Search

சந்தர்ப்பவாதமும் அதிகாரமும்

பல தடைகளைத் தாண்டி 25 ஆம் தேதி வெளிவர இருந்த விஸ்வரூபம் படத்திற்கு 15நாட்கள் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தவ்ஹீத் ஜமாத்,த.மு.மு.க., இ.மு.லீக் உள்ளிட்ட 24 அமைப்புகள்(?) ஒன்று சேர்ந்து ட்ரைலரை மட்டும் பார்த்து விட்டு இந்திய முஸ்லீம்களை இழிவுப்படுத்துகிறது.இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உள்துறை செயலரை சந்தித்துமனு கொடுக்கின்றனர். உடனடியாக படத்தை மேற்கண்ட அமைப்புகளுக்கு திரையிட்டு காட்ட கமல்ஹாசன் கேட்டுக் கொள்ளப்படுகிறார். அதை ஏற்று அவர்களுக்கு படம் திரையிடப்படுகிறது. படத்தைப் பார்த்து விட்டு அவர்கள் இப்படம் வெளிவந்தால் ஒட்டு மொத்த தமிழகமும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்றும், இதுமுஸ்லீம்களை இழிவுப்படுத்துகிறது என்றும் ஓலமிடுகின்றனர். இதை உடனே எதிர்பார்த்திருந்த தமிழக அரசு உடனடியாக இரவோடு இரவாக ஒரு உத்தரவை வெளியிடுகிறது. இப்படத்தை வெளியிட 15 நாட்கள் தடை விதிக்கப்படுகிறதுஎன்பதே அந்த உத்தரவு. இந்த உத்தரவு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்படுகிறது. மாவட்ட ஆட்சியாளர்கள் அனைத்து திரையரங்குகளிலும் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

25 ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். திரையரங்குகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி தரட்டும் என்று அபிராமி ராமநாதன் பவ்யமாக தெரிவிக்கிறார் (அரசுக்கு அடி பணிய தானே வேண்டும்). இதனிடையே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கலை கமல் தரப்பு செய்கிறது. விசாரித்த நீதிபது ஏறத்தாழஒரு “கட்டப்பஞ்சாயத்தைப் போல” விசாரித்து விட்டு.. 25ஆம் தேதி வரை தடை நீடிப்பு என ஒரு அற்புதமாக உத்தரவை(?) வெளியிட்டு கட்டணமில்லாமல் படத்தைப் பார்க்க 26 ஆம் தேதி நாள் குறித்து அன்று படத்தைப் பார்த்து விட்டு தனக்கு திருப்தி இருந்தால் 28 ஆம் தேதி தீர்ப்பு சொல்வேன் என்று ஒரு அரிய தீர்ப்பை சொல்லியுள்ளார். வாழ்க அவரின் கலை ஆர்வம். இவை அனைத்தும் அனைவரும் அறிந்ததே. இதன் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போம்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த அம்மையார் வேறு தனித்து நின்று இந்திய நாட்டை வழிநடத்த வேண்டும் என சூளுரைத்து உள்ளார்கள். தனித்து நிற்பது என்பது கட்சிகளை ஒதுக்கிவிட்டு அமைப்புகளின் ஆதரவை பெறுவது என்றே கருத தோன்றுகிறது. 2001-ல் தி.மு.க. எடுத்த தனித்து நிற்றல் ஆனால் மத,சாதி அமைப்புகளிடம் கைகோர்த்தல் என்பது ஞாபகமிருக்கும். என நினைக்கிறேன்.அதன் முடிவு என்னவாயிற்று என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. ஏறத்தாழ அதே போன்ற ஒரு முடிவை தற்போதைய தமிழக முதல்வர் எடுத்துள்ளார்கள் என்பதையே அவரின் சமீபத்திய முடிவுகள் காட்டுகின்றன. அப்படிப்பட்ட முடிவுகளில்”விஸ்வரூபம் தடை” என்ற முடிவும் ஒன்று. திரைப்படத்திற்கும், தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என நினைத்து விட முடியாது. அவர்களின் கணக்கின்படி 24 முஸ்லீம் அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து ஒரு முதல்வரை சந்திக்கின்றன.அவர்களின் கோரிக்கை, “ஒன்றே ஒன்றுதான்”.

முஸ்லீம்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது, முன்னேற செய்வது என்கிற கோரிக்கைகள் அன்று(!?). ஒரு திரைப்படம் வருகிறது அதை தடை செய்ய வேண்டும் என்ற எளிதானகோரிக்கை. ஓர் உத்தரவில் நடைமுறைப்படுத்தி விடலாம். 24 பேரை ஒன்றாகசந்திக்கும் வாய்ப்பு முதல்வருக்கும், முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு இவர்களுக்கும் கிடைத்து விட்டது. கூட்டணிக்கு அச்சாரமாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியது ஒரு க்ரீன் சிக்னல் காட்டியது போலும் ஆயிற்றே.அத்தகைய க்ரீன் சிக்னலை முதல்வர் கொடுத்து விட்டார். அதிவே படத்திற்கு தடை.

இதுஇதோடு முடிந்து விடவில்லை. விஸ்வரூபம் படம் சுமார் 100 கோடி செலவில் எடுக்கப்பட்டு, பல பிரச்சனைகளை சந்தித்து, ரிலீசுக்கு தேதி குறித்து வெளிவரும் நிலையில் அதன் கழுத்தை நெறிக்கும் பணிக்கு அரசு துணைபோயிருப்பது நன்றாக தெரிகிறது. உதயநிதி ஸ்டாலின் சேலம் விநியோக உரிமையைபெற்றவுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் தனியாக 144 உத்தரவு போடும் அவசியம்என்ன? இதன் வியாபார பின்னணியும், எதிராளி சம்பாதிக்க கூடாது என்றஅரசியலும் இதில் இருப்பது புரிகிறது. ஒருவேளை விநியோக உரிமையை ஆருயிர் தோழிக்கோ அல்லது அவரின் சகாக்களுக்கோ வழங்கி இருந்தால் இந்த விவகாரம்எப்படிச் சென்றிருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

உரிமையை ஜெயா டி.வி. வாங்கியுள்ளது. DTH-ல் படம் வெளிவருவதை ஜெயா டி.வி.க்குஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கமல் என்ற ஒப்பற்ற கலைஞனை -அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவது கலைத்துறையிலிருந்து வந்த ஒரு முதல்வருக்கு அழகன்று. இவர்கள் நீதி மன்றத்தில் சொல்லும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை என்பதெல்லாம் வீண் கற்பனை. அது அவர்களுக்கே தெரியும். சட்டம்ஒழுங்கு பிரச்சனை என்பது ஒரு கேடயம். அது பிரச்சனையே இல்லை என்பதே உண்மை.

சரிஇவரின் இந்த சாதி அமைப்புகளுடம் கை கோர்க்கும் முடிவு – 2001 தேர்தலில்தி.மு.க. சந்தித்த விளைவுகளையே தரும் என்பதை ஏன் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை? நிரவாகம் சிறப்பாக செய்யும் மோடியை சந்திக்கும் ஜெ.. ஏன் சாதி மத அமைப்புகளிடம் மண்டியிடுகிறார் என்பது புரியவில்லை? அதே போன்று கலைத்துறையில் இருந்து வந்த இவர், கலைஞர்களை இழிவுப்படுத்துவதையும் செய்துவருகிறார்.

லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத் உத் தாவா, சிமி, இந்தியன் முஜாஹிதின், டெஹ்ரிக்-இ-தாலிபன், அல்-கொய்தா போன்ற அமைப்புகள் இன்னும் நிறைய உள்ளன.  ஜகி-உர்-ரஹ்மான் லக்வி, ஹசீப் சயீத், ஓசாமா, சுஜா பாஷா,அஷ்பக் பர்வேஷ் கயானி போன்ற நபர்கள் பலர் உள்ளனர். இவர்கள் இந்தியாவிற்கு எதிராக நடத்தும் பயங்கரவாதம் மற்றும் அதற்கு பயிற்றுவிக்கப்படும் உத்திகள் எல்லாமே ஊரறிந்தது. பாகிஸ்தான் மதராஸாக்களில் (பள்ளிக்கூடம்) என்ன நடக்கிறது என்பதும் அறிந்ததே. அவர்களின் வரலாற்றுப் பாடத்தில் இந்தியாவிற்கு எதிராக என்னென்ன வசனங்கள் உள்ளன என்பது பார்த்தால்.. விஷத்தைப் பரப்புவது யாரென்று தெரியும். இதை பாகிஸ்தானில் இருந்து விளிவரும் DAWN பத்திரிக்கை சொல்கிறது. இப்படி எல்லாம் நடக்குமாம்.. ஆனால் அதனைக் காட்டக் கூடாதாம். உடனே இவர்களுக்கு கோவம் வருமாம். அதை ஏற்று அரசும் படைப்பை தடை செய்யுமாம். இதென்ன ஜனநாயக நாடா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. படைப்பாளி என்பவன் அம்மா, அப்பா, தம்பி, தங்கை பாசத்தைமட்டுமே எடுத்துக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதற்கு நம்நாட்டில் எவ்வளவோ படங்கள் வந்து விட்டன. திரும்ப திரும்ப அரைத்த மாவை அரைப்பது கலை வளர்ச்சிக்கு உதவாது. படத்தின் கன்டென்ட் மாறினால் தான்சர்வதேச அளவிற்கு உயர முடியும். அதை கமல் செய்திருக்கிறார். இவர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள். ஆகையால் எதிர்க்கிறார்கள்.

கலைஞனுக்கு மொழி, நாடு என்ற பேதம் எதுவும் கிடையாது. கமல் ஓர் உன்னத கலைஞன். ஒரு குப்பியில் கமலை அடைத்து விட முடியாது. அப்படி நினைக்க நினைப்பவர்தோல்வியை தான் தழுவுபவர்கள். தனக்கு எதிராக பிண்ணப்பட்டிருக்கும் சதிவலையைக் கிழித்து, தடைகளைத் தாண்டி வெளிவந்து, விஸ்வரூபம் வெற்றிப் பெறவாழ்த்துகள்.

குறிப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) -ன் தலைவர்P. ஜைனுலாபுதீன் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் வின் டி.வி.யில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். நேயர்கள் கேள்விக்களுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சிஅது. அதில் ஒரு நேயர் திரு. அப்துல் கலாம் அவர்களைப் பற்றி கூறுங்கள் என்றார். உடனே கோபப்பட்ட திரு P.J., “அப்துல் கலாம் ஒரு முஸ்லீமே இல்லை அவர் முஸ்லீம் விரோதி. தன்னை இந்தியன் என காட்டிக் கொண்டாரே ஒழிய முஸ்லீமாக அவர் வாழவில்லை” என கதை அளந்தார். உலக அளவில் முஸ்லீம்சமுதாயத்திற்கு பெருமை சேர்த்த அப்துல் கலாமையே இப்படிப் பேசுபவர்களின் யோக்கியதை எப்படி இருக்கும்? இதற்கு செவி சாய்க்கும் தமிழக அரசின் யோக்கியதை எப்படி இருக்கும்?

சந்தர்ப்பவாதமும் அதிகாரமும் கை கோர்த்துக் கொண்டதில்..

கருத்து சுதந்திரம் பறி போனது காண்!

– சாமானியன்Leave a Reply