இந்தியாவின் முதல் முழு நீள மோஷன்-கேப்ச்சர் படம், அதற்கே உரிய மழலை நடையோடு திரையில் அழகாய்த் தத்தித் தாவிப் பிரேவசித்துள்ளது.
ராணா எனும் கோச்சடையான் ரணதீரன், தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதோடு அவரது மரணத்திற்கும் பழிவாங்குதுதான் படத்தின் கதை.
கதையை எழுதியவர் கே.எஸ்.ரவிக்குமார். அதுவும் ராஜா காலத்துக் கதை என்பதால், அவரது வழக்கமான பாணியில் அப்பா ரஜினி, அண்ணன் ரஜினி, தம்பி ரஜினி என ரஜினிகளை வரிசையாகக் கதையில் இறக்கியுள்ளார். திருப்பங்கள் பல நிறைந்த மிகச் சுவாரசியமான திரைக்கதை. ஆனால் அதை உள் வாங்கிக் கொள்ள முடியாமல், புது விதமான காட்சி அனுபவம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. ரஜினி, நாகேஷ், ஜாக்கி ஷெராஃப், நாசர், ஷோபனா, ஆதி தவிர வேறு எவரையும் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. படத்தில் வரும் வீரர்கள், ஊர் மக்கள் என இதர கதாபாத்திரங்கள் அனைவரின் முகமும் மெழுகு பூசினாற்போலவே உள்ளது. ராணாவே கூட சில இடங்களில் முடக்கு வாதம் வந்தது போல கையை வீசி நடக்கிறார். மற்ற கதாபாத்திரங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டாம்.
நாகேஷை மீண்டும் திரையில் கொண்டு வரக் கிடைத்த வாய்ப்பிற்கு மகிழ்ச்சி கொள்வதாக டைட்டில் கிரெடிட்டில் போடுகின்றனர். மற்ற பாத்திரங்கள் எல்லாம் கதையுடன் சம்பந்தப்பட்ட உடல்மொழி, வசனத்துடன் வருகின்றனர். ஆனால் ரஜினியின் மாமாவாக வந்தாலும் நாகேஷை நாகேஷாகவே திரையில் கொண்டு வந்துள்ளனர். நாகேஷ் அவசரமாக வரும்பொழுது, வாசற்படி தடுக்கி விழுந்துவிடுகிறார். அவரை எழுந்து வரச் சொல்கிறார் ராணாவின் தங்கை. அதற்கு நாகேஷ் தனது வழக்கமான குறும்பும் புன்னகையும் கலந்த முகத்தில், “எழுந்தாதானே வர முடியும்” என்கிறார்.
படம் முழுவதும் காட்சிகளில் பிரம்மாண்டம் இழையோடுகிறது. முக்கியமாக போர்க்களக் காட்சிகளை எல்லாம் அற்புதமாகவே திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த். அனிமேஷன், மோஷன்-கேப்ச்சர் படம் என்ற பிரக்ஞையை எல்லாம் மறக்கடித்து, “இது ரஜினி படம் மட்டுமே!” என்று பார்வையாளர்களை நம்ப வைக்கப் பார்க்கிறார் செளந்தர்யா. ரஜினியின் அறிமுகக் காட்சியும், கதையின் ஓட்டமும் அதற்குத் துணை புரிகிறது. படத்தில் ரஜினி வராத ஃப்ரேம்கள் மிகச் சிலவே! ரஜினியின் ஷார்ப்பான சின்ன கண்களையும் ராணாவோ, கோச்சடையானோ பிரதிபலித்து இருந்தால்.. கோச்சடையானின் வசீகரம் இன்னும் பல மடங்கு அதிகரித்திருந்திருக்கும்.
“எங்கே போகுதோ வானம்?” என்ற ரஜினி அறிமுகமாகும் பாடலை, முக்கியமான காட்சிகள் அனைத்திலும் பின்னணி இசையாக உபயோகப்படுத்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தின் இசை கதையின் போக்கிற்கு உதவாமல்.. ‘நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ரஹ்மானின் இசை’ என்பது போல் படத்தோடு ஒட்டாமல் தனி ஆவர்த்தனம் செய்கிறது. படம் தரும் அந்நியத்தன்மைக்கு ரஹ்மானின் ஸ்டைலான இசை ஒரு காரணம். அதாவது மன்னர் காலத்தைப் பிரதிபலிக்கத் தவறியுள்ளார்.
இளவரசி வதனாவாக தீபிகா படுகோனே. வழக்கம் போல், சிறுமியாக இருக்கும் பொழுதிருந்தே ராணா மீது வதனாவிற்கு காதலோ காதல். ராணா சிறையில் இருக்கும் துக்கத்தில் சோகப் பாடலை ‘லிப்-சிங்க்’ ஆகாமல் பாடுகிறார். ஹிந்திப்பட நாயகி என்பதற்காக, உண்மைக்கு இவ்வளவு நெருக்கமாக காட்சிகள் அமைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றுதான் புரியவில்லை. அதைவிட பெரிய நகைமுரண், சிற்பக் கூடத்தில் சந்திக்கும் ராணாவும் வதனாவும் “டூயட்”டிற்கு மலைப் பிரதேசத்திற்குச் செல்கின்றனர். வதனாவும், தோகை விரித்த வெள்ளை மயிலும் ஒரே மாதிரி நடனமாடும் காட்சி அழகாகவுள்ளது.
கோச்சடையானின் ட்ரைலருக்கே ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிட்டு, தரம் சரியில்லை அது சரியில்லை இது சரியில்லை எனப் புலம்ப ஆரம்பித்து விட்டனர். அவதார் படத்துக்கு ஏற்பட்ட தயாரிப்புச் செலவில் 10க்கு 1 பங்குதான் கோச்சடையானுக்கு செலவு செய்துள்ளனர். இத்தகைய குறைந்த செலவில், இந்த க்வாலிட்டியில் படம் எடுத்திருப்பது கண்டிப்பாக முடியால் மலையை இழுக்கும் அசாத்திய சங்கதியே!
பேசும்படம் இயக்கிய முதல் இந்தியப் பெண் இயக்குநர் T.P.ராஜலக்ஷ்மி. 1936 இல் வெளிவந்த “மிஸ் கமலா” எனும் தமிழ்ப் படத்தால் தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை அது. அப்போது அவரது வயது 25 தான். அதற்கு சற்றும் குறையாத மகத்தான சாதனையை செளந்தர்யா செய்துள்ளார். இந்திய சினிமாதான் நூறாண்டு கொண்டாடியிருக்கு. தமிழ் சினிமா 2016 இல் தான் தனது நூற்றாண்டைக் கொண்டாடவுள்ளது. அந்தக் கொண்டாட்டத்தின் பொழுது, கண்டிப்பாக இந்த ஜானரில் தனித்து நிற்கும் ஒரே படமாக கோச்சடையான் கோலேச்சும். ‘சுல்தான் – தி வாரியர்’ என்ற கனவை நினைவாக்க முடியாமல்.. அதிலிருந்து மீண்டு “கோச்சடையான்” படத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ள செளந்தர்யாவிற்கு வாழ்த்துகள். அடுத்த பாகத்திற்கான சுவாரசியமான முடிச்சோடு படத்தை முடித்துள்ளார். அவரது தந்தை ‘கோச்சடையான் இசை வெளியீட்டு விழா’வில் பேசியதைலாம் காதில் வாங்காமல், லொள்ளு சபா ஜீவாவைக் கொண்டாவது அடுத்த பாகத்தையும் செளந்தர்யா இயக்கி வெளியிட வேண்டும் என்று எல்லாம் வல்ல மன்த்ராலயம் ராகவேந்திரா சுவாமியையும், இமயமலை பாபாஜியும் வேண்டிப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.