Shadow

சிங்கமுக ஆசிரியர்

ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாண மண்ணில் தொடங்கிய நான் சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்து நாவலப்பிட்டி எனும் ஊருக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தேன். அங்கே அடுத்த வகுப்பினில் ஓராண்டு படித்தேன். பின் தந்தையின் வேலை மாற்றத்தால் எட்டியாற்தோட்டை எனும் ஊருக்குச் சென்றோம். அங்குள்ள தமிழ்ப் பாடசாலையில் அடுத்த இரண்டாண்டுகள் படித்தேன். மீண்டும் மாற்றலான தந்தையைப் பின்தொடர்ந்த நாங்கள் இரத்தினபுரி என்ற நகரில் சுமார் ஆறாண்டுகள் வாசம் செய்தோம்.
இரத்தினபுரி தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரம் வரை பயின்று அதில் சித்தியும் பெற்றதோடு ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாகவும் திகழ்ந்தேன். அந்தப் பாடசாலையில் ஸ்திரமாக எனது பெயரை, கல்வி மற்றும் பிற துறைகளில் நிலை நாட்டினேன். கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தையும் அங்கே தொடரலாம் என்ற என் கனவு பொய்யானது.
தந்தை மீண்டும் மாற்றலுக்குத் தயாரானார். அது பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான முன்னேஸ்வரம் அமைந்திருக்கும் சிலாபம் நகரம். முன்னேஸ்வரம் பற்றி முன்னரே அறிந்திருந்ததால் அங்குச் செல்லப் போவது அறிந்து மகிழ்ச்சியில் மூழ்கியது மனம். இந்த மகிழ்ச்சியை அங்கே தொலைக்கப் போகின்றோம் என்பதை நான் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.
சிலாபம் அழகிய நகரம். அங்கே எங்களது உறவினர்களும் வசிக்கின்றனர். அங்கே சென்று ஓரிரு நாட்களில் உறவினரின் உதவியோடு என்னையும் தம்பிமார் இருவரையும் பாடசாலையில் சேர்க்க அப்பா அழைத்துச் சென்றார். எப்போதுமே துடுக்குனத்தனமிக்க குறும்புக்காரியான நான் அந்த உறவினரிடமும் எனது வேலையைக் காட்டினேன்.
பாடசாலை அதிபரும் எனது உறவினரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் உடனேயே பாடசாலையில் இணைத்துக் கொள்ள சம்மதித்து விட்டார். கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றதாலும், கணக்கியல் துறையில் எனக்கு இருந்த ஆர்வத்தை அறிந்திருந்த பெற்றோரின் ஆதரவாலும்  கல்விப் பொதுத்தராதர உயர்தர தரத்தில் கணக்கியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். எதிர்காலத்தில் கணக்கியளாராக வேண்டுமென்பது தான் இலட்சியம்.
இதுவரை கல்வி கற்றுவந்த பாடசாலைகளில் மூத்த சகோதரர்களே  என்னையும் என் தம்பிமார்களையும் அழைத்துச் சென்று வந்தனர். ஏதேனும் வகுப்பில் சக மாணவர்களுடன் சண்டை என்றால் உதவிக்கு ஓடிவருவார்கள். இது எங்களது அன்றாட வழக்கமாக இருந்து வந்தது.
மூத்த சகோதரர்கள் பாடசாலைக் கல்வியை முடித்து மேற்படிப்பினைத் தொடர சென்று விட்டதால், இது வரை அவர்கள் செய்து வந்த பொறுப்பு தானாகவே என் மீது சுமத்தப்பட்டது.
முதல் நாள். அழகாக உடுத்திக் கொண்டேன். புதிய வகுப்பு. புதிய பாடசாலை. புதிய ஊர். முன்பே முஸ்லிம்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பழகிய அனுபவம் எதுவுமில்லை. அதனால அவர்கள் மொழிநடை, உடை, பாவனை என எல்லாமே புதிதாகத் தோன்றியது.
வீட்டிலிருந்து சுமார் 15 நிமிட நடை தூரத்தில் இருந்தது அப்பாடசாலை. தம்பிமார் இருவரோடும் பேசிக் கொண்டே பாடசாலையை நெருங்கி விட்டேன். நஸ்ரியா முஸ்லிம் மத்திய கல்லூரி. இது தான் எனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் பாடசாலை.

பாடசாலையை நெருங்க நெருங்க என்னுள் ஓர் அந்நியத்தன்மை தோன்ற ஆரம்பித்தது. அதிபரின் அறையை அடைந்ததும் அதுவே பின்னர் பயமாக மாறியது. என்னைக் கண்ட அதிபர், ஒரு மாணவனை அழைத்து, எனது வகுப்பறையைக் காட்டச் சொல்லி விட்டு தனது பணியில் மூழ்கி விட்டார்.
தம்பிமார் இருவரும் அவர்கள் வகுப்புக்குச் சென்று விட்டனர். எனது வகுப்பறையைக் காட்டிவிட்டு அழைத்து வந்த மாணவனும் காணாமல் போய்விட்டான். திரும்பிப் பார்த்தால்… யாருமற்ற காட்டில் தன்னந்தனியாக நிற்பது போன்ற ஓர் உணர்வு. பயம் அதிகரிக்கத் தொடங்கியது. மெதுவாக காலடி எடுத்து வைத்து, வகுப்பறைக்குள் சென்றதும் சிங்கத்தின் குகைக்குள் செல்வது போல உடல் நடுங்கத் தொடங்கியது. அது கலவன் பாடசாலை. பெண்கள் பகுதியில் முதல் வரிசையில் 2 பெண்கள் அமர்ந்திருந்தனர். நான் இரண்டாவது வரிசையில் பணக்கார வாடையுடன் கூடிய ஒரு பெண்ணின் அருகில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். சுற்றிலும் பார்வையைச் செலுத்தினேன். அனைத்துமே புதுசு. கரும்பலகையும் இரண்டு மாடி அடுக்குக் கட்டிடங்களைத் தவிர.
பாடசாலை மணி அடித்தது. அதிபர் ஒருவரை அழைத்து வந்து இவர் தான் உங்கள் வகுப்பாசிரியரும், பொருளியல் பாட ஆசிரியரும் என அறிமுகம் செய்து வைத்து விட்டு மாயமாய் மறைந்தார்.
சற்று பெரிய தாடி மீசையுடனும், தலையில் முஸ்லிம்கள் அணியும் தொப்பியுடனும், கையிலே தடித்த புத்தகத்தைப் பிடித்தவாறும் காணப்பட்ட அவர் உருவம் என்னை மேலும் நிலை குலைய வைத்தது.
“ரெஜிஸ்டர் மார்க் பண்ணப் போறன். எல்லாரும் உங்கட பெயரைச் சொல்லுங்கோ” என்றதும் ஒவ்வொருவரும் எழும்பி தங்களை அறிமுகம் செய்தனர். எனது முறை வந்தது. எழுந்து நின்றேன். பேச்சே வரவில்லை வகுப்பே அமைதியாக இருந்தது. ரெஜிஸ்டர் மார்க் பண்ணியபடியே இருந்த ஆசிரியர், எனது அமைதியான நிலை கண்டு நிமிர்ந்து, ” உன் பெயரென்ன?” என இயல்பாகத்தான் கேட்டார். எனினும் நான் இருந்த மனநிலையில் அந்தக் குரலும, தாடியை அவர் நீவிவிட்டபடியே கேட்ட அவர் முகமும் சிங்கம் கர்ச்சிப்பதாகவே தோன்றியது. சிங்கத்திடம் மாட்டிய முயலாய் தவித்தது என் மனம்.  கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. ஏனோ வார்த்தை மட்டும் எவ்வளவோ முயன்றும் தொண்டைக் குழியில் சிக்கித் தவித்தது.
எழுந்து என்னருகே வந்த ஆசிரியர், “உனக்கென்ன? வாயில கொழுக்கட்டையா வச்சிருக்க? வாயத்திறந்து பெயரைச் சொன்ன என்ன குறைஞ்சா போயிடுவ? பேச்சுப் போட்டி, விவாதப் போட்டி எண்டு கலக்கி இருக்கிறாய். சேர்ட்டிபிக்கேட் எல்லாம் பார்த்தனான். உன்ர குறும்புச்சேட்டை எல்லாம் எனக்குத் தெரியும்” என மேலும் அவர் பேசிக் கொண்டிருக்க.. என் மனமோ, ‘அடடா! இவரும் உறவினரின் நண்பர் எனத் தெரியாமப் போச்சே! இப்படி எல்லாம் நடக்கும் எண்டு தெரிஞ்சிருந்தா.. அந்த உறவினரிடம் கொஞ்சம் அடக்கியே வாசிச்சிருப்பேனே! டூ லேட்’ என என்னையே சபித்துக் கொண்டிருந்தது.
பொறுமை இழந்த ஆசிரியர் எட்டி அருகிலிருந்த மாணவரின் புற்றூலரைக் கையில் எடுத்து அடிக்க ஓங்கிய போது, பாசக்கயிற்றை என்மீது வீசும் எமதர்மராஜனாகத் தெரிந்தார் ஆசிரியர்.
ஏற்கனவே பழக்கப்படாத முகங்கள், அவர்கள் மொழிநடை வேறு புரிந்து கொள்ள முடியவில்லை என்ற குழப்பமான புதிய சூழல். முதல் நாளே அடி வாங்கப் போகின்றோமே என எண்ணி, இருந்த தைரியம் முழுவதையும் திரட்டி, “கிருபாலினி” எனக் கீச்சுக் குரலில் சொல்லி முடித்தேன். “ம்.. ம்..” என கர்ஜித்த அவர் குரலுடன் சேர்ந்தே அடுத்த பாடத்திற்கான மணியும் அடித்தது. ‘அப்பாடா!’ என சற்றுத் தெம்பு வந்தது.  8 மணி நேரம் 8 யுகங்களாகத் தோன்றியது. எப்போது பாடசாலை விடும் என நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தேன். அடுத்து நடந்த எந்தப் பாடமோ விடயங்களோ என்னை சிறிதும் சலனப்படுத்தவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்ற ஓர் நிலை.
பாடசாலை விடப்படுவதற்கான மணி அடித்தது. அந்த மணியின் ஒலி ஓய்வதற்குள் நான் வீட்டை அடைந்து விட்டேன். பி.டி. உஷா கூட அன்று என்னோடு போட்டி போட்டிருந்தால் தோற்றுப் போயிருப்பார். வீட்டையடைந்ததும் எப்படி வாசற்கதவைத் திறந்தேன் என்றே தெரியாது. புத்தகங்களைத் தூக்கி வீசி எறிந்து விட்டு அம்மாவைக் கட்டிப்பிடித்து, “இனி நான் ஸ்கூல் போகமாட்டேன். எனக்கு புது ஸ்கூல் பிடிக்கேல… அங்க ஒருத்தரையும் தெரியாது. அவங்கட பாஷையும் விளங்கேல… சேர் திட்டுறார்” எனக் கதறி அழத் தொடங்கினேன். அழுகையை நிறுத்த சுமார் 2 மணி நேரமாச்சு.
எனது அழுகையைக் கண்டு அதிர்ச்சியுற்ற அம்மா, நான் ஸ்கூல் போகாததற்கு சொன்ன காரணத்தைக் கேட்டு சிரித்தார். பின், “நல்ல ஸ்கூல் எங்கட சொந்தக்காரர் எல்லாம் படிக்கினம் நல்லா விசாரிச்சுத்தானே சேர்த்தனாங்க” என்றவர் என் அழுகை மேலும் அதிகரிப்பதைக் கண்டு என்னைச் சமாதானப்படுத்தத் தொடங்கினார்.
அந்த நேரம் பார்த்து அங்கு வந்த என் அண்ணா, “சரி சரி இனிமே நீ ஸ்கூல் போகவேணாம்” என்று எனக்குச் சார்பாகப் பேசியதும் அழுகையை நிறுத்திக் கொண்ட நான், அண்ணனின் அடுத்த கேள்வியில் ஒரு கணம் ஆடித்தான் போனேன்.
“எங்க தம்பிமார்?”
தம்பிமாரை அழைத்து வருவதைக் கூட மறந்து விட்டதை அண்ணனின் கேள்வியால் தான் நினைவுக்கே வந்தது. அப்போது பெரியதம்பியின் கைகளைப் பிடித்தவாறு அழுத அழுது சிவந்த முகத்தோடு இளையதம்பி வந்து கொண்டிருந்தான்.
அதைப் பார்த்து நிலைமையைப் புரிந்து கொண்ட அம்மா அவனைக் கட்டிப்பிடித்து, “என்னடா” எனக் கேட்க, “அவனுக்கு ஸ்கூலுக்குப் போகப் பிடிக்கேலயாம். புது ஸ்கூலாம். ஒருத்தரையும் தெரியாதாம். வகுப்பில ஒரே அழுகை. டீச்சர் கூப்பிட்டு என்னட்ட சொன்னவ” என நான் சொன்ன அதே காரணங்களுடன் மிகவும் அமைதியாகச் சொன்னான்.
அம்மா இருவரையும் அழைத்துச் சென்று சாப்பாடு பரிமாறினார். கிரிக்கெட் விளையாட எங்களை அழைத்தான் அண்ணா. நான் விளையாட்டு சுவாரசியத்தில் அனைத்தையும் மறந்து விட்டேன். இரவாகி விட்டது. என்னை அழைத்த அம்மா, கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தின் முக்கியத்துவம் பற்றி சொன்னவர்.
பாடசாலை செல்ல அடம்பிடிக்கும் சிறு குழந்தைகளின் மத்தியில் பாடசாலைக்கு முதல் ஆளாகச் செல்லத் தயாரான என்னைப் பார்த்துத் தான் பெருமைப்பட்டதாகவும், வளர்ந்த நானே இப்படிலாம் சொன்னால் இளையதம்பியின் நிலை என்ன?  எல்லாம் பழகப் பழக சரியாகிவிடும் என்றார். “பிறக்கிற குழந்தை எல்லாம் பழகிக் கொண்டா வருது? நீ போகாவிட்டால் இளைய தம்பியும் போக மாட்டான். பிறகு உங்களின் எதிர்காலம்? பெரிய தம்பி எவ்வளவு சாதாரணமா இருக்கிறான் பார்!” என பலதும் சொல்லி மனதைக் கரைத்து விட்டார்.

என்னச் செய்வது? அம்மாவின் அன்புக்காக மனதைத் தேற்றிக் கொண்டு அடுத்த நாள், அதற்கு அடுத்த நாளென வேண்டா வெறுப்புடன் நகர்ந்தது எனது பாடசாலை வாழ்க்கை. பின், நாள் செல்லச் செல்ல கொஞ்சங்கொஞ்சமாக எனது குறும்புத்தனமான பேச்சால் அனைவரும் நண்பர்களாயினர். தாடியை நீவி கர்ச்சிக்கும் பொருளியல் ஆசிரியருக்கு, “சிங்கமுக ஆசிரியர்” என செல்லப் பெயர் சூட்டும் அளவு சகஜமாகி விட்டேன்.

Leave a Reply