
அன்பு என்பார் காதல் என்பார்
ஆனந்தம் கொண்டே உவகை உறுவார் – பின்
அல்லல் என்பார் கவலை என்பார்
ஆத்திரம் கொண்டே அழுது தீர்ப்பார்.
கனவு என்பார் கவிதை என்பார்
கடல் நீரும் இனிக்குது என்பார் – பின்
காயம் என்பார் கசக்குது என்பார்
கடுப்பில் நொந்து வலிக்குது என்பார்.
காம இச்சையில் கண்களும் இழப்பார்
கண்டதும் வந்ததோ காதலே என்பார் – சிறிதும்
தன்னை அறியவோ முயற்சியும் பேணார்
தவறில் உழன்றேதம் கொள்கையும் மறப்பார்.
மையலில் மயங்கி நெஞ்சம் மகிழ்வார்
மன்மத எண்ணமே உன்னதம் என்பார் – பின்
ஓர்வழிக் காதலில் விழுந்து புரண்டு
வையம் பொய்யென வருந்திப் புலம்புவார்.
அழுது தீர்க்காமல், கொள்கை மறக்காமல்
வருந்தி புலம்பாமல், நொந்து வேகாமல் – உலகம்
அன்புமயமாய் மலரவே காதல் செய்வீர்
அனைத்து உயிரினையும் காதல் செய்வீர்.
– தினேஷ் ராம்