Search

காவியத் தலைவன் விமர்சனம்

காவியத் தலைவன் திரைவிமர்சனம்

அரவானைத் தொடர்ந்து வசந்த பாலனிடமிருந்து மீண்டுமொரு பீரியட் ஃப்லிம்.

ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்தா நாடக சபாவை நடத்தி வருகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். அவரது சீடர்களில் ஒருவனான கோமதி நாயகம் ராஜபார்ட்டாக நடிக்க ஆசைப்படுகிறான். ஆனால் மற்றொரு சீடரான காளியப்பனுக்கு அந்த வாய்ப்பை வழங்குகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். பொறாமைக் கனல் கொழுந்து விட்டெறியும் கோமதி நாயகம், சதித் திட்டம் தீட்டி காளியப்பனை ஓரங்கட்டுகிறான். பின் என்னாகிறது என்பதுதான் கதை.

படத்தின் நாயகன் காளியப்ப பாகவதராக சித்தார்த். சூரபத்மனாக நடித்துக் காட்டும்போது அசத்துகிறார். இரண்டாம் பாதியில், இதுநாள் வரை பார்த்துப் பழகிய சித்தார்த்தாகவே திரையில் தெரிகிறார். மலையாள நெடியுடன் வசனம் பேசும் ப்ரித்விராஜ், கோமதி நாயகமாக தன் பொறாமையையும் வன்மத்தையும் கண்களில் தேக்கியபடி படம் முழுவதும் வருகிறார். சித்தார்த் போலில்லாமல் கடைசி வரை கோமதி நாயகமாகவே தெரிகிறார் ப்ரித்வி. சங்கரதாஸ் ஸ்வாமிகளின் வார்ப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் சிவதாஸ் ஸ்வாமிகள் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் நாசர்.

நாடக வாழ்க்கையைப் பற்றிய படம் எனும் பிரம்மாண்டத்தின் மீது மேம்போக்காக காவியத் தலைவனை எழுப்பியுள்ளார். எனினும் இத்தகைய கருவை எடுத்துக் கொண்டதற்கு அவரைப் பாராட்டியே ஆகவேண்டும். நாடக வாழ்க்கையின் சிரமங்கள், பிரபல நடிகர்கள் மீதான மக்களின் அளவு கடந்த ஈர்ப்பு, நாடக நடிகர்களின் குடும்பம் பற்றி என படத்தில் எந்த விவரனையும் இல்லை. ஒரு பீரியட் ஃப்லிம்க்கான சீரியஸ்னஸ் கொஞ்சம்கூட இல்லாத படமாக உள்ளது. சாமான்யன் ஒருவனை காவியத் தலைவனாகும் மற்றுமொரு மசாலா ஒன்லைனில் நாடகம், காதல், சுதந்திரப் போராட்டம் என்று மானே தேனே தூவப்பட்டுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் உடந்தை. இந்தத் திரைப்படம் நிகழ்வதாகக் காட்டப்படும் காலத்தின் இசையில் ஒரே ஒரு பாட்டு கூட படத்தில் இல்லை. பெரும்பாலானோர் கேட்டிருக்கக்கூடிய, ‘மன்மத லீலைகள் வென்றார் உண்டா?’ என்ற பாகவதரின் பாடலே, ஸ்ரீலஸ்ரீ சண்முகானந்தா நாடக சபைக்கு பிற்பட்டதுதான். அந்த சபாவின் சம காலத்தவரான என்.எஸ்.கே.வின் பாடல்களும் இணையத்தில் காணக் கிடைக்கிறது. ஏன் சித்தார்த் ஏற்றிருக்கும் பாத்திரம்  எல்.ஜி.கிட்டப்பாவினுடைய சாயலாகக் கொள்ளலாம். கிட்டப்பாவின் பாடல்களும் கூட யூ-ட்யூப்பில் காணலாம். ஆனால் ரஹ்மானோ பாடல்களை  எவ்ளோ மாடர்னைஸ் செய்ய முடியுமோ அப்படி அருமையாக செய்து ரசிக்க வைக்கிறார். படத்தின் மிகப் பெரிய பலம் ரஹ்மானின் பின்னணி இசை. கதையைச் செலுத்தும் முக்கிய காரணியாக இசை உள்ளது.

Kaaviya Thalaivan Tamil reviewநாடகம்தான் தன் வாழ்க்கை என்றிருக்கும் காளியப்பன், மகாராஜாவின் மகளைக் காதலிக்கிறானாம். அதுவும் மோதலில் தொடங்கும் காதல். சுவரேறிக் குதித்து, இளவரசி மட்டுமே இருக்கும் அரச மாளிகைக்குள் சுலபமாக நுழைந்து காதல் புரிகிறான். அப்படியொரு காவலற்ற அந்தப்புரம் எந்த சமஸ்தானத்தில் உள்ளதோ? இதே பிரச்சனையை, காதலன் படத்தில் வசந்தபாலனின் குருவான ஷங்கர், ஓர் எலுமிச்சையைக் கொண்டு சுவாரசியப்படுத்தியிருப்பார். ஆனால், வசந்தபாலனின் நாயகன் நேராக நாயகியின் அறைக்குக் கச்சிதமாகச் செல்கிறார். கத்தி படத்தில் விஜய்க்குக் ப்ளூ பிரிண்ட் கிடைப்பது போல், இளவரசியின் அறை குறிக்கப்பட்டிருக்கும் அரண்மனையின் ப்ளூ பிரிண்ட் காளியப்பனுக்குக் கிடைக்கிறது என்று காட்டினாலாவது கொஞ்சம் நம்பகத்தனமை கூடும். அதுவும் தினம் சென்று சல்லாபம் செய்கிறார். நாடக சபாவில் இருப்பது என்பது நாடோடி வாழ்க்கைக்கு நிகரானது. கலையை லட்சியமாகக் கொண்ட நாடோடிக்கு இளவரசி மீது காதல் எந்த நம்பிக்கையில் வருகிறது?

கோமதி நாயகம், திடீரென துப்பாக்கியும் கையுமாக ஒரு காட்சியில் நிற்கிறான். அவனுக்கு ஏது துப்பாக்கி? இதே போல் பிரச்சனை நடிகவேள் எம்.ஆர்.இராதாவுக்கும் அவர் நாடகத்தில் இருக்கும்போது வந்தது. தன் புகழை என்.எஸ்.கே. ‘ராபெரி’ செய்கிறார் என கோவப்பட்ட எம்.ஆர்.இராதா, உளுந்தூர்பேட்டையில் ஒரு ஆளைப் பிடிச்சு துப்பாக்கி வாங்கி, என்.எஸ்.கே.வைச் சுட பயிற்சியும் எடுத்ததாக ‘சிறைச்சாலை சிந்தனைகள்’ புத்தகத்தில் பதிந்துள்ளார். ஆனால் கோமதி நாயகத்துக்கோ, எந்த ஆளையும் பிடிக்கும் அவசியமில்லாமல் திடீரென துப்பாக்கி கிடைக்கிறது.

விக்ரமன் படத்தில் ஒரே பாட்டில் நாயகன் பணக்காரராவது போல், ஒரே பாட்டில் சுதேசி நாடகங்கள் போட்டு பிரபலமாகிறார் காளியப்ப பாகவதர். அதே பாட்டில் நொடிந்து போகிறார் கோமதி நாயகம். ஆனால் அதற்கு இரண்டு காட்சிகள் முன், சுதந்திரம் பற்றிப் பேசியதற்கே காவல் நிலையத்தில் வைத்து லாடம் கட்டி வெளுக்கின்றனர். பின் காளியப்பன் சிறையில் இருந்து வந்து, பரங்கியரின் துணிகளைக் கொளுத்துகிறான் தொடர்ந்து சுதேசி நாடகங்கள் நடிக்கிறான். போலிஸ் அரெஸ்ட் செய்ய வருகிறது. ‘வாரண்ட் இருக்கா?’ எனக் கேட்கிறான் காளியப்பன். அடப்பாவி.. முன்னவே கூப்பிட்டுப் போய் கும்மும்போது இதைக் கேட்டிருக்கலாமே என நமக்குத் தோன்றுகிறது. ஆனால் சிறைச்சாலையில் கிடைத்த ஞானம் அது என இயக்குநர் நம் யூகத்துக்கு விட்டிருப்பார் போல! சாமான்யனாக இருந்த காளியப்பன் சுதேசி நாடகங்கள் போட்ட பின் காவியத் தலைவன் ஆகிறான். காவியக் கலைஞன் அல்ல தலைவன்!

Kaaviya Thalaivan Tamil reviewபடத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் இளவரசியாக வரும் அனைகா சோட்டி. காதலிக்கவும், காதலிக்கப்படவும். மற்றொருவர் வடிவு எனும் வடிவாம்பாளாக வரும் வேதிகா. இவர் ஒரு தலையாக காதலிக்க மட்டும். படத்தின் காவியக் காதலுக்கு (!?) வித்திடுபவர். இவர் பெறும் பட்டத்தினைக் கொண்டு இவரது பாத்திரம் கே.பி.சுந்தராம்பாளின் உருவகம் எனக் கொள்ளலாம்.   ஆனால் வசந்தபாலன் காளியப்பனுக்கும், வடிவாம்பாளுக்கும் இடையேயான உறவை ஆழமாக உணர்த்தத் தவறிவிட்டார். அங்காடித் தெருவில், ஜெயமோகன் தன் வசனங்களால் நிகழ்த்திய மாயத்தை இப்படத்தின் சம்பாஷனைகள் மூலம் செய்யத் தவறிவிட்டார். அதிலும் காளியப்பனும் கோமதி நாயகமும் பேசி ஒரு முடிவுக்கு வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.

படம் தொடக்கம் முதலே எந்த ஒன்றையும் அடியொற்றிப் பயணிக்காமல் அலைக்கழிக்கிறது. கலையுணர்வு, பொறாமை, காதல், கோபம் (குரு சாபம் – சிஷ்ய சாபம்), வஞ்சகம், வன்மம், நாட்டுப்பற்று, காவியக் காதல் (!?), தியாகம் (!?) என ஒன்றில் இருந்து ஒன்றாக திரைக்கதையின் குவிமையம் மனக்குரங்கு போல தாவியபடி உள்ளது. வாரனாசி படித்துறையைக் காட்டியதும் தெரிந்து விடுகிறது படத்தின் க்ளைமேக்ஸ். தினமும் வெண்முரசில் விழிக்கும் ஓர் இயக்குநர், தன் படைப்பின் இறுதி காட்சியில் ஓர் அறத்தைத்தானே முன் வைப்பார்?