Search

சந்துருவுக்கு என்னாச்சு?

சந்துருவுக்கு என்னாச்சு?

சுமார் 7 வயது மதிக்கத்தக்க தருண் எனும் சிறுவனின் மனதில் எழும் கேள்வியான “சந்துருவுக்கு என்னாச்சு?” என்பதுதான் புத்தகத்தின் தலைப்பு.

குழந்தைகள் உலகம் கேள்விகளால் நிரம்பியது. அவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது போல் பெரியவர்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் விஷயம் வேறில்லை. அப்படித்தான், தருணின் கேள்வி அவனது அம்மா சரஸ்வதியை அதிர்ச்சியடைய வைக்கிறது. கொஞ்சம் அதட்டலுடன், அக்கேள்வியை எரிச்சலுடன் கடந்து விடுகிறார் சரஸ்வதி. இதற்கே தருண் தன் தந்தைக்குப் பயந்து, அவர் கொஞ்சம் தள்ளிச் செல்லும்வரை காத்திருந்தே தன் தாயிடம் கேட்கிறான். தந்தை முன் கேள்விகள் கேட்க தருண் ஏன் தயங்க வேண்டும்?

“எங்கம்மா போறோம்?”

“தொரைக்கு எங்கன்னு சொன்னாத்தான் வருவீங்களோ?”

‘உனக்கு கேள்வி கேட்கும் அதிகாரமில்லை’ என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைப்பதுதான் அவர்கள் மீது செலுத்தப்படும் உச்சபட்ச உளவியல் வன்முறையாக இருக்கும். இத்தகைய தருணத்தை, குறிப்பாக பெற்றோர்களிடம் இருந்து, எதிர்கொள்ளாத குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால் தருணுக்கு அத்தகைய அதிர்ஷ்டமில்லை என்பதோடு தனது அம்மாவும் பதில் சொல்லாமல் எரிச்சலுடன் கடப்பதால் சோர்வாகிறான்.

யாரிந்த சந்தரு? தருண் ஏன் அவனைக் குறித்து கேள்வியெழுப்ப வேண்டும்? இவர்கள் இருவருமே நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகள் உலகில் வசிக்கும் நமது சக தோழர்கள். அதில் ஒருவன், கனிகளிருப்ப காய்களைக் கவரும் அவசரத்தினர் நிரம்பிய பெரியோர் உலகை உற்று நோக்கும் சிறுவன்; இன்னொருவன், சக உலகில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு தனிமையில் இருக்கப் பிரியப்படும் சிறுவன். முதல் சிறுவனுக்கு இரண்டாம் சிறுவன் பெரும் புதிராக உள்ளான். மாற்றுத்திறனுடையவர்களைக்காணும் போது தருண் போன்ற பல சிறுவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை எப்படிக் கலைய என்ன செய்யலாம் என்ற சிறு ஒளியை அளிக்கிறது இச்சின்னஞ்சிறு நூல். இதுவொரு துவக்கம் தான். மீதம் நம் கையில் இருக்கிறது.

இந்த வகைமையில், இந்திய அளவில் இதுவே முதல் நூலெனத் தெரிகிறது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படவுள்ளது. சிறுவர்களுக்கான மிக எளிய மொழியில் பெரியவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது. ஐந்து நிமிடங்களில், அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குள், புத்தகத்தை முடித்து விடுவீர்கள். ஆனால் இப்புத்தகம் விதைக்கும் கேள்வியும், அது தொடர்பான எண்ணங்களும் மனதில் சுழன்றபடியே இருக்கும்.

யெஸ்.பாலபாரதியின் முந்தைய நூலான துலக்கமும் ஒரு சிறுவனைப் பற்றியே என்பது குறிப்பிடத்தக்கது. தனக்குப் பசித்தால்கூட சொல்லத் தெரியாத ஒரு சிறுவன் காணாமல் போனால் என்னாகும் என பதைபதைக்க வைக்கும் நூலது. அனைவரும் ஆட்டிசம் பற்றி அறிந்து கொள்ளவேண்டுமென்ற நல்லெண்ணத்தில், தனது வலைப்பதிவில், குழந்தைகளைப் பாதிக்கும் ஆட்டிசம் என்ற தலைப்பில் கட்டுரைகளைத் தொகுத்துள்ளார் பாலபாரதி.

– தினேஷ் ராம்