Shadow

சரிந்த கோபுரம் – சரியாத நம்பிக்கை

செப்டம்பர் மாதத்தின் இன்னொரு காலைப் பொழுது..

பெரியம்மா வீட்டில் இருந்ததால் மகனைப் பற்றிய கவலை இல்லை. வீட்டில் வேலைகளை முடித்து, பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்த மகளை பஸ்ஸில் ஏற்றி விட்டு நானும் ஆஃபீசுக்குக் கிளம்பினேன். இப்போது பள்ளிகள் திறந்து விட்டதால் வழக்கமான ட்ராஃபிக்குடன் குழந்தைகளை அழைத்துச் செல்லும் மஞ்சள் நிற பஸ்களின் கூட்டமும் சேர்ந்து கொள்ள எல்லாச் சாலைகளிலும் கூடுதல் வாகன அணிவகுப்பு. இது போன்ற காலை பரபரப்பில் வண்டி ஓட்டுகையில் ரேடியோவில் ஒளிபரப்பாகும் நகைச்சுவையான உரையாடல்களையும் பாடல்களையும் கேட்டுக் கொண்டே ட்ரைவ் செய்வது பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர்.

காரை நிறுத்திவிட்டு அலுவலகத்தில் நுழையும் வரை எதிர்படுவோரைப் பார்த்துப் புன்னகைப்பதும், தெரிந்தவர்களுக்கு குட்மார்னிங் சொல்லிக் கொண்டு கடந்து போவதும் எனக்கு அனிச்சையான ஒன்றாகி இருந்தது. பதிலுக்குக் கிடைக்கும் புன்னகையும், குட்மார்னிங்கும் நமக்குள் ஓர் உற்சாகத்தைத் தொற்றிக் கொள்ள வைக்கும். தினமும், “ஹாய் லதா, குட்மார்னிங்” என்று சிரித்த முகத்துடன் காலை வணக்கம் சொல்லும் ரான், வழக்கத்திற்கு மாறாக என் குட்மார்னிங்கைப் பொருட்படுத்தாமல் முகம் சிவந்து கோபத்தோடும், ஒரு வித மூர்க்கத்தனத்தோடு கடந்து போனது ஆச்சர்யமாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது. என்னக் காரணமாயிருக்கும் என யோசித்துக் கொண்டே., ‘ஹ்ம்ம்ம்ம்.. க்ரேசி அமெரிக்கர்கள்’ என நினைத்துக் கொண்டே என் இருக்கையை அடைந்தேன். இந்நாள் ஐடி ப்ரொக்ராமராக இருந்தாலும் அவர் ஒரு முன்னாள்அமெரிக்க ராணுவ வீரர்.

ஆசுவாசமாய் இருக்கையில் உட்கார்ந்த பின்னர்தான் அலுவலகத்தில் வழக்கத்திற்கு மாறான பரபரப்பும் , சலசலப்பும் நிலவுவதைக் கவனித்தேன்.

‘கான்ட் பிலீவ் திஸ்!!’

‘வாட்ஸ் ஹாப்னிங்?’

‘தட் இஸ் டெரிபிள்.’

இப்படி இன்னும் பலவாகில் பயம், பதட்டம், அதிர்ச்சி, ஆதங்கமென கலவையான உணர்வுகளோடு குரல்கள்.

9/11 தாக்குதல்

“ஐ கான்ட் கெட் இன்டு யாஹூ. கேன் யூ ட்ரை?” என்றவுடன்.. என்ன ஏது என்று கேட்க, “ஓ! யூ டின்ட் நோ? வேர்ல்ட் ட்ரேட் சென்ட்டர் இஸ் ஹிட் பய் எ பிளேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒருவர் வேகமாக வந்து இரண்டாவது கட்டடமும் இன்னொரு விமானத்தால் இடிக்கப்பட்டு விட்டது என்று அலற, அவசர அவசரமாய் யாஹூ செய்தியில் பார்த்தால் ட்ரேட் சென்ட்டர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. கடவுளே என்ன இது என்பதைத் தாண்டி வேறெந்த உணர்வும் தோன்றாமல் உறைந்து போனேன். இந்தக் கட்டடத்தில் உள்ள அலுவலகத்தில் தான் என் கணவரும் பணி செய்வதாக இருந்தது.

என்ன ஏதென்றே புரியாத ஒரு சூழல். ஆரம்பத்தில் எல்லோரும் எதிர்பாராத விபத்து என்றே நினைத்தோம். சிறிது நேரத்தில் தீவிரவாத தாக்குதல் என்று தெரிந்ததும், அலுவலகத்தில் உள்ள எல்லோரும் நிலைகுலைந்து போனோம். கணவர், குழந்தைகள், குடும்பம் என ஆளாளாளுக்கு விசாரிக்க ஆரம்பித்தோம். அதற்குள் இந்தியாவில் இருந்து அம்மா, அப்பா , அக்கா, தங்கை, தம்பி எனக் கவலையோடு ஃபோன் செய்ய ஆரம்பித்தனர். எனக்கிருந்த மனநிலையில், “எல்லாம் டிவியில் பார்த்துக் கொள்ளுங்கள். நான் வீட்டிற்கு வந்த பின்னர் பேசுகிறேன் எனக் கூறிவிட்டு பெரியம்மாவைத் தொடர்பு கொண்டு மகள் பள்ளியில் இருந்து வந்து விட்டாளா?” என்று கேட்டு, வந்து விட்டதை உறுதி செய்த பின்னரே பாதி உயிர் வந்தது. அதற்குள் என் மீதி உயிர் என்னைத் தொடர்பு கொண்டு நான் பத்திரமாய் இருப்பதை உறுதி செய்து கொள்ள, அவரை சீக்கிரமே வீட்டிற்கு வந்துவிடச் சொன்னேன்.

என்னளவில் என் குடும்பம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தது ஆசுவாசமாய் இருந்தாலும், அங்கே ட்ரேட் சென்ட்டரில் வேலை செய்து கொண்டிருந்த தெரிந்த நண்பர்கள் சிலரின் நினைப்பு வர துக்கம் தொண்டையை அடைத்தது. ஏனெனில் தீப்பற்றி எரியும் இரண்டு மாடிக் கட்டடங்களும், அதிலிருந்து வெளி வரும் கரும்புகையும், சிதைந்து கொண்டே வரும் கட்டிடத்திலிருந்து மூக்கைப் பொத்திக் கொண்டு ஓடும் மக்கள் கூட்டமும், தீ ஜுவாலையிலிருந்து தப்பிக்க மாற்று வழி தெரியாமல் மாடியிலிருந்து குதிப்பவர்களும், அந்தக் காட்சியை நேரில் அழுது கொண்டே பார்க்கும் மக்கள் கூட்டமும், மக்களை அந்தத் தெருக்களில் வர விடாமல் தடுக்கும் போலீசும் , தீயணைப்புப் படையினரும் என்று பார்க்கவே மனம் பதைபதைத்தது!

இதற்கிடையே இன்னும் இரண்டு பெரிய விமானங்கள் ஒன்று பென்டகனை நோக்கியும், மற்றொன்று வெள்ளை மாளிகை நோக்கியும் சென்று கொண்டிருப்பதாக வந்த செய்திகள் கலக்கத்தை மேலும் அதிகமாக்க, எல்லோர் முகத்திலும் மரணபீதி. அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாத நிலை.

9/11 victims

இந்தக் களேபரத்திற்கு இடையே அலுவலகத்தில் யாரோ ஒரு புண்ணியவான் இந்தியர்கள்தான் இக்கொடியச் செயலை செய்திருக்கிறார்கள் என்றவுடன் எனக்குப் பயமாகி விட்டது . அய்யய்யோ நம்மாளுங்க எதற்காக அமெரிக்கா மீது, அதுவும் இத்தனைக் கோரமான ஒரு தாக்குதல் நடத்த வேண்டும்? நாமொன்றும் அத்தனை மோசமானவர்கள் இல்லையே எனக் கலக்கத்துடன் கணினியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். செய்தியாளர்களும் பதற்றத்தில் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் மேல் தாக்குதல் நடத்தியது ஏதோ ஒரு தீவிரவாத கும்பல் என்பது மட்டும் புரிந்தது. ஒரு வழியாய் இந்தக் கொடியச் செயலை செய்தது ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கிய பின்லேடனைச் சேர்ந்த ஒரு தீவிரவாத இயக்கம் என்றும், ஆப்கானிஸ்தான் எங்கிருக்கிறது என்று வரைபடத்தில் காட்டி தீவிரவாத இயக்கத்தின் பெயர் அல்கொய்தா என்று சொல்லவும்தான் அப்பாடா என்றிருந்தது. இந்தியாவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிற தகவலை அலுவலகத்தில் உள்ள எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். ஹும்ம்ம்.. அத்தனை அதிர்ச்சியிலும் ஓர் ஓரத்தில் என் கவலை எனக்கு.

இதை இங்கே குறிப்பிடக் காரணம், பின்னாளில் அல்கொய்தா இயக்கத்தைப் பற்றியும், அவர்களின் கொலைவெறிகள் பற்றியும் சாமானிய அமெரிக்கர்களுக்குத் தெரிய வர அவர்களோ இந்தியர்களை, பாகிஸ்தானியர், ஆப்கானிஸ்தானியர்களிடமிருந்து இனம் பிரித்து பார்க்கத் தெரியாமல் ப்ரெளன் நிறமும், தலையில் டர்பன் கட்டியவர்களெல்லாம் தீவிரவாதிகள் என நினைத்துக் கொண்டு அப்பாவி பஞ்சாபிகளைத் தாக்கத் துவங்கினர். நாட்டின் சில மாநிலங்களில் நடந்த தாக்குதலில் உயிரிழப்புகள் கூட ஏற்பட்டன.

மாநில அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அனைவரையும் வீட்டிற்குச் செல்லுமாறு கவர்னரிடம் இருந்து அவசர உத்தரவு வந்தவுடன் தெரு முழுவதும் நிலைகொள்ளா மனிதர்கள் கூட்டம் அவரவர் கார்களில்! பஸ்சிற்கு காத்திருந்த மக்கள் அனைவரிடத்திலும் ஒரு வித பதற்றம்.இந்தக் கூட்டத்தில் செல்ல விருப்பமின்றி வேறு சில நண்பர்களுடன் அலுவலகத்தில் காத்திருந்த நேரத்தில் பெனிசில்வேனியா மாநிலத்தில் ஒரு விமானம் தரையில் மோதியதில் அனைவரும் இறந்த செய்தி அடுத்த இடியாக வந்தது.

அதில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு வந்த கைப்பேசி குறுஞ்செய்திகளில் அந்த விமானத்திற்குள் தீவிரவாதிகளுடன் பயணிகள் போராடியதையும் தங்களால் முடிந்த வரை நாட்டிற்கு தீங்கு வராமல் இருக்க உயிரை இழக்கப் போகிறோம் ஐ லவ் யூ என்று தங்களுக்கு வந்த செய்திகளை கண்ணீர் வழிந்தோடப் பேசியதை அனைத்து நியூஸ் சேனல்களிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கச் சோர்ந்து போனேன்.

இதற்கிடையில் நான்காவது விமானம் அமெரிக்க ராணுவ மையமான பென்டகனை தாக்கியதில் நாடே அதிர்ச்சியில் உறைந்தது. அதே நேரத்தில் ஒரு பள்ளியில் குழந்தைகளுக்குப் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த ஜனாதிபதி புஷ்ஷும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட, நாட்டின் மிக முக்கியமான இடங்களுக்குப் பாதுகாப்புகள் அதிகரிக்க, நியூயார்க் மாநிலம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நாடெங்கும் ஒரே கலவரம். என்ன ஏது என்று நாட்டின் மற்ற பகுதி மக்களுக்குப் புரிவதற்குள் என்னென்னவோ நடந்து விட்டிருந்தது.

கைப்பேசி இணைப்புகள் துண்டிக்கப்பட, பஸ்கள், சுரங்கப்பாதை ரயில்களும் ஓடாத நிலையில் அன்று முழுவதும் புகைக்கு நடுவே புரியாமல் ஓடும் மக்களையும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ்காரர்களும், இவர்களுக்கிடையில் தீயணைப்பு வண்டிகளும் , வீரர்களும், அவசர மருத்துவ வண்டிகளின் சைரன் ஒலிகளும் என்று நகரமே தில்லோலகமாக இருந்தது. இங்கோ அலுவலகத்தில் இருந்த நாங்கள் அனைவரும் ஒரு வித கலவரத்துடனே இருந்தோம். நகரின் உயரமான கட்டிடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு மக்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள். ஒக்லஹோமா நகரில் நடந்த பாதிப்பைப் பார்த்து அதிர்ந்தவர்களுக்கு இந்த எதிர்பாரா இரட்டைக்கோபுர தாக்குதல் மீளா அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது.

கட்டடத்தில் சிக்கியிருந்த மக்களை காப்பாற்றச் சென்ற போலீஸ், தீயணைப்புப்படை வீரர்களுடன் அப்பாவி பொது மக்களும் என்று கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் வரை உயிரிழந்தனர். செப்டம்பர் 11 அமெரிக்க வரலாற்றின் கருப்பு நாள். அன்று எரிய ஆரம்பித்த அந்த இரு கட்டடங்களின் புகை பல மைல்களுக்கப்பால் தெரிய, சில மாதங்கள் வரை இது தொடர்ந்தது. நாட்டின் பல இடங்களிலிருந்தும் தீயணைப்பு படைவீரர்கள் வந்து அழிவிலிருந்து உடல்களையும், பொருட்களையும் அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். செப்டம்பர் 11, 2001இல் ஆரம்பித்த துப்புரவுப் பணிகள் ஒரு வழியாக 2002 மே மாதம்தான் முடிவடைந்தது.

9/11 now

அந்தச் சிதிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீயில் உருகிய இரும்புச் சட்டங்களும், சில புகைப்படங்களும் அந்தக் கொடியச் செய்தியை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டி வெவ்வேறு கண்காட்சிகளில் வைக்கப்பட்டிருக்கிறது. இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் இன்று அத்தனைக்கும் சாட்சியாக ஒரு நினைவு சதுக்கம் துயரம் சுமந்த அமைதியோடு நிற்கிறது.

இந்தக் கோரத் தாக்குதல் அமெரிக்கர்களின் வாழ்க்கையில் நிறையவே பாதிப்புகளையும் எண்ண மாற்றங்களையும் உருவாக்கி இருக்கின்றன. இந்தச் சம்பவத்தின் பின்னரான காலத்தில் மக்களின் கொந்தளிப்பை, எண்ணப் போக்கினை அமெரிக்க நிர்வாகம் திறமையாகவும் லாவகமாகவும் கையாண்டது என்றே சொல்லலாம். ஏனெனில் கொஞ்சம் பிசகினாலும் அமெரிக்காவில் குடியேறி வாழும் ஆசிய மக்களின் பாதுகாப்புக்குப் பெரும் கேடு நிகழ்ந்திருக்கும். இருந்தாலும் ஒன்றிரண்டு சம்பவங்களோடு அவை அமைதியாகிப் போயின. என்னிடமும், என் கணவரிடமும் பல தருணங்களில் அமெரிக்க நண்பர்கள் உங்களுக்குப் பிரச்னை ஏதுமில்லையே என்று கவலையுடன் விசாரிக்கவும் செய்ததை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.

‘அவர்கள் செய்தார்கள். அதனால் பதிலுக்கு நாங்கள் செய்கிறோம்’ என ஒவ்வொருவரும் தங்களுடைய செயலுக்கு நியாயம் கற்பிப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படும் இந்த மனப்போக்கு மிகவும் ஆபத்தானது. ‘அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துகிறேன்’ என்கிற விதண்டாவாதத்தில் அழிவது, இவர்களின் பிரச்சினையில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத அப்பாவிகள்தான்.

– லதா