Shadow

சதுரங்கம் விமர்சனம்

Sadhurangam

 

சதுரங்கம் – அதிசயமாய் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. கோ படத்தின் பரவலான வெற்றி காரணமாக இருக்கலாம்.

‘திசைகள்’ என்னும் வாரயிதழில் வேலை செய்யும் திருப்பதிசாமி, சமூக அவலங்களை தன் எழுத்தின் மூலம் வெளிக் கொணருபவர். உண்மைகளை பகிரங்கமாக எழுதும் நேர்மையாளனுக்கு ஏற்படக் கூடிய சங்கடங்கள் திருப்பதிசாமிக்கு எழுகிறது. அச்சங்கடங்களில் இருந்து திருப்பதிசாமி எப்படித் தப்பினார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.

ஸ்ரீகாந்த நாயகனாக. 2006ல் வர வேண்டிய படம்.

துரோகி(2010) படத்திற்குப் பிறகு வெளியாகி உள்ளது. தெனாவட்டனவராய் அறிமுகப்படுத்தப்பட்டு காரியத்தில் வீர்யமுள்ளவரைப் படம் முடியும் வரை தோன்றுகிறார். ஒட்ட நறுக்கிய தலை முடியுடனும், சிறு புன்னகையைத் தேக்கிய முகத்துடனும் வரும் ஸ்ரீகாந்திற்கு இது முக்கியமான படமாக இருக்கும். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் மிரட்டும் பொழுது காட்டும் அலட்சியம், காதலியைக் கடத்தும் பொழுது காட்டும் பதைபதைப்பு, காதலியைத் தேடும் பொழுது ஏற்படும் வேகம், துவளும் பொழுது காட்டும் விரக்தி என இயல்பாய் நடித்துள்ளார். கரு.பழனியப்பனின் படங்கள் நாயகிகள் அலட்சியப்படுத்தப் பட மாட்டார்கள். சோனியா அகர்வால் நாயகியாக. நாணி, ஆட, பாட என்ற விதிகளை மீறி தன் அக உணர்வுகளை நாசூக்காய் வெளிப்படுத்தும் பாத்திரத்தில் வருகிறார் சோனியா.

மகாகவி பாரதியார் பாடலுடன் படம் தொடங்குகிறது. காலத்தே படம் வெளியிடப்பட்டிருந்தால் கரு.பழனியப்பன் கொண்டாடப்பட்டு இருந்திருப்பார். பச்சை நிற பல்லவன் பேருந்துகள், புதிதாய் கட்சித் தொடங்கியிருக்கும் விஜயகாந்த், ஒல்லியான ஸ்ரீமன், எப்பொழுதும் பொருந்தக்கூடிய ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி, நாயகன் நாயகி வில்லன் என சில கதாபாத்திரங்கள் தவிர்த்து மற்ற எவரும் செல்ஃபோன் உபயோகிக்காதது என படம் கொஞ்சம் பழைய உணர்வை அளிக்கிறது. சிறைச்சாலை காட்சிகள் நுணக்கமாக பதியப்பட்டுள்ளன. இளவரசு, சரண்யா பொன்வண்ணன், மயில்சாமி, மணிவண்ணன், டி.பி.கஜேந்திரன், மனோபாலா, போஸ் வெங்கட் என தெரிந்த முகங்கள் பலர் உள்ளனர். நாயகனின் தந்தையாக வரும் மறைந்து விட்ட நடிகர் விஜயன் அவர்கள் அதிலொருவர். கரு.பழனியப்பனின் ஏனையப் படங்கள் போல் இப்படத்திலும் வசனங்கள் பளிச்சிடுகின்றன. ‘ஞாபகத்துல இருக்கிறதும், ஞாபகப்படுத்துறதும் தானே காதல்’ என்ற கவித்துவமான வசனம் ஓர் உதாரணம். “ஜெயிப்போம்னு நம்புங்க சார்.. ஜெயிப்பீங்க” என்று சொல்வதற்காகவே படத்தில் ஒரு பாத்திரம் உண்டு. இந்த வசனத்தைச் சொல்வதற்கென்றே படம் முடியும் அரை விநாடிக்கு முன் திரையில் தோன்றி, வசனத்தைச் சொல்லி படத்தை முடித்து வைக்கிறார்.

நேர்மையாய் இருத்தலுக்கான பரிசாய் காதலியை இழந்ததாக வருத்தப்படும் நாயகன், முடிவில் தான் செய்யும் இரு கொலைகளுக்கான குற்ற உணர்வு ஏதுமில்லாமல் மற்றொருவரிடம் துப்பாக்கியை அளித்து விட்டு செல்கிறார்.

சதுரங்கம் விதிகளுக்கு உட்படாது பகடைக் கொண்டு ஆடப்படுகிறது.

Leave a Reply