டைட்டில் போடும் பொழுதே கொண்டாட்டம் தொடங்கி விடுகிறது. அந்தக் கொண்டாட்டத்தை படம் முடியும் பொழுதும் உணர விடுகிறது.
கேரளப் பெண்ணைதான் மணக்க வேண்டுமென சொல்லிச் சொல்லி தன் மகனை வளர்க்கிறார் தமிழ்மணி. அவரது மனைவியோ, தமிழ்ப் பெண்ணை தான் மகன் மணக்க வேண்டும் என பிடிவாதமாக உள்ளார். அவர்களது மகன் உன்னி கிருஷ்ணன் எந்த மாநிலத்துப் பெண்ணை மணந்தார் என்பதுதான் படத்தின் கதை.
கலைமாமணி பேராசிரியர். முனைவர். திரு. கு.ஞானசம்பந்தன் என அவர் பெற்ற விருது, செய்யும் வேலை, வாங்கிய பட்டம் என பெயருக்கு முன் சகலத்தையும் போடுகின்றனர். நாயகனின் பெயருக்கும் முன்னால் இவரது பெயர் திரையில் வருகிறது. படத்தின் கதையைத் தொடக்கி முடிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தில் வருகிறார். கூலிங் கிளாஸை ஸ்டைலாகக் கழட்டுவது, துண்டை அநாயாசமாக தோளில் போடுவது, மீசையை முறுக்குவது என படத்தின் ஆல் ரவுண்டராக உள்ளார். கடைசி வரை விடாக்கொண்டனாக, தனது லட்சியத்திலேயே குறியாக உள்ளார் ஞாசம்பந்தன்.
நாயகனாக அறிமுமாகியுள்ளார் அபி. தாய் தந்தையரிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது, காவல்துறையில் பணி புரியும் மீன் கொடியைப் பார்த்து மிரள்வது, மஞ்சுவைப் பார்த்து மயங்குவது என புதுமுக நடிகர் போலன்றி நடிப்பில் அசத்துகிறார். கொஞ்சம் பயந்த சுபாவம் போன்ற முகமும், லேசாய் சிரித்தவாறே இயல்பாய் அவர் பேசும் வசனமும் கதைக்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது.
தந்தையின் விருப்பத்திற்கிணங்க, கேரளத்து அதிரூப சுந்தரியைத் தேடி நாயகன் கேரளா செல்கிறான். குழந்தைத்தனமான முகத்துடன், கொஞ்சம் குறும்புத்தனத்துடன் உள்ள காயத்ரியே நாயகனின் கையைப் பிடிக்கிறார். நாயகனுக்கு அதிக வேலை வைத்து அலைய விடாமல், அடுத்த சந்திப்பிற்கான காரணத்தையும் நாயகியே உருவாக்குகிறார். மிகக் குறைவான காட்சிகளில் மீன்கொடியாக வரும் தீக் ஷிதாவும் நிறைவாக நடித்துள்ளார். ‘என்னை உன்னிகிருஷ்ணன் காதலிக்கிறானா?’ என அதிர்ச்சியடையாத அபிராமி மட்டும் திணிக்கப்பட்டவராகவே படத்தில் தோன்றுகிறார்.
நாயகனின் தாய் வசந்தியாக வரும் ரேணுகா, ஞானசம்பந்தனுக்குப் போட்டியாகக் கலக்கியுள்ளார். ஆனால் ரேசில் மிஞ்சுவது என்னவோ.. பேராசிரியரின் லட்சியமும் அதற்கு அவர் காட்டும் ஈடுபாடும்தான். நாயகியின் தந்தையாக வரும் சங்கர் நாராயணன் பாத்திரத்தை பேராசிரியரின் கதாபாத்திரத்திற்கு நிகராகச் சித்தரிக்க முயன்றுள்ளார் இயக்குநர். தனது மகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாதென, ஃபேனை ஸ்பிரிங்கில் மாட்டி வைப்பது ரசிக்க வைக்கிறது. எனினும் அவரது கடைசி நிமிட சினிமா ஸ்டன்ட் எல்லாம் உறுத்தவே செய்கிறது.
படத்தை கலகலப்பாக்குவது நாயகனின் நண்பராக வரும் காளி. தெகிடி படத்திலும் நாயகனின் நண்பனாக வந்து குணசித்திர வேடத்தில் நன்றாகப் பண்ணியிருப்பார். ஞானசம்பந்தன் இல்லாத காட்சிகளில், படத்தின் கலகலப்பைத் தக்கவைப்பவராக உள்ளார்.
இயக்குநராக இசையமைப்பாளர் S.S.குமரனின் முதற்படம் (தேநீர் விடுதி) இது என்று கூடச் சொல்லலாம். பச்சை வாழையிலையில், நேந்திரம் வறுவலால் இவரது பெயர் பொறிக்கப்படுகிறது. ஏனெனில் படத்தின் தயாரிப்பாளரும் கதாசிரியரும் இசையமைப்பாளரும் இவரேதான். படம் தொடங்கும் பொழுதே எழும் கொண்டாட்ட உணர்விற்குக் காரணம் இவரது இசைதான். பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன. ரமண கோபிநாத்தின் வசனம், ஹிந்தியை தேசிய மொழி எனச் சொல்வது உறுத்தல். யுவாவின் ஒளிப்பதிவில் தெய்வத்தண்ட தேசமான கேரளா அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்திற்கும் குறைவாகப் போகும் படம் சட்டென முடிகிறது. அதைவிட கொடுமை, சுபமான முடிவிற்குப் பிறகும் கதாபாத்திரங்கள் கடைசி 15 நிமிடம் வளவளவெனப் பேசிக் கொண்டேயிருக்கின்றனர்.
‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ என்ற தலைப்பு படத்திற்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது. கேரள நாட்டிளம் பெண்ணுடன் மட்டும்தான். கதைப்படி அதுவும் கூட இல்லை.