இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ திரைப்படம் நிறைவுறும் தருவாயை எட்டியுள்ளது. UTV மோஷன் பிக்சர்ஸ் சித்தார்த் ராய் கபூர் தயாரிப்பில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் முன்னர் ‘புறம்போக்கு’ என அழைக்கப்பட்டு வந்தது. தனது முதல் படமான ‘இயற்கை’ மூலம் தேசிய அங்கீகாரத்தை இயன்றதோடு, தனது அடுத்த படங்களான ‘ஈ’ மற்றும் ‘பேராண்மை’ ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் நம் ரசனைகளை ஆக்கிரமிக்க உள்ளார்.
ஒளிப்பதிவாளர் NK ஏகாம்பரம் கண்கவர் ஒளிப்பதிவில், செல்வ குமார் அவர்களின் வியத்தகு கலை இயக்கத்தில், கணேஷ் குமார் படத்தொகுப்பில், கேட்போரை மயக்கும் வண்ணமுள்ள அறிமுக இசையமைப்பாளர் வர்ஷனின் இசையமைப்பில், மிராக்கல் மைக்கல் அவர்களின் சண்டை பயிற்சி அசைவுகளில் தயாராகி வருகிறது.
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய படத்தின் தலைப்பைப் பற்றி விளக்கும் பொழுது இயக்குனர் ஜனநாதன் கூறியதாவது, “குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் படத்தின் ‘புறம்போக்கு’என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமான அர்த்தத்தைக் கொண்டது.
‘புறம்போக்கு’ என்ற சொல் தமிழில்,வழக்கத்தில் கொச்சையாகப் பயன்படுத்தப்பட்டாலும், இது ஆழமான அர்த்தம் கொண்ட வரலாற்று ரீதியாக தமிழர்களின் வாழ்வியலோடு சேர்ந்த சொல்.
புறம்போக்கு நிலம் யாருக்கும் சொந்தமானது அல்ல, மக்களுக்கு பொதுவானது. மக்கள் தாங்கள் வசிக்கும் ஊரில் குடியிருப்புப் பகுதியைத் தவிர்த்து பொதுத் தேவைக்கு நிலங்களை; ஏரி புறம்போக்கு, சுடுகாடு புறம்போக்கு, ஆற்றுப் புறம்போக்கு, மந்தைவெளி புறம்போக்கு, என்று பொது நிலங்களை பதினைந்து வகைகளுக்கும் மேல் பிரித்து வாழ்ந்தனர். மேலும், மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடியிருப்புகளைக் கட்டிக் கொள்வதற்கு நத்தம் புறம்போக்கு நிலங்களையும் விட்டு வைத்தனர்.
இதற்கு மேல் ஊர் பொதுவான சாலைகளுக்கும், பஸ் நிறுத்தம், மேலும் பள்ளிகூடம், மருத்துவனை கட்ட அரசு ‘புறம்போக்கு’ நிலங்களும் இதில் அடக்கம். மலைகளும் பனி சிகரங்களும் துருவங்களும் சர்வதேச கடல் பரப்பும் புறம்போக்கே.. காற்றும் ஒளியும் நிலவொளியும் சிகரங்களும் எல்லையற்ற அண்டவெளியும் புறம்போக்கே… எதுவும் தனியுடைமை அல்ல, பொதுவுடைமை தான்.
குழம்பிப் போன இந்தக் காலகட்டத்தில் பொதுவுடைமை கருத்தை மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தவே ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என்று தலைப்பு வைக்கப்பட்டது” என்று கூறினார்.
‘ஏப்ரல் மாதத்தில் இசையையும் , தொடர்ந்து மே 1 ஆம் தேதி படத்தையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என்ற தலைப்பு மக்களுக்கு பிடித்திருப்பதும், சமுக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருவதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றுக் கூறினார் UTVமோஷன் பிக்சர்ஸ் இணை தயாரிப்பாளர் தனன்ஜெயன்.