Shadow

காந்தி வழியில்..

எங்க மாவட்டத்தில் தீவிர மரம் வளர்ப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கலெக்டரால் சட்டமியற்றப்பட்டது. குறைந்த பட்சம் மாவட்டத் தலைநகரில் மட்டுமாவது, தெருவோரம் காலியாக உள்ள இடங்கள், அரசுக்குச் சொந்தமாக உள்ள இடங்கள், யாவையும் மரக்கன்றுகள் நட்டு நகரத்தை பசுமையாக்கி விட வேண்டும் என்று முனைப்போடு சட்டமாகவும் இயற்றினர். அரசு அதிகாரிகள் மும்மரமாக செயல்பட, கலெக்டர் தன் கையால் முதல் கன்றை நட்டு, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அரசு அதிகாரிகள் தான் எப்ப எங்க யாரு  மாற்றலாவர்கள் என தெரியாதே!! அந்த சிங் கலெக்டருக்கு மாற்றல் கிடைச்சது. சில வருடங்கள் கழித்து, சிறப்புக் கலெக்டராக எங்க மாவட்டத்திற்கே ஆய்விற்கு வந்தார். ஒரு நகரம் பசுமையானதற்கு தான் காரணமென மகிழ்ச்சியோடு வந்தவர் கண்களுக்கு சாலையோரங்களில் செடிகள் எதுவும் தென்படவில்லை. கோவத்தில் சூடு தணிவதற்குள் என்ன நடந்தது என கண்டுபிடிக்க முழு வீச்சில் விசாரணை நடத்தினார்.

அரசு ஊழியர்கள் வேலை செய்யும் விதம் பற்றிய கதை ஒன்று வழக்கில் உள்ளதே!! அதே தான் நடந்தது.

1. குழியை வெட்ட வேண்டியவர்கள் பொறுப்பாக வெட்டினார்கள்.

2. கன்றுகளை வைக்க வேண்டியவர்கள் பொறுப்பாக வைத்தார்கள்.

3. கடைசியாக குழிகளில் மண்ணை தள்ளி மூட வேண்டியவர்களும் மூடி விட்டார்கள்.

என்ன நடுவில் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறையைக் கொண்டாடிய பின் பொறுப்பாக மூடியுள்ளார்கள். குழியில் கன்று இருந்ததா, இல்லையா என்பதை கவனித்து மூட அவர்களுக்கு டென்டர் விடப்படவில்லை.

கறை படியாத கைகள் கொண்ட ஊழியர்களை கலெக்டரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பலனை எதிர்பாராமல் வியர்வை சிந்தி வேலை செய்யும் இவர்கள் மீது ஒரு குற்றம் குறை சொல்லி விட முடியுமா? “கடமையை செய்; பலனை எதிர்பாராதே” என இதை தானே கீதையில் சொல்லப்பட்டிருப்பதாக காந்தி மக்களுக்கு எடுத்துரைத்தார். காந்தி காட்டிய பாதையில்(!?) தானே தேசம் செல்கிறது!?

– சிகோரா

Leave a Reply