சித்தமருத்துவம் சித்தர்களால் பாடல்களாகப் பாடப்பட்டு தலைமுறை தலைமுறையாக கொண்டு வரப்பட்டது. அது பின்னாளில் குடும்ப சொத்தாக கருதப்பட்டு, சுயநலத்துடன் மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதால் மெல்ல அழியத் தொடங்கியது. பின்னர் நல்லோர் சிலரால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக சித்தமருத்துவ நூல்கள் பாதுகாக்கப்பட்டதுடன், அந்தத் தகவல்கள் மக்கள் மத்தியில் சென்றடையவும் தொடங்கியது. ஆயினும் இன்றும் கூட, சிலர் தங்களது சொத்துப்போல் சித்தமருத்துவத்தினைக் கருதுவது சித்தமருத்துவதிற்கு ஏற்பட்ட சாபக்கேடாகும்.
சித்த மருத்துவ விழிப்புணர்வை மக்களிடையே இணையம் மூலமாக ஏற்படுத்தும் பதிவர்கள் பலர் உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களில் பதிவர் சாமீ. அழகப்பனும் ஒருவர். அவரது தளத்தின் பெயர் மச்சமுனி.காம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான மச்ச முனி சித்தரின் பெயரால் ஒரு தளம் இயங்குகிறது என்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம். அவர் சமீபத்திய பதிவொன்றில், சித்த மருத்துவத்தைப் புகழ்கிறேன் பேர்வழி என அலோபதி மருத்துவ முறையை மட்டம் தட்டியுள்ளார்.
ஒரு மருத்துவ முறை சிறந்தது எனச் சொல்லும் பொழுது மற்ற மருத்துவ முறைகள் கீழானவை எனப் பொருளில்லை. ஒவ்வொரு மருத்துவத்திலும்.. அதற்கான சாதகங்களும் பாதகங்களும் உண்டு. அந்த அடிப்படை கூட தெரியாமல்.. யாரோ ஒருத்தர் புத்தகம் எழுதிட்டாரு, அதனால அலோபதி குப்பை, சித்தமருத்துவம் சூப்பர் எனக் கூவுவது சரியில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, அலோபதி மருத்துவர்கள் அனைவரும் கோடி கோடியாக சம்பாதிக்கறார்கள் என வயிற்றெரிச்சல் வேறு. அவர்கள் சம்பாதிக்கிறார்கள் என்றால், தொழில் நுட்பத்தை பொதுவில் வைத்து விவாதிக்கின்றனர். இவர்களோ அது ரகசியம், இது ரகசியம், சொன்னா குரு கண்ணைக் குத்துவாரு, காதை திருகுவார்ன்னு கதை சொல்லிட்டு வளரலைன்னா.. எங்க இருந்து வளரும்??
தோழி அவர்களைப் பொறுத்த வரை, பழையப் புத்தகங்களில் இருக்கின்ற தகவல்களைத் தேடித் திரட்டி, ‘இங்க பாருங்க. இதெல்லாம் கூட இருக்கு பாருங்க’ன்னு பகிரும் ஒரு குழந்தையின் உற்சாகம்தான் இருக்கு. எங்கேயும் எனக்குத் தெரிந்து அவருடைய மேதாவித்தனமோ அல்லது தனக்குத்தானே ஒளிவட்டம் போட்டுக் கொள்கிற விளம்பரப் பிரியமோ இல்லை.
ஆனால் சாமீ அழகப்பன் ஆரம்பம் தொட்டே தன்னுடைய இமேஜை வளர்க்கவும், தானொரு வைத்திய சிகாமணி என நிறுவத் தான் படம் காட்டுகிறார். மேலும் தோழி சித்தர் பாடல்களை முன் வைப்பதை குப்பைகளைக் கொட்டுவது என்கிறார். அதாவது இவரால் விளக்கம் சொல்ல முடிந்த பாடல்களைத் தவிர்த்து ஏனைய சித்தர் பாடல்கள் குப்பைகளாம். என்னக் கொடுமை இது!? அதே போல் தோழி அலோபதிதான் உயர்ந்தது என சொல்கின்ற மாதிரியும் ஒரு மாய பிம்பத்தை (2626) வலிந்து கட்டமைக்கிறார். ஏன் இந்த துவேஷம்? வயதிலும், அனுபவத்திலும் பலமடங்கு இளையவரான சக பதிவரை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. திட்டமிட்டு அவரை மட்டம் தட்டி மகிழும் வக்கிரத்தை என்னவென்பது? இது உள்ளார்ந்த பொறாமை அல்லது இயலாமையின் வெளிப்பாடாகத் தானே இருக்கும்!?
தகவல்களைப் பொதுவில் பகிர்வதால், அது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால் தன்னுடைய குட்டு அம்பலமாகிவிடுமோ என்கிற பதட்டமே இப்படிலாம் செய்யத் தோன்றுகிறது. இது, தமிழ் மருத்துவம் என்பது சிலர் வீட்டு சொத்தாகவே இருக்க வேண்டுமென்கிற பழமைவாத மனப்போக்கின் அருவருப்பான உளவியலை தான் காட்டுகிறது.
இறுதியாக ஒன்று.
விமர்சனம் என்பது வேறு. விஷம் கக்குவது என்பது வேறு. விஷக்கடிக்கு எல்லா மருத்துவத்திலும் மருந்துண்டு. ஆனால் மனதில் ஊறும் விஷமெல்லாம் ஈசனின் கருணை இருந்தால் தான் அகலும்.
– சிம்ம வாகனி