பூகம்பம், புயல், சுனாமி
வந்தால்தான் நமக்குள்ளே
தேசிய ஒருமைப்பாடு
அப்பொழுதான் அனைவரும்
ஒன்றுபடுவோம்……
பரவாயில்லை அடிக்கடி
இவைகள் வரட்டும்
அந்த சில காலமாவது
ஒற்றுமையாய் இருப்போம் …..!
நிவாரண நிதியிலும்
நித்தம் நித்தம்
சீர்கேடு ….!
62 ஆண்டுகள் ஆகின்றது
ஆயினும் குண்டு துளைக்காத
பாதுகாப்புகுள் நம் சுதந்திர உரை ……!
சுதந்திரம் இப்பொழுது
சுத்தமாக சுற்றாத
இயந்திரம் ….!
மகாத்மா சொன்னார்
எப்பொழுது ஒரு பெண்
இரவில் தனியாக
பயமில்லாமல் நடமாட
முடிகிறதோ அதுதான்
உண்மையான சுதந்திரம்
என்று …..!
இன்று நிலைமை
அதைவிட மோசம்
இப்பொழுது பகலில் கூட
பெண்கள் சுதந்திரமாய்
வெளியே வரமுடிவதில்லை
பர்தா போடாமல் வெளியே
வந்தால் ஆசிட் அபிஷேகம்
அதுமட்டுமா ?
பாலியல் வன்முறை
பேருந்து நிறுத்தம்,
கல்லூரிகளில்,பள்ளிகளில்,
அலுவலகங்களில்…!
மொட்டுக்களுக்கு
மோக உணர்வு ஊட்டி
உல்லாசம் காண்கின்றார்கள்
சில சல்லாப காமுகன்கள் ….!
எது சுதந்திரம் பொக்கரானில்
குண்டு வெடித்தல்(சோதனை)
பொருளாதரதடை
போர்க்கருவிகள் நீ வாங்கினால்
பயங்கரவாதம் நான்(சோதனை நடத்தலாம்)
வாங்கினால் பாதுகாப்புக்கு……!
அணு ஆயுத சோதனை
நீ நடத்தாதே அதை நான்
நடத்தி கொள்கிறேன்
என் நாட்டில்…!
காவலர் லஞ்சம் வாங்க
சுதந்திரம்…!
அரசு ஊழியர்கள் கடமையை
செய்ய கையூட்டு வாங்க
சுதந்திரம்..!
பள்ளியில் குழந்தையை சேர்க்க
பைபையாய் பணம்
வாங்க சுதந்திரம்…!
மருத்துவமனையில் ஏழையின்
மனைவிக்கு பிரசவம் பார்க்க
பணம் வாங்க சுதந்திரம்…!
கல்லூரிகளில்(சட்ட) மாணவர்கள்
வன்முறையில் ஈடுபட
வழங்கியுள்ளோம்
சுதந்திரம்..!
குற்றவாளிகள் நமை ஆள
கொடுத்திருக்கிறோம்
சுதந்திரம்…!
வாக்கு வாங்க
வங்கி பணத்தை
வாக்காளர்களுக்கு
வேட்பாளர்கள்
வாடிக்கையாய் வழங்க
வழங்கி வந்துள்ளோம்
இதுவும் சுதந்திரம்…!
விளையாட்டு துறையில்
பெரும் புள்ளிகள்
தலையிட வழி
கொடுத்திருக்கிறோம்
சுதந்திரம்…!
ஓரின சேர்க்கை
செய்ய சட்டம்
கொண்டுவதுள்ளோம்
அவர்களுக்கு இனி
சுதந்திரம்…!
வழக்குகள் பல
வழக்கு போட்டவன்
மறைந்த பின்னும்
தீர்ப்பு இன்னும் வராமல்
அடுத்த வாரம் என வாய்தா
வழங்க சுதந்திரம்…!
உயர்நீதி மன்றத்தில்
குற்றவாளி
உச்ச நீதி மன்றத்தில்
நிரபராதி
என தீர்ப்பு
வழங்க சுதந்திரம்…!
பீர் குடித்துவிட்டு
குறி சொல்ல சுதந்திரம்…!
பார் வைத்துக்கொண்டு
குடி குடியை கெடுக்கும்
என வாசகம் ஒட்டி
விற்பனை செய்ய
சுதந்திரம்…!
பொது இடத்தில
புகை பிடிக்க
(சட்டம் போட்ட பின்பும்)
சுதந்திரம்…!
போதை புகையிலை
புசிக்க
சுதந்திரம்…!
இங்கு இருந்துகொண்டு
எங்கள் நாட்டை
சுரண்டிக்கொண்டு
எங்களையே அடிமையாய்
நடத்த சுதந்திரம்…!
உள்ளே புகுந்து
தாக்குதல் நடத்த
சுதந்திரம்…!
அதைப்பற்றி கேட்டால்
ஆதாரம் போதாது என
அலைகழிக்கும் நாட்டுடன்
பேச்சுவார்த்தை என்ற
பெயரில் மாற்றானை
உள்ளே அனுமதிக்க
சுதந்திரம்…!
தினமும் தாக்குதல்
நடத்த தீவிரவாதிகளுக்கு
சுதந்திரம்…!
தாய்மொழியை விட்டுவிட்டு
மற்ற மொழிகளை
பேச, எழுத, படிக்க
சுதந்திரம்…!
அயல் நாடுகளுக்கு
சென்று அடிமையாய்
அலுவல் செய்ய
சுதந்திரம்…!
அங்கு அடி கொடுத்தால்
வாங்கி கொள்ளவும்
சுதந்திரம்…!
மது அருந்திவிட்டு
வாகனங்களை ஓட்டி
விபத்து ஏற்படுத்தவும்
சுதந்திரம்…!
அடிபட்டு அறைபிணமாக
கிடபவர்களை யாரும் கண்டு
கொள்ளாமல் காவலர்
வருவார் என அவரவர்
அவர் வழியில் போக
சுதந்திரம்…!
கலா தாமதமாக வந்து
அவசரஊர்தி
அள்ளி போட்டுகொண்டு போக
போகும் வழியில்
உயிரைவிட
அடிபட்டவர்களுக்கு உண்டு
சுதந்திரம்…!
அவசர சிகிச்சை
பிரிவில் அனுமதிக்க
அந்த நேரத்தில்
அரை லட்சம் கேட்க
அவர்களுக்கு உண்டு
சுதந்திரம்…!
அரசு மருத்துவர்
அவருக்குரிய நேரத்தில் வராமல்
அவர் நடத்தும்
தனி மருத்துவமனையில்
தனம் பார்த்து விட்டு
தாமதமாக வருவார்
அது அவர்
சுதந்திரம்…!
கழனி விற்றுவந்து தான்
கல்லாத கல்வியை மகனுக்கு
ஊட்டிட கால்வயிறு கஞ்சிகுடித்துவிட்டு
வந்தவனிடம் கண்ட மொழியில்
கண்டபடி பேசிட
சுதந்திரம்…!
மகிழ்வுந்தில் வந்தவருக்கு
உள்ளம் மகிழ
குளிர்பானம் கொடுத்து
வழ வழ இருக்கையில்
கொழ கொழ என பேசிட
சுதந்திரம்…!
வருமானத்திற்கு அதிகமாக
சொத்து சேர்க்க
சுதந்திரம்…!
அதற்கு வரி ஏய்ப்பு
செய்திட பட்டய கணக்காளருக்கு
அதில் பங்கு கொடுத்திட
சுதந்திரம்…!
ஆசிரியர் பள்ளியில்
பாடம் நடத்தாமல்
இருக்க சுதந்திரம்…!
அவரே தனிவகுப்பு
எடுக்க சுதந்திரம்…!
பேராசிரியர் அகமதிப்பீடு
அவருக்கு பிடித்தவர்களுக்கு
அகம் மகிழ அள்ளி போட்டிட
சுதந்திரம்…!
பிடிக்காதவர்களுக்கு
கிள்ளி போட்டிட
சுதந்திரம்…!
அரசு ஊழியர்கள்
ஊதிய உயர்வு கேட்டு
ஊர்வலம், உண்ணாவிரதம்
நடத்த சுதந்திரம்…!
உண்ணாவிரதம் என்கிற
பெயரில் மறைவாக
உணவு உண்ண
சுதந்திரம்…!
பிறகு பழரசன் குடித்து
உண்ணாவிரதம் முடித்துகொள்கிறோம்
முடிவெடுக்க சுதந்திரம்…!
காசு இருந்தால்
கட்சி ஆரம்பிக்க
சுதந்திரம்…!
தொண்டர்கள் இல்லாவிட்டாலும்
தொடங்கிய கட்சிக்கு
கூட்டம் சேர்க்க
தக்காளி,தயிர்.பிரியாணி
பட்டை சாதம் கொடுத்து
கூட்டம் சேர்க்க
சுதந்திரம்…!
ஒலிபெருக்கி(லவுட்ஸ்பீக்கர்)
ஒலிவாங்கி(மைக்)
வைத்துக்கொண்டு
வாய்க்கு வந்தபடி
பேச சுதந்திரம்…!
பள்ளிபருவதிலே பள்ளியறை
பாடம் பயில
சுதந்திரம்…!
திருமணத்திற்கு முன்பே
தினமும் திருட்டு காதலில்
ஈடுபட சுதந்திரம்…!
அலைபேசி/கைபேசியை
காதில் வைத்துக்கொண்டு
எதிரில் வருபவர்,கடப்பவரை
கவனிக்காமல் இடித்துக்கொண்டு
நடக்க சுதந்திரம்…!
சாலைவிதிகளை மதிக்காமல்
மதிகெட்டவர் போல்
தனியே பேசிக்கொண்டு
கடக்க சுதந்திரம்…!
கண்முன் நடக்கும்
சமுதாய அவலங்களை
கண்ணில்படாதமாதிரி
கண்டுகொள்ளாமல்
இருக்க சுதந்திரம்…!
மொழியே தெரியாமல்
முனுமுனுத்தபடி
நடிக்க சுதந்திரம்…!
பணம் இருந்தால்
படம் எடுக்க
சுதந்திரம்…!
சொந்தம் யாராவது
திரைத்துறையில்
இருந்தால் படத்தில்
நடிக்க சுதந்திரம்…!
பிறகு சினிமாவே
எனக்கு முழுசொந்தம்
என சொல்லிக்கொள்ள
சுதந்திரம்…!
திரைத்துறையில்
பணமோசடி,கற்பனை திருட்டு ,
ஒப்பந்தமிரல் செய்ய
சுதந்திரம்…!
கவிதை என்கிற
பெயரில் வேற்று மொழி
சொற்களையும்,புரியாத,
அர்த்தமற்ற வார்த்தைகளையும்
கிறுக்கிவிட்டு சிறந்த கவிதை
என சொல்லிக்கொள்ள
சுதந்திரம்…!
எல்லா விளம்பரங்களுக்கும்
பெண்ணை ஆபாசமாக
சித்தரித்து பொருட்களை
விற்பனை செய்ய
சுதந்திரம்…
நல்ல நூல்களை
படிக்காமல் இருக்க
சுதந்திரம்…!
நல்ல தலைவர்கள் பற்றி
நாலு வரிகூட
தெரியாமல் இருக்க
சுதந்திரம்…!
சாமி திருவிழா என்ற
பெயரில் காசுகளை
விரயமாக்க சுதந்திரம்…!
பகுத்தறிவு,மூடநம்பிக்கைகள்
என பகுத்தாய தெரியாமல்
இருக்க சுதந்திரம்…!
சாதி மத பேதம்
சொல்லி இழிச்செயல்களில்
ஈடுபட சுதந்திரம்…!
நமக்குள்ளே நம்
நாட்டு வளங்களை
பிரித்து கொடுக்க
மாட்டோம் என
சண்டையிட
சுதந்திரம்…!
நான் சொல்ல நினைத்த
சுதந்திரத்தில் இங்கே
சொல்லியிருப்பது 47%தான்,
சொல்லாமல் இன்னும்
விட்டுச் செல்வதும் என்
சுதந்திரம்
இது படிப்பவர்களின்
சுதந்திரதிற்காக….!
இன்னும் சொல்லலாம்
நம் நாட்டு சுதந்திரம்
பற்றி…………………..
பட்டியலை நான் நீட்டி
கொண்டே போகலாம்
ஆனால் அது
படிப்பவர்களின் மனதிற்கும்
கண்களுக்கும் இதமளிப்பதாய்
இருக்காது ஆகவேதான் ……..!
இதையெல்லாம் இப்படி நான்
சிறுபிள்ளைதனமாக உளறுவதை
சொல்வதற்கும் எனக்குண்டு
சுதந்திரம்…..!
– சே.ராஜப்ரியன்