Search

“குக்கூ” இசை – ‘வட்டியும் முதலும்’ ராஜூ முருகன்

Cuckoo

இந்தப் புகைப்படத்தில் கிராமஃபோனுக்குப் பக்கத்தில் நிற்கிற முருகேசண்ணனை நீங்கள் பார்க்க வேண்டும். குழந்தை மாதிரி திறக்காத கண்களும் நம்மைத் திறந்து வைக்கிற சிரிப்புமாக இருக்கிற முருகேசண்ணன். மூர்மார்க்கெட்டில் கடை நடத்துகிறார். இந்தக் கதையை எனக்கு பரிசளித்தவர்களில் அவரும் ஒருவர். படத்தில் ஒரு மாண்டேஜில் தோன்றுவதற்காக அவரது மனைவியையும் அழைத்தேன். காட்சி எடுப்பதற்கு முன்பாக மனைவியின் கைகளைத் தடவிப் பார்த்தவர், “ஏய்.. வளையல் போடல..” என்றபடி வளையலை வாங்கி மாட்டிவிட்டார். அது நம்மால் யோசிக்கவே முடியாத அன்பின் எட்டாவது வண்ணம்!

மாதவரத்தில் பார்வையற்றவர்களுக்கான பயிற்சி வகுப்பில் இளங்கோ. “சார்… ஒங்க முன்னாடி தம்மடிச்சா மரியாத இல்ல… திரும்பி நின்னுக்குங்க சார்…” எனச் சிரித்தான். கழுத்து நரம்பு இழுக்க, இளையராஜாவாகவே மாறி, ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது…’ பாடினான். அவனது சிரிப்பை நீங்கள் ஒருமுறை பார்க்க வேண்டும்.

Raju-Muruganபெங்களூர் ஆசிரமம் ஒன்றில், நான் போனபோது ரெக்கார்டரில் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு கேட்டுக் கொண்டிருந்த நந்தினி. முதல் சந்திப்பிலேயே முதுகைத் தடவிப் பார்த்து, “என்ன சார்.. நைய்யினு இருக்கீங்க… பீரைப் போடுங்க…” என்ற ரவியண்ணன். முதல் நாள் பார்த்தபோது பிச்சையெடுத்தபடியும், மறுநாள் பார்த்தபோது பூ விற்றாபடியுமிருந்த திருநங்கை ரோகிணி… எல்லோரையும் நீங்கள் இன்னொரு முறை பார்க்க வேண்டும்.

விகடனில் வேலை பார்த்த நல்ல நாளொன்றில் சந்திக்க நேரிட்ட பார்வையில்லாத அற்புதன் ஒருவன் எனக்குச் சொன்ன கதைதான் ‘குக்கூ’. அன்பையும் சிரிப்பையும் துயரத்தையும் அவர்களைப் போல கொண்டாடுபவர்கள் யாருமில்லை என்பதை அப்போதுதான் அறிந்தேன். அவர்கள் முன்னால் என்னை ஒரு பிச்சைக்காரனாகவே உணர்கிறேன் எப்போதும். தேவைகளும் அபத்தங்களும் அரிதாரங்களும் இல்லாத இந்தக் காதலை அந்த எளிய மனிதர்கள்தான் எனக்குப் பிச்சை போட்டார்கள். அவர்களது அன்பின், வாழ்வின் சிறுதுளிதான் ‘குக்கூ’.

தீரவே தீராமல் நீளும் நமது காதல் ரயிலில் இது இன்னொரு பெட்டி, இந்தப் பெட்டி முழுவதும் காதலின், பிரியத்தின் இசை நிறைந்து கிடக்கிறது. கேட்பதற்கு நீங்கள் வரவேண்டும் ஒருமுறை..!

நிறைய ப்ரியங்களுடன்,
ராஜூமுருகன்