இயக்குநர் விக்ரமணனே அசந்துவிடுவார். அப்படியொரு நெகிழ்வான பின்னணிக் கொண்டது ‘சினேகாவின் காதலர்கள்’ படத்தின் முதற்புள்ளி. பேச்சுலர்களாக இருந்த பொழுது, ஒரே அறையில் தங்கியவர்கள் தயாரிப்பாளர் கா.கலைக்கோட்டுதயமும் இயக்குநர் முத்துராமலிங்கனும். அப்பொழுது முத்துராமலிங்கன் ‘சத்ரியன்’ அரசியலிதழின் ஆசிரியர்; கலைக்கோட்டுதயம் அந்த இதழில் பணி புரியும் தலைமைச் செய்தியாளர். அந்த நட்பு இப்பொழுது அவர்களை படம் பண்ண வைத்திருக்கிறது.
“நான் 12 வருஷத்துக்கு முன்னாடி சின்னத் திரைக்கு வந்தேன். ‘தமிழன்’ தொலைக்காட்சி தொடங்கினேன். அப்பவே வெள்ளித் திரைக்கு வரணும்னு ஆசை. ஆனா என் தம்பிகள் இருவர், எஸ்.பி.சரணையும் வெங்கட் பிரபுவையும் வைத்து “ஞாபகம் வருதே” என படமெடுத்து நஷ்டமடைந்தவர்கள். நஷ்டமாகிடுவோமோன்னு பயமாக இருந்தது.
இப்போ போட்ட பணம் முழுவதுமாக இழந்தாலும் சமாளித்துக் கொள்ளும் நிலையில் இருக்கேன். படம் நன்றாகப் போனால், ‘தமிழன் கலைக்கூடம்’ சார்பாக வருடத்திற்கு இரண்டு படங்கள் பண்ணலாம்னு முடிவில் இருக்கேன். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, நான் எதிலும் தலையிடவில்லை. படத்தின் நாயகியையே இன்றுதான் பார்க்கிறேன். தயாரிக்க பணம் கொடுத்ததோடு சரி. ஏன்னா.. முத்துராமலிங்கன் அந்தளவுக்கு மிக மிக நேர்மையானவர்.
‘படைப்பாளிகளுக்கு சுதந்திரம் கொடுக்கணும்’. நான் தொலைக்காட்சியில் ‘தீரன் சின்னமலை’ போன்ற தொடரெல்லாம் தயாரிச்சிருக்கேன். 26 – 27 வருஷமா இந்தத் துறையில் இருக்கேன். நல்லா இருந்தா தொடர் நீளும். இல்லைன்னா பத்தாவது எபிஸோடிலேயே கட். கூட போய் நின்னுக்கிட்டு அபப்டிச் செய், இப்படிச் செய்ன்னாலும் படைப்பாளியை தொந்தரவு செய்யக்கூடாது. நான் பார்த்தவரை, படம் அருமையாக வந்திருக்கு. தர்மபுரியில் நடந்தது போலவே ஒரு பரரப்பான சம்பவம் படத்திலிருக்கு” என்றார் தயாரிப்பாளர் கலைக்கோட்டுதயம்.
“முத்துராமலிங்கன் என் கல்லூரி நண்பர். படம் பண்ணப் போறேன்.. நீங்கதன் இசையமைக்கணும் என்றார். முதல் படம் பண்றீங்க.. பட்ஜெட் பிரச்சனையில்லைன்னா பிரபலமான மியூசிக் டைரக்டர் வச்சுப் பண்ணுங்க என்றேன். ஏ.ஆர்.ரஹ்மானுக்கே பட்ஜெட் இருந்தாலும், நீங்கதான் பண்ணணும் என உறுதியாகச் சொன்னார். அந்த நட்புக்கு நன்றி” என்றார் இசையமைப்பாளர் பிரபாகர்.
“வாழ்க்கையில் பல கட்டங்கள் இருக்கு. சிநேகாவின், அப்படியொரு பயணம்தான் படத்தின்கதை. சிநேகா ஒரு இன்ட்டலெக்சுவலான பெண். ஆனா நான் நிஜத்தில் அப்படியில்லை. என்னை திரையில் அறிவாளியாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். திரையிலயாவது என்னை அறிவாளியான பெண்ணாகக் காட்டியதற்கு ரொம்ப நன்றி சார்.
முதல்நாள் ஷூட்டிங் வந்த பின்தான் நான் படம் முழுவதும் வருகிறேன் என்றே தெரியும். எப்படி சார் ஆடியன்ஸ் ஏத்துபாங்களான்னு கேட்டேன். கண்டிப்பாக ஏத்துப்பாங்க என்றார் நம்பிக்கையாக. அவர் அப்படி நம்பிக்கையாகச் சொன்னது எதுவும் இதுவரை நடக்காமல் இருந்ததில்லை. அவ்வளவு நம்பிக்கையான மனிதர்.
இதுவரை நான் நடித்த படங்களான அழகர்சாமியின் குதிரை, கொண்டான் கொடுத்தான், பாண்டிய நாடு போன்ற படங்களைவிட இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நிறைய கத்துக்கிட்டேன். ரொம்ப பொறுமையாக எனக்கு இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். ஏதாவது சஜ்ஜஷன்ஸ் சொன்னா, 2 நிமிடம் யோசிச்சுப் பார்த்துவிட்டு ட்ரை பண்ணலாமே என்பார். அனைவருக்கும் மூளையிருக்கு. உங்களுக்குத் தோன்றுவதை செய்ங்க என சுதந்திரமாக இயங்க ஸ்பேஸ் ஏற்படுத்திக் கொடுத்தார்” என்றார் நாயகியான கீர்த்தி ஷெட்டி.