயிர் வடிவை சித்தரிக்க முயலுகிறதோ, அது போன்றே புகைப்படங்களும் ஒரு பொருளின் ஆன்மப் பரிமாணத்தைச் சித்தரிக்க இயலுகையில் தான் சிறப்பு பெறுகின்றன.

இவ்விடத்தில் என் நண்பன் ஒருவனுடன் பேசிய சம்பாஷணை நினைவிற்கு வருகிறது. அவனிடம் மிக மிக விலை உயர்ந்த கேமராவும் பல மிகச்சிறந்த லென்ஸ்களும் உள்ளன. சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலுக்கு அவன் சென்றிருந்த பொழுது தன்னுடைய கைப்பேசியில் எடுத்த படங்களை அனுப்பி இருந்தான். ஏன், உன்னுடைய கேமராவில் எடுக்கவில்லை என்று கேட்டபொழுது, தான் சாமி கும்பிட மட்டுமே போனதாகவும் அத்தகைய சூழ்நிலையில் புகைப்படங்கள் எடுக்க நினைப்பது ஏதோ மிகப்பெரிய குற்றம் போன்ற தோரணையில் பதில் அளித்தான். ஆனால், சொத்தையாக அந்தப் பிரம்மாண்ட கோவிலை தன்னுடைய கைப்பேசியில் முடிந்த மட்டும் சிதைத்திருந்தான். அத்தகைய ஒருவனுக்கு புகைப்படங்களின் சூட்சுமம் புரிபடவே இல்லை என்றே கூறுவேன்.

‘நாம் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் , ஆனால், அறிவது என்பது மிக அரிதானதாகவே நிகழ்கிறது (We always look, but rarely see)’ என்று Claude Monet என்கிற பிரெஞ்சு நாட்டு ஓவியர் கூறி இருப்பார். இந்த வேறுபாடு ஒரு கலைஞனுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வேறுபாட்டை அனுபவபூர்வமாக என் நண்பன் அறிந்திருந்தால், தான் கும்பிடச் சென்ற பிரகதீஸ்வரரை ஒத்த ஆன்ம அனுபவத்தினை இன்னமும் சிறப்பாக கூட அந்தப் பிரம்மாண்ட கோயிலினை தன்னுடைய கேமராவின் மூலமாக காண்பதிலும், அதன் சூட்சுமத்தை பதிவு செய்வதின் வாயிலாகவும் பெற்றிருப்பான்.

ஆக, நல்ல புகைப்படங்கள் என்பன கேமரா பற்றிய அறிதல் மட்டுமன்றி, என்ன எடுப்பது என்பதையும் தாண்டி எப்படி அறிவது, அதை எவ்வாறு பதிவு செய்வது என்று பரிமாணம் பெறுகிறது. அறிவது என்பது ரசனை, அழகுணர்ச்சி போன்ற அனுபவம் சார்ந்த நுண்ணுணர்ச்சியாகும். அவை கற்பிக்கப்பட இயலாது. வாழ்க்கையை உள்ளார்ந்து அறிய வேண்டுமென்ற உந்துதலினால் மட்டுமே அவை சாத்தியமாகும்.

ஓவியக்கலைகளுக்கு பொருந்தும் பெரும்பான்மையான அம்சங்கள் புகைப்படங்களுக்கும் பொருந்தும்.

Composition, lighting போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் இவ்விரு கலைகளுக்கும் ஒன்றே. ஓவியனுக்கு வண்ணங்கள் எவ்வாறோ, அவ்வாறே புகைப்படக் கலைஞனுக்கு ஒளியாகும். பலவாறு முயற்சி செய்து சரியான வண்ணங்களின் கலவைகளை ஒரு ஓவியன் அறிந்து கொள்வதைப் போன்றே ஒரு புகைப்படக் கலைஞனும் ஒளி எவ்வாறு ஒரு கேமராவால் அறிந்து கொள்ளப்படுகிறது என்பதை பல்வேறு முயற்சிகளால் மட்டுமே அறிகிறான்.

சரியான ஒளியானது ஒரு புகைப்படத்தின் உயிர் மூச்சாக அமையக்கூடிய வல்லமை பெற்றது. ஒரு மிகச் சாதரணமான கேமராவில் (Canon Powershot A 620) சரியான ஒளியுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இதோ:

விஷ்வேஷ் ஓப்லா

ஒரு காட்சிப்பொருளின் உயிர் வடிவை ஒளியின் உதவியுடன் வடிவங்களாக சித்தரிப்பதே நல்ல புகைப்படங்களுக்கான அடிப்படை என்று கொண்டால், விலை உயர்ந்த கேமரா என்பது ஒரு ஏமாற்று வேலை தானோ என்றே தோன்றக்கூடும். பல சமயங்களில் நாம் உபயோகிக்கும் கேமரா ஒரு உபகரணம் மட்டுமே, கைப்பேசியில் கூட மிக நல்ல புகைப்படங்களை எடுக்க முடியும். ஆனால், எல்லா எலெக்ட்ரானிக் உபகரணங்களைப் போல கைப்பேசி மற்றும் பாய்ன்ட்-அண்ட்-சூட் கேமராக்களுக்கும் பல வரையறைகள் உள்ளன. இந்த வரையறைகள் ஒரு நிபுணருக்கு ஒரு சில சூழ்நிலைகளில் மட்டுமே கடக்க வேண்டியவைகளாகும்.

விலை உயர்ந்த DSLR கேமரா மற்றும் சில லென்ஸ்களை ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் வாங்கிவிடும் பலருக்கு இந்த வரையறைகளை புரிந்து கொள்ளவும் இயலாது. உயர் தரமான, விலை உயர்ந்த கேமரா மற்றும் அதன் லென்ஸ்கள் மிகச்சிலருக்கே அதற்கான பயனை அளிக்கவல்லது. ஒரு எளிமையான DSLR கேமராவே ஒரு ஆர்வலருக்குப் போதுமானது.

புகைப்படம் எடுக்க விரும்பும் என் நண்பர்களிடம் எல்லாம் நான் ஒன்று கூறுவதுண்டு. நல்ல படங்கள் என்பது பல்வேறு காரணங்களால் அமைவது. ஆனால், கேமராவைக் கொண்டு நீங்கள் உங்களுக்கு அழகாகத் தோன்றும் பொருட்களைத் தொடர்ந்து எடுக்க முயல்வது, அத்தகைய ஓர் ‘அழகான’ முயற்சியின் பயனாலேயே உங்கள் மனதையேனும் அழகுப்படுத்தக்கூடும். ஆகவே, நாம் எடுக்கும் படங்கள் நமக்கே சோர்வளித்தாலும், அதன் மற்ற பலனை எண்ணியேனும் இதை தொடர்ந்து செய்யுங்கள் என்று 🙂 .

விஷ்வேஷ் ஓப்லா

– விஷ்வேஷ் ஒப்லா

பி.கு.: படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மேல் சொடக்கவும்..