
குப்பன் சுப்பனெல்லாம் தங்களை உயிர் நண்பர்கள் என சொல்லிக் கொள்ளும் காலம் இது. இந்தத் துரித யுகத்தில் பெற்றவர்களையே மறந்து விடுகின்றனர். ஆனால் சில விதி மீறல்கள் எங்கும் அனைத்து காலத்திலும் இருக்க தான் செய்யும். அப்படி ஒரு அதிசயம் தான் காவிய வித்தகர்களான காந்தப்பன்னும், சாந்தப்பன்னும். அவர்களது முதல் சந்திப்பு காற்றில் ஜவ்வுத்தாள் பை பறப்பது போல ஒரு சாதாரன சந்திப்பு தான். ஆனால் மெல்ல அது வரலாறாய் மாறி வருகிறது. அவர்களின் முழு வரலாறை திரட்ட முடியாத அபாக்கியசாலியாக இருக்கின்றேன். இக்காவியத்தின் நாயகர்கள் விளை மண்ணில் இருந்து பிடுங்கிய மரவல்லி கிழங்கு போல் இன்னும் தரணி தனில் வலம் வருவதால், இக்காவியத்தின் ஆரம்ப அத்தியாயங்களை மட்டுமே அளிக்க முடியும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு வளர வளர காவியமும் வளரும் என நம்புவோமாக!
காந்தா சாந்தா. இது தான் அவர்களின் சுருக்கம். உலகம் வெப்பமயம் ஆவதற்கே இவர்களுக்குள் இருக்கும் நட்பு தான் காரணம் என சில வேலையில்லாத அறிவியல் வல்லுநர்களின் ஆணித்தரமான கூற்று. அவர்கள் சொல்வது யாதெனின் காந்தாவும், சாந்தாவும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இரு துருவங்கள். இவர்களுக்குள் ஏற்படும் நெருக்கம் தான் உலகில் ஏற்படும் பேரழிவுகளுக்கு காரணம் என்கின்றனர். நியூட்டனின் மூன்றாம் விதியை இவர்களது நட்பு உறுதி செய்கிறது எனவும் வாதாடுகிறார்க்ள். இதைப் பற்றிய முழு விவரங்கள் இன்னும் அவ்வறிஞர்கள் வெளியிடவில்லை. அது வரை நாம் தப்பித்தோம்.
வள்ளுவர் கணித்த நட்பின் இலக்கணம் இவர்களுக்கு பொருந்தாதது பலருக்கு பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்து வருகிறது. மனமொத்து நட்பு மலருவது தெய்வ புலவர் வாழ்ந்த காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் ஷேக்ஸ்பியர் சொல்வது போல உறவுகளின் பின்புலமாய் சுயநலமே பிரதானமாய் உள்ளது என்பதே நிருபிக்கப்பட்ட உண்மை. ஆனால் இதை அனைவரும் மறுக்கவே செய்வர். நமது நாயகர்களும் தங்களுக்குள் இருப்பது ‘தெய்வீக’ நட்பே என்று இது நாள் வரை நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
காந்தா. இவரைப் பற்றி தத்து பித்து என ஏதாவது இரண்டு வரிகள் சொன்னாலே கலிங்கத்துபரணி எழுதிய செயங்கொண்டாருக்கு நடுக்கத்தில் வியர்க்க ஆரம்பித்து விடும். வீட்டிற்குள் காந்தியவாதியாகவும், வெளியில் ஹிட்லர் போலவும் நடந்துக் கொள்வார். ‘முதல் நாளே ரஜினி படத்துக்கு கூட்டிட்டுப் போகலைன்னா.. நான் சாப்பிடாம சாகப் போறேன்’ என்று வீட்டில் காந்திய வழியில் உண்ணாவிரதம் இருப்பார். ‘சரி போய் தொலையட்டும் சனியன்’ என்று வீட்டிலும் அவருக்கு கொம்பு சீவி விட்டுவிடுவார்கள். பணம் வேறு அவர்கள் வீட்டில் குன்றென குவிந்துள்ளது. அந்தத் தைரியத்தில் வெளியில் தனது அதிகாரத்தை பணம் கொண்டு நிலைநாட்ட தலைக்கீழாய் குதிப்பார். குதிப்பார் என்றவுடன் தான் அவரைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயம் நினைவிற்கு வருகிறது. காந்தா ஒரு அபூர்வமான நடன கலைஞர் என்பது இங்கு பலருக்கு தெரியாது. அவர் எத்தகைய அபூர்வ நடன கலைஞர் என்று தெரிந்தால், இதை படித்துக் கொண்டிருக்கும் நீங்களே ஒருமுறை ஆடி விடுவீர்கள். எதற்கும் இதய பலவீனமானவர்கள் அடுத்த வரியை படிக்காமல் தவிர்ப்பது நலம். பல்லால் நடனமாடும் அபூர்வ கலைஞர் உலகிலே நமது காந்தா ஒருவர் தான். பொய்யும், பித்தலாட்டமும், பச்சை வர்ணம் தீட்டப்பட்ட ஆவேச சொற்களும் அவரது பல்லிடுக்கில் போடும் நர்த்தனத்தை காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு அவை தூக்கலாக இருக்கும்.
சாந்தா. சகல உலகங்களிலும் எப்படி சலித்து தேடினாலும் இவரை போல் மற்றொருவர் காண கிடைக்காத கடவுளின் மிக அற்புதப் படைப்பு. சிரசின் உள்ளும், புறமும் அவருக்கு பளபளவென விபூதி போட்டு துடைத்த பழைய பித்தளை சொம்பு போல் இருக்கும். அறிவில் அவர் முழு மதி போல. தனக்கான சிந்தனைகளை மற்றவரிடமிருந்து கடன் பெற்றுக் கொள்வார். பலருக்கு புரிந்திருக்கும். புரியாதவர்களுக்காக சொல்கிறேன். சாந்தாவின் மூளையை ஆட்டுவிப்பது காந்தா. இந்த ஆட்டுவித்தலே நட்பாம். இத்தகைய நட்பில் தன்னிகற்றவர் அவர்கள் மட்டும்.
சாந்தாவிற்கு ஒரு விசித்திர பழக்கம். வாயை திறந்தால் மூடுவதில்லை என்றொரு தீர்மானம். அவரிடம் தப்பி தவறி அவரது பெயரை கேட்டு விட்டால் அவ்வளவு தான். சன் தொலைக்காட்சி செய்திகளின் நடுவில் போடப்படும் விளம்பரங்களுக்கு முன் வரும் எங்கே? ஏன்? எப்படி? எதற்கு? யார்? எப்பொழுது? என சகலமும் நமக்கு தேவையோ தேவை இல்லையோ அனைத்தையும் வரிசை கிரமமாக சொல்லி வைப்பர். அவரது பெயர் கேட்டவரின் கண்ணில் ‘ஈ’ சுழலும். சராசரி மனிதர்களை விட நிமிடத்திற்கு ஆயிரம் வார்த்தைகள் அதிகம் பேசுவார். ஒருவரிடம் உரிமையை எடுத்துக் கொள்வதில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளை போன்றவர். அவரின் அப்பாவித்தனமான (உண்மையில் அது அடப்பாவித்தனம்) சுபாவங்களை பொறுத்துக் கொண்டிருப்பது மிக பெரிய விஷயம். அவர் பக்கத்து வீட்டில் இருக்கும் நண்பனை காண செல்லும் வழியில் நூறு பேர்களிடமாவது நடுவில் பேசி விடுவார். அவரை தெரியாத ஆளே அவர் வாழும் ஜில்லாவில் இருக்க முடியாது. ஒரு ரகசியம் அவர் காதில் நுழைந்தால் அதை கட்டிக் காப்பதில் மிகவும் சமார்த்தியசாலி. தனியாக ரகசியத்தை காப்பாத்த முடியுமோ என்னவோ என பொறுப்பாக, ரகசியத்தை பாதுகாக்க அதை அவரிடம் பேசுபவர்களிடம் அனைவரிடமும் சொல்லி வைப்பார். ஒருவர் வாழ்வில் எவ்வளவு ரகசியங்கள் தான் தனியாகவே சுமப்பது?
நம்ம காந்தாவிற்கு 108 கிறுக்கு என்ற உண்மை உலக பிரசத்தி. இப்படித் தான் ஒரு நாள் அவரது குட்டு திவ்யதாஸ் என்பவரால் வெளிச்சத்திற்கு வந்தது. நிறைய பணம் இருந்தும் காந்தா அப்பொழுது ஒரே ஒரு செல்பேசி தான் வைத்திருந்தார். ஆனால் சில பல சிம் வைத்திருப்பார் போல. அவர் திவ்யதாசிற்கு புது நம்பரில் இருந்து போன் செய்து, மிரட்டுவது திட்டுவது என தொடை தெரிய வேட்டி கட்டும் அரசியல் குண்டர்கள் போல் வீர வசனங்களை ஆள் வைத்து பேச வைத்துள்ளார். ஆனால் பாவம் காந்தா கையும், களவுமாக மாட்டிக் கொண்டார். பிறகு திவ்யதாசோடு ஒரு கூட்டம் சேர்ந்துக் கொண்டு, காந்தாவின் அடக்குமுறையை அலட்சியம் செய்ய ஆரம்பித்து விட்டது. வீட்டில் இருப்பவர்கள் என்றால் உண்ணாவிரத ஆயுதத்தை கையில் எடுத்து பணிய வைத்திருப்பார். ஆனால் காந்தாவினுடைய சாம்பாரில் போடும் வஸ்து எதுவும் திவ்யதாசிடம் வேகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ‘டாய்.. உன்ன ஆள வச்சு தூக்கிடுவேன்’ என்று இறங்கியும் பார்த்து விட்டார். திவ்யதாசும் அவரது நண்பர்களும் கொஞ்சமாவது மதித்து இருக்கலாம் காந்தாவை. பாவம் படிப்பவர்களாவது புரிந்துக் கொள்ள வேண்டும், காந்தாவின் மனம் என்ன பாடுப்பட்டிருக்கும் என்று!!
பிறகு தான் நல்லவனாக மாறியதாக காட்டிக் கொள்ள, காந்தா திவ்யதாஸ் முன்பு தலைகீழாக எல்லாம் நின்று பார்த்து விட்டார். என்ன கிரகக் கோளாறோ தெரியவில்லை, திவ்யதாஸ் ஒரு படி மேல போய் லீகலாக காந்தாவை பொது மேடையில் எதிரியாக அறிவித்து விட்டார். புகைய ஆரம்பித்து விட்டது. காந்தாவிற்கு வாயும், வயிறும். அவரது இயலாமையை தனது அதி அற்புத வாய நடனத்தால் மீண்டும் ஆற்றிக் கொண்டார். காந்தா சோர்வில் விழும் பொழுது, இரு கைகள் அவரை தாங்கியது. அங்கே கருணையே வடிவாக சாந்தா.
‘ஆஹா.. நீ தான்டா நான் தேடிய உத்தம அடிமை. நீ ஒருத்தவன் போதும்டா. உலகமே என்னை எதிர்த்தாலும் உன் முதுக விட்டு நான் இறங்க மாட்டேன்’ என்று முருங்க மரத்தை பிடித்த வேதாளம் போல் சாந்தாவை காந்தா அன்று ஆக்கிரமித்தது. தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டதை தெரியாமல் சாந்தாவும் காந்தாவின் கைப்பாவையாக முற்றிலும் தன்னை ஒப்படைத்து விட்டது. காந்தாவை நாம் சும்மா சொல்லக் கூடாது. அடிக்கடி ஓரத்தில் சாந்தாவை கவனித்துக் கொண்டது. காந்தா ஒருவரை பற்றி சொன்னால், சாந்தாவிற்கு அது தான் வேத வாக்கு. காந்தா ஒருவனை முறைத்தால், சாந்தா கோபமாக வாலை அசைக்க தொடங்கி விடும். இதற்கு பெயர் தான் அவர்களுக்குள் இருக்கும் ‘வேவ்ஸ்’ என சொல்லிக் கொள்கிறார்கள்.
– தினேஷ் ராம்
TAGதினேஷ் ராம்