கிருஷ்ணப்பிள்ளை, அவரது மனைவி, அவரது மருமகள் மூவரும் தொலைக்காட்சியில் ஆர்வமாக மதிய உணவினையும் மறந்து தொடர் ஒன்றினை பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர, நான்காவதாக ஒருவரும் யாருக்கும் தெரியாமல் தொலைக்காட்சியைப் பார்த்தார். அது தொட்டிலில் இருந்த கிருஷ்ணப்பிள்ளையின் பேத்தி. கால்களால் நெம்பி நெம்பி தலையை மட்டும் வெளியில் நீட்டி பார்த்துக் கொண்டிருந்தது. கருவில் இருக்கும் பொழுதே அத்தொடரின் கதாநாயகியோட வேதனையும், போராட்டமும் குழந்தைக்குத் தெரியும். பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்த பொழுது கூட, அறையில் இருந்த தொலைக்காட்சியில் கிருஷ்ணப்பிள்ளையின் மருமகள் விடாமல் தொடரினைப் பார்த்தாள். தொடரினால் ஏற்பட்ட பாதிப்புகள் குழந்தையை சென்று அடைந்தன. ஒரு பெண்ணின் மனம் மற்றொரு பெண்ணிற்கு தான் புரியும் என்பதற்கேற்ப மருத்துவர் பிரசவ தேதி செவ்வாய்க்கிழமை என்று குறிப்பிட்டு இருந்தும், தாயின் மனதை புரிந்து ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே கருவிலிருந்து வெளிநடப்பு செய்தது குழந்தை. அத்தகைய குழந்தை தொட்டிலில் இருந்து தலையை நீட்டித் தொடரினை பார்த்தது என்பது கற்பனை கலக்காத அப்பட்டமான உண்மை.
‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு தனி திறமை இருக்கும். உனக்கும் இருக்கும். அது என்னென்னு உனக்குள்ள தேடு’ என்று கதாநாயகி கதாநாயகனுக்கு அறிவுறைத்தாள். உடனே விளம்பரங்கள் வந்தன. பல நிமிடங்களுக்கு பின் மீண்டும் தொடர் தோன்றி, கதாநாயகனின் முகத்தை பல்வேறு கோணங்களில் காட்டி விட்டு முடித்து விட்டனர். பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணப்பிள்ளைக்கு பெருங்கோபம் வந்து விட்டது.
‘இன்னிக்கு என்ன போட்டுட்டானுங்க பெருசா.. இதுல ஆயிரம் விளம்பரம் வேற நடுவுல’ என்று புலம்பிக் கொண்டு வேகமாக எழுந்தார். ஆனால் இந்த கோபத்தை எல்லாம் மறந்து நாளைக்கும் பார்ப்பார். மதிய உணவினை முடித்து விட்டு படுத்தால் தூக்கம் வரவில்லை. கதாநாயகி சொன்னது காதில் கேட்டது.
பள்ளி, கல்லூரி, கல்யாணம், வேலை, ஓய்வு- இதில் எங்கே தனி திறமை இருக்கிறது என்று யோசிக்களானார். சிறு வயதில் நீச்சலில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். கிணறு, கால்வாய், குளம்,ஆறு, கடல் என்று ஒன்றையும் விடுவதில்லை. அதற்காக பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றிருக்கார். நீச்சல் தான் தனது தனி திறமை என்ற நினைப்பிலேயே தூங்கி விட்டார்.
மாலை ஆறு மணிக்கு பக்கத்து வீட்டம்மாள் அழுதுக் கொண்டே வந்தாள். ‘அம்மா…என் பையன் கிணத்துல விழுந்துட்டானே! நான் என்ன பண்ணுவேன்? எனக்கு பயமா இருக்கு’ என்று கிருஷ்ணப்பிள்ளையின் மனைவியை கட்டிக் கொண்டு அழுதாள். தூங்கிக் கொண்டிருந்தவரின் காதில் இவையெல்லாம் விழுந்தது. கிருஷ்ணப்பிள்ளை எழுந்து மின்னல் வேகத்தில் ஓடி, சுவர் ஏறி குதித்து, பக்கத்து வீட்டு கிணற்றை எட்டிப் பார்த்தார். பாதி கிணறு தான் தெரிந்தது. மீதி இருட்டாக இருந்தது. மூக்கு கண்ணாடி எடுத்து வர மறந்து விட்டார். பையனோட உயிர் தான் முக்கியம் என்று எதுவும் யோசிக்காமல் குதித்து விட்டார்.
கிருஷ்ணப்பிள்ளைக்கு பிரக்ஜை வந்ததும் உடலெங்கும் வலியை தான் முதலில் உணர்ந்தார். மெதுவாக கண்ணைத் திறந்தால் மருத்துவமனையில் இருப்பது புரிந்தது.
‘அந்த பையன் எப்படியிருக்கான்?’ என்று மனைவியிடம் கேட்டார் கிருஷ்ணப்பிள்ளை.
‘அவனுக்கு என்ன! நல்லா தான் இருக்கான்’ என்றார் கோபமாக.
அருகிலிருந்த மகன் குனிந்து, ‘ஏம்ப்பா இப்படி இருக்கீங்க? அவன் ஏதோ ஒரு ஊர்ல, ஹாஸ்டலுல இருக்கிற கிணத்துல விழுந்ததற்காக, நீங்க காப்பத்துறேன்னு இங்க விழுந்து இப்படி ஹாஸ்பிட்டலுல இருக்கீங்களே! அதுவும் அந்த கிணத்துல தண்ணியும் இல்ல. சும்மா வீட்ல இருக்கலாம்னு இல்லாம, இப்படி நீங்களும் கஷ்டப்பட்டுக்கிட்டு, கூட இருக்கிற எங்களையும் கஷ்டப்படுத்துறீங்களே!?’ என்று குரலில் கோபத்தைக் காட்டாமல் சாந்தமாக கேட்டான்.
இதுவே கிருஷ்ணப்பிள்ளை பிறந்த கிராமமாக இருந்திருந்தால், பக்கத்து வீட்டு பையன் எங்கு படிக்கிறான் என்றும், கிணற்று நீர் பற்றியும் தெரிந்திருக்கும். இதெல்லாம் நகரத்திலேயே பிறந்து வளர்ந்த கிருஷ்ணப்பிள்ளையின் மகனுக்கு எப்படித் தெரியும்?
அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை. கிருஷ்ணப்பிள்ளை எது செய்தாலும் ஏறுக்கு மாறாகவே எல்லாம் நிகழ்கின்றன.
– தினேஷ் ராம்