நாயகன் தன் காதலை நாயகியிடம் சொன்னானா என்பதுதான் படத்தின் கதை.
வாழையடி வாழையாக மகேஷின் குடும்பத்தினர் போலீஸ் வேலையில் இருக்கிறார்கள். மகேஷிற்கு அவ்வேலையில் விருப்பமில்லாததால் வீட்டை விட்டு வெளியேறி வேலை தேடுகிறான். காதலுக்காக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் அடியாளாகச் சேருகிறான். மமேஷாக அஷோக் நடித்துள்ளார். நன்றாக நடித்திருந்தாலும் அவரது முந்தைய படங்கள் போல் இதுவும் அவருக்கு பெயர் வாங்கித் தருவது கடினம்தான்.
சுசித்ராவாக வாஸ்னா அகமத் நடித்துள்ளார். நாயகன் வில்லனிடமிருந்து தன்னைக் காப்பாற்றியதும் காதலிக்கத் தொடங்குகிறார். பார்த்துப் பழக்கப்படாத சுவாரசியமான காட்சிகள் இல்லாததால், நாயகியின் முகம்கூட படம் முடிந்த பின் நினைவில் நிற்கவில்லை.
படத்தின் அழகான ஆச்சரியம் கெளதமாக வரும் மது ரகுராம்தான். இரண்டாம் பாதியில் அசத்தலாக அறிமுகமாகிறார். இவரது வருகையின் பின்னாவது கதையில் ஏதேனும் திருப்பமோ சுவாரசியமோ ஏற்படுமெனப் பார்த்தால் அதுவுமில்லை. கதையின் போக்கில் அவரும் மற்றவர்களை போலாகிவிடுகிறார்.
எம்.எஸ்.பாஸ்கர் படத்தில் இருந்தும் நகைச்சுவைக் காட்சிகள் படத்தில் மிஸ்சிங். அக்குறையை மிகக் கொஞ்சமாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் போக்குகிறார். வெறும்புலி எனும் பெயர் கொண்ட பாத்திரத்தில் வரும் அவருக்கு, செஸ் விளையாட்டில் அதிக ஆர்வம். அவரது குதிரை எங்கும் எப்படியும் சதுரங்கக் கட்டத்தில் பாய்ந்து எதிரில் விளையாடுபவரின் ராணிக்கு செக் வைக்கிறது.
எழுதி இயக்கி இருப்பவர் K.S.தமிழ் சீனு. ஒற்றை வரிக் கதையில் இருக்கும் தெளிவு திரைக்கதையில் இல்லை. நாயகனுக்கு போலீஸ் வேலை மீதான விருப்பமின்மையை, வளர்த்து கஷ்டப்பட்டுப் படிக்க வைத்த தந்தைக்கு எதிராகச் செய்யும் பெருங்குற்றம் போல் சித்தரிக்கின்றனர். நாயகனும் உருகி மனம் மாறிவிடுகிறான். நாயகனை தியாகி என்று காட்டும் முயற்சியாக இருக்குமோ?
நாயகனோ நாயகியோ தன் காதலை மற்றவரிடம் சொல்லிவிட வேண்டும் என்ற பரபரப்போ எதிர்பார்ப்போ நமக்கு எழவில்லை. அதற்குரிய அழுத்தமான காட்சிகளும் படத்தில் எதுவுமில்லை. நாயகன் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அழகாக இருப்பதால் காதலிக்கிறான்(!?). நாயகியும் சளைத்தவரில்லை. ‘இன்னிக்கு காப்பாத்திட்டேன்.. தினமுமா காப்பாத்த முடியும்?’ என நாயகன் கேட்டவுடன், அத்தனை நாள் பிடிக்காத நாயகன் மீது நாயகிக்கு காதல்(!?) வந்துவிடுகிறது. இவர்கள் காதலை சொன்னால் நமக்கென்ன சொல்லாவிட்டால்தான் நமக்கென்ன?