Shadow

சான் ஆன்ட்ரியாஸ் விமர்சனம்

சான் ஆன்ட்ரியாஸ் விமர்சனம்San Andreas

சான் ஆன்ட்ரியாஸ் படம் நில நடுக்கத்தை மையமாகக் கொண்ட படம். இப்படம் மே 29ஆம் தேதி வெளியானது. படத்தின் பிரமோஷன் மற்றும் மார்க்கெட்டிங்கில் தீவிரமாக படக்குழுவினர் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஏப்ரல் 15 அன்று நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. படத்தின் பிரமோஷன்களை அப்படியே நிறுத்தி, என்னச் செய்யலாமென யோசிக்கத் தொடங்கினர். படத்தைத் தயாரித்த “வார்னர் பிரதர்ஸ்”, ஒரு பெரிய தொகையை நிவாரண நிதியாக அளித்தாலும், ‘வேறென்னச் செய்ய முடியும்?’ என யோசித்து, நில நடுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக படத்தை முன்னெடுத்துச் சென்றனர். படத்தைப் பற்றி நாயகனான வ்ரெஸ்லிங் புகழ் ‘ராக்’ கூறும்பொழுது, “சோதனையான காலக்கட்டத்தில் ஒன்றினையும் குடும்பத்தின் பிணைப்புத்தான் உண்மையான பலமென்பதை படத்தில் சொல்லியுள்ளோம். அதுதான் படத்தோடு என்னை ஒன்றிணைத்த விஷயம்” எனக் கூறியிருந்தார்.

ஆனால் படத்தின் கதையெனப் பார்த்தால் அரத பழையதே! சுவாரசியமற்ற திரைக்கதையும் சோடை போய்விட்டது. இயற்கைச் சீற்றத்தில் மாட்டிக் கொள்ளும் தன் குடும்பத்தினரை நாயகன் காப்பாற்றுகிறான். எனினும் பழைய கள் புது மொந்தையில் எனும் பழமொழிக்கேற்ப, நிலநடுக்கத்தை முப்பரிமாணத்தில் அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளனர்.

ஒரு மலைப் பள்ளத்தாக்கின் பிளவில் காருடன் விழுந்துவிடும் பெண்ணைக் காப்பாற்றும் காட்சியில் அறிமுகமாகிறார் ட்வெயின் ஜான்சன். மனதை பதைபதைக்க வைக்கும் காட்சி அது. முப்பரிமாணத்தில் பார்த்தாலே மட்டுமே அதை உணர இயலும். 20 கோடியில் தயாரிக்கப்பட்ட வெற்றிப் படமான 2012-ஐ விட, இப்படம் பட்ஜெட்டில் 10 கோடி குறைவெனினும், 3டி- கிராஃபிக்ஸில் எந்தக் குறையும் வைக்காமல் அசத்தியுள்ளது படத்தின் தொழில்நுட்பக் குழு. ஹூவர் அணை உடைவது, விண்ணை முட்டும் கட்டங்கள் அப்பளம் போல் நொறுங்கி விழுவது, சுனாமி அலைகள் எழுவது, வெள்ளக்காடாகும் சான் ஃப்ரான்சிஸ்கோ என கிராஃபிக்ஸ் செய்நேர்த்தி பிரமிக்க வைக்கிறது.

படத்தின் நாயகன் ட்வெயின் ஜான்சன்தான் எனினும், அவரது மகள் ப்ளேக் (Blake) ஆக நடித்திருக்கும் அலெக்சாண்ட்ராவைச் சுற்றியே படம் நகர்கிறது. வாயாடிச் சிறுவன் ஓலீஸாக நடித்திருக்கும் ஆர்ட் பார்கின்ஸன் எனும் சிறுவன், அவனது துடுக்கான பேச்சாலும் புன்னகையாலும் கவருகிறான். எனினும் ராக்கின் அறிமுக காட்சியில் இருந்த பதைபதைப்பு, மையக் கதை தொடங்கும்போது இல்லாமல் போவது திரைக்கதையின் பலவீனம். கதாப்பாத்திரங்களின் பதைபதைப்பு நமக்குக் கடத்தப்படாததால், தொழில்நுட்பத்தால் சாத்தியமான பேரிழவுக் காட்சிகளுக்கு மெளனச் சாட்சியாக இருந்துவிட்டு, படம் முடிந்ததும் எந்த உனர்வும் பாதிப்புமின்றி ‘தேமோ’வென வெளியேற வேண்டியுள்ளது.