Search

சதுராச்சலம்: ஓர் அனுபவம்

லிங்கங்கள்

காணாத அருவினுக்கும்
      உருவினுக்குங் காரணமாய்
நீணாக மணிந்தார்க்கு
      நிகழ்குறியாஞ் சிவலிங்கம்

லிங்கங்கள் மீதான ஈர்ப்பு எந்த வயதில் தொடங்கியது என சரி வர ஞாபகம் இல்லை. வரிசையாக வெவ்வேறு உருவங்களில் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கங்களைப் பார்த்தாலே அலாதியான உணர்வு ஏற்படும். அதைப் பார்க்கவே பெரிய சிவன் கோயில்களுக்குச் செல்வதுண்டு. கருங்கல்லில் செய்யப்பட்ட பெரிய லிங்கங்கள் ஒரு பிரகாரம் நெடுக்கே வரிசையாக அக்கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும். சற்றே ஒளி குறைந்த பிரகாரத்தில் லிங்கங்களைப் பார்த்துக் கொண்டு நடப்பது ஓர் அமானுஷ்ய உணர்வைத் தரும். அதுவும் நாம் மட்டுமே தனியாக அந்த இடத்தில் நிற்கும்போது அதைத் துல்லியமாக உணரலாம். அச்சமயம் பார்த்து வெளவால்கள் உரசிக் கொண்டு பறந்தால் சொல்லவே வேணாம்.

லிங்கங்களின் அச்சுறுத்தும் கம்பீரமும், சலனமற்ற அழகும் மனதை ஏதோ செய்துவிடும். இப்படி அச்சுறுத்தும்படியே பார்த்துப் பழகிய லிங்கங்கள், வித விதமான வண்ணங்களில் சின்னதாக கண்ணாடிப் பொம்மைகளாகப் பார்த்தபொழுது ஆச்சரியமாக இருந்தது. மகோன்னதமான லிங்கங்கள் விளையாட்டுப் பொருளாய்ச் சுருங்கியது. 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, அப்படியொரு சின்ன பச்சை நிறக் கண்ணாடி லிங்கம் கிடைத்தது. எனக்கே எனக்கானது. எப்பொழுதும் பேன்ட் பாக்கெட்டிலேயே வைத்திருப்பேன். அந்த லிங்கம் ஒருநாள் சொல்லிக்காமல் கொள்ளாமல் மாயமாய்ப் போய் விட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப் போகிறவனுக்கு இருக்கும் அழுத்தங்களைச் சொல்லி மாளாது. அந்த அழுத்தங்களில் சிவலிங்கம் காணாமல் போன கவலை கடலில் கரைத்த பெருங்காயம் போல் கரைந்து போனது. பின் அது போல் குட்டி லிங்கங்கள் சிலவற்றை எப்பொழுதும் உடன் வைத்துக் கொள்ள முயன்றேன். ஒன்றன் பின் ஒன்றாக எல்லாமுமே மாயமாகிவிட்டன.

பிறகு கல்லூரி படிக்கும் பொழுது ஒருநாள், கும்பகோணத்தில் இருந்து 70/- ரூபாய் மதிப்புள்ள கனமான பித்தளை சிவலிங்கமொன்று என்னிடம் வந்து சேர்ந்தது. பாக்கெட்டில் வைக்க முடியாத அளவு சற்றே பெரியது. ஆனால் கைக்குள் வைத்து மூடிக் கொள்ளலாம். சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது என்பதாக கேள்வி. அதனால், புத்தகங்களுக்கு மத்தியில் காட்சிப் பொருளாக மட்டும் வைத்துக் கொள்ள அனுமதி கிடைத்தது. எனக்கும் அது தானே தேவை. ஆனால் அந்தப் பித்தளை லிங்கத்திற்கு, என்னைப் பார்த்தால் எப்படி இருந்ததோ தெரியவில்லை. எவர் கண்ணையோ உறுத்த வைத்து, என் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எங்கோ எவருடனோ ஓடி விட்டது. சரி எனக்கும், சிவ லிங்கத்திற்கும் ஏகப் பொருத்தம் போலும் என ஒருவாறு சமாதானம் அடைந்து விட்டேன்.

பெரும்பாலான சமாதானங்களின் ஆயுசு குறைவே! மூன்றரை வருடங்களுக்கு முன் மதியவேளையில், நல்ல பசியில் இருக்கும் பொழுது நண்பொருவர் ஒரு லிங்கம் பரிசளித்தார். சின்னஞ்சிறிய லிங்கம். தொட்டால் சில்லென்று இருந்தது. எனக்காக கடல் கடந்து பயணம் செய்திருந்தது. சென்னை மாநகரப் பேருந்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது அந்த லிங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். பார்ப்பதற்கு மிட்டாய் போல் இருந்தது. அப்படியே விழுங்கி விடலாமா என்று கூடத் தோன்றியது. ஒவ்வாமையில் வாந்தி வந்து, வாந்தியில் லிங்கம் வந்து, எங்கே அதை மற்றவர்கள் பார்த்து.. எனக்கு யாரேனும் ஆசிரமம் தொடங்கி விடுவார்களோ என பயந்து நடுங்கி அவ்வாசையை மூட்டை கட்டினேன். ஆர்வக் கோளாறில் ஒருநாள் முழுவதும் கையில் அழுத்திப் பிடித்தப்படியே தூங்கினேன். கையெல்லாம் கருப்பாகி விட்டது. மூலிகையாம், ரசமாம், ரச லிங்கமாம். அதை அளித்த நண்பர் பயப்பட ஒன்றுமில்லை எனச் சொன்னார்.

Rasalingam

வரம் கொடுத்தால், சிவன் தலையிலேயே கை வைப்பவர்கள் நாம். அப்படித்தான், ரசலிங்கம் தந்தவர் தலையில் கை வைத்தேன் நான். ஏனெனில் சூதத்தைக் (Mercury) கெட்டியாக்கி, லிங்கமாக மாற்ற வேண்டும். அது குதிரைக் கொம்பான விஷயம். எவ்வடிவத்தில் இருந்தாலும் லிங்கம் லிங்கம்தானே!! ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ரசலிங்கத்தை உருவாக்க வேண்டும்? ரசலிங்கத்திற்கு மட்டுமென்ன தனி மகிமை என்றும், ஏன் கிடைத்தற்கரிய பொருளென்றும் வினவினேன்.

“உடல்நிலை சரியில்லை என்றால்.. ஒருநாள் முழுவதும் ஒரு டம்ளர் தண்ணியில் ரசலிங்கத்தை வைத்திருந்துவிட்டு, அதைக் குடித்தால் முப்பிணிகளான வாதம், பித்தம், கபம் சமனாகி உடல் தேறும்” என்றார்.

“ஓ..”

“பில்லி, சூனியம், செய்வினை போன்றவைகளில் இருந்து அண்டாது பாதுகாக்கும். வேண்டியது நிறைவேற்றும்.”

“எனக்கு யார் இதெல்லாம் வைக்கப் போறாங்க?” எனச் சிரித்தேன்.

“ஆனால் இவை வெறும் மானுட லிங்கம்தான். கிடைத்தற்கரிய பொருளெனச் சொல்ல முடியாது. கொஞ்சம் மெனக்கெடணும். அவ்ளோதான்!”

“அப்போ எது கிடைத்தற்கரிய லிங்கம்?”

“சுயம்பு லிங்கம். இறைவனே லிங்கமாக மாறிவிடுவது. லிங்க வகைகளில் இது முதல். எட்டாவதுதான் மானுட லிங்கம்.”

நான் அதிர்ச்சிக்குள்ளாகி, “என்னது எட்டு வகை லிங்கங்களா?” என்றேன்.

“இறைவனே லிங்கமாக மாறுவது சுயம்பு லிங்கம்; பார்வதி தேவி பிரதிஷ்டை செய்து வழிபடுவது தேவி லிங்கம்; விநாயகரோ முருகனோ பிரதிஷ்டை செய்து வழிபடுவது காண லிங்கம்; மும்மூர்த்திகளான ருத்ரர், விஷ்ணு, பிரம்மா வழிபடுவது தைவிக லிங்கம்; சித்தர்கள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது ஆரிட லிங்கம்; இராட்சஷன் பிரதிஷ்டை செய்து வழிபடுவது இராட்சஷ லிங்கம்; அசுரர்கள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது அசுர லிங்கம்; மனிதர்கள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது மானுட லிங்கம்.”

“நம்புற மாதிரியா இருக்கு. இராட்சஷர்கள் வேற? அசுரர்கள் வேறயா?”

“தெரியாது. ஆனா இதிலுள்ள நாலு வகையான லிங்கத்தையுமே சதுரகிரி மலையில் பார்க்கலாம்.”

“சதுரகிரியா!! அது எங்க இருக்கு?”

“தமிழ்நாட்டுலதான்!”

“அப்போ ரசலிங்கத்திடம் வேண்டிக் கொண்டால் சதுரகிரிக்கு அழைத்துச் செல்லுமா?”

– தொடரும்