இரண்டு சொற்களாலான தலைப்பிலேயே படத்தின் முழுக் கதையும் சொல்லிவிட்டார் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன். படத்தில் மிகக் குறைவான கதாபாத்திரங்கள், நான்கைந்து லோக்கேஷன்கள் தான் என்றாலும் மிக நிறைவான படம். இவ்வாறான நேர்த்தியான படங்களின் வரவு அதிகமாக வேண்டும் என்ற ஆவலாதியை ஏற்படுத்துகிறது.
இயக்குநர் மணிகண்டன் ஒதுங்கி நின்று நம் மனதோடு அழகாய் கண்ணாமூச்சி விளையாடுகிறார். இளம்பெண் ஒருத்தி இறந்து விடுகிறாள். அவரைக் கொன்றது யாரெனச் சொல்லாமல் நம் முடிவுக்கே படத்தின் முடிவை விட்டுவிடுகிறார். குற்றவாளி யாரெனத் தெரியாத அக்கொலை வழக்கிற்கு, அருண் என்பவனை காவல்துறையினர் பலிகடாவாக்குகின்றனர். ஆனால், சந்தேகத்தின் பலனை அருணுக்குப் பார்வையாளர்களும் அளித்துவிடக் கூடாதென, மக்களின் கூட்டு மனசாட்சிக்கு ஒரு ‘செக் (check)’ வைக்கிறார். அருண் பணக்காரத் திமிர் கொண்டு பெண்கள் பின்னாடி சுற்றும் ஊதாரி இளைஞனெனச் சொல்லி விடுகிறார். இந்த ஒரு காரணம் போதாதா அவனைக் குற்றவாளி எனப் பொதுப்புத்தியில் கொந்தளித்துத் தீர்ப்பளிக்க?
அருண் மீது வராத பரிதாபம் ரவி மீது வரும்படி மிக மிக அழகாக காட்சிகளை வைத்துள்ளார் ஒளிப்பதிவாளருமான மணிகண்டன். ரவிக்குக் கண்களில் ஒரு குறை. டன்னல் விஷன் (Tunnel vision) – அதாவது பக்கவாட்டுகளைப் பார்க்க முடியாத நேர் கொண்ட பார்வை. ஒரு சின்ன பைப்புக்குள் கண்களை நுழைத்துப் பார்த்தால் எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் ரவிக்குத் தெரியும். வார்த்தைகளை விரயம் செய்யாமல் அழகாகக் காட்சி ரூபமாகவே புரிய வைத்து விடுகிறார் இயக்குநர். ரசிகனின் புத்திசாலித்தனத்தை மெச்சும் (நம்பும்) இயக்குநர் தமிழ் சினிமாவிலும் ஒருவருண்டு என்பது மிக உவப்புக்குரிய விஷயம்.
ரவி தன்னை அரைக் குருடன் என நம்புகிறான். அவனிடம் ஒரு பார்வையற்ற பெண், சாலையைக் கடக்க உதவுமாறு கேட்கிறாள். இப்படியாக, ரவியின் மனநிலையை மிக அழகாகப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறார். ரவியால் எப்படி சென்னையின் அவசர அதி வேக போக்குவரத்தில் வண்டியோட்ட முடிகிறது என நமக்குப் பதற்றம் எழுகிறது. ஒரு காட்சி வருகிறது படத்தில், ரவி ஒருவரைக் காண சாலையில் அமர்ந்திருக்கிறான். அவனைப் போலவே ஒரு நாயும் எதிர் சாரியில் இருக்கிறது. பைக்கில் ரோந்து வரும் காவல்துறையினர், “இங்கெல்லாம் உட்காரக் கூடாது” என ரவியை அங்கிருந்து செல்லச் சொல்கின்றனர். அந்தச் சாலையில், நாய்க்கு இருக்கும் சுதந்திரம் கூட சாமானியனுக்கு இங்கில்லை.
காத்திருப்போர் பட்டியலில் 331வது ஆளென டோக்கன் போட முழுப் பணத்தையும் கட்டச் சொல்கிறது தனியார் மருத்துவமனை. ‘சரி எப்போ ஆப்ரேஷன் செய்வீங்க?’ என ரவி கேட்பதற்கு, ‘2 வருஷம் ஆகலாம். சிலருக்கு டோனார் கிடைக்காமலும் போயிருக்கு’ என பதில் சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம். இப்படி, படம் நெடுகே சம கால அவலங்கள் இழையோடிக் கொண்டே இருக்கிறது. ஜோக்கர் படம் போல் அதை வார்த்தையாக்காமல், காட்சிகளாக வைத்துள்ளதே மணிகண்டனின் சிறப்பு. ஜோக்கர் குருசோமசுந்தரம், இப்படத்தில் ஒரு வக்கீலின் அசிஸ்டென்ட்டாக வருகிறார். மனிதருக்கு எந்த வேடமும் பொருந்தும் போல! ‘இதுதான் அருண். உங்களுக்கு முன்பே தெரியுமே!’ என்ற சாதாரண வசனத்தை அவர் சொல்லும் தொனிக்குத் திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது.
எது குற்றம்? அல்லது எவை எல்லாம் குற்றம்? குற்றம் எப்படி தண்டனை ஆகும்? பொறுப்பற்று இருப்பதற்கு அருணுக்குச் சிறையும், செகரட்டரியோடு உறவு வைத்துக் கொண்டதற்கு விஜய் பிரசாத்துக்கு 30 லட்சத்து 20 ஆயிரம் இழப்பும், தேவைக்காக தன் ‘நேர் கொண்ட பார்வை’யை இழக்கும் ரவிக்குக் கருமையான வாழ்நாள் உறுத்தலுமே தண்டனை. ஓர் இதிகாசத்துக்குரிய காவியத்தன்மையோடு கதாபாத்திரங்களையும், அவர்களின் விதியையும் கட்டமைத்து வியக்க வைக்கிறார்கள் திரைக்கதை அமைத்துள்ள ஆனந்த் அண்ணாமலையும், மணிகண்டனும். பாடல்களற்ற படத்திலும், ரவியின் மனப்போக்கை அழகாக தன் பின்னணி இசையின் மூலம் கொணர்ந்துள்ளார் இளையராஜா.
அதே போல் வியக்க வைக்கும் இன்னொரு நபர் ரவியாக நடித்துப் படத்தைத் தயாரித்திருக்கும் விதார்த். முழுக் குருடனாகி விட்டால் என்னாவது என்ற அவரது பதற்றத்தைப் பார்வையாளர்களுக்குக் கச்சிதமாகக் கடத்துகிறார். மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் சில காட்சிகள் வந்தாலும் பளீச்சென மனதில் பதிகிறார். இறைவியில் மலர்விழியாகக் கலக்கிய பூஜா தேவார்யா, அதற்கு நேர் எதிரான பாத்திரத்தில் வந்து கவர்கிறார். இன்ஸ்பெக்டராக மாரிமுத்து, விஜய் பிரசாத்தாக ரஹ்மானும் கச்சிதமான தேர்வுகள். ‘நேர் கொண்ட பார்வை’யுடைய ரவியை நேசிக்கும் தனியனாக நாசர் சிறிது நேரம் வந்தாலும் நிறைவாய் மனதில் நிற்கிறார். ரவியின் குண மாற்றத்தை நாசர் சுட்டிக் காட்டும் வேளையில், “நீங்க கண் தானம் பண்ணி வச்சிருக்கீங்களா?” என்ற ரவியின் கேள்வி நாசரை மட்டுமன்று படம் பார்ப்பவர்களையும் உலுக்கும் என்பது நிச்சயம்.
டன்னல் விஷனோடு படம் எடுத்துக் குவித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகில், கழுகாய் உயரே பறக்கிறது ‘குற்றமே தண்டனை’.