Search

சிநேகாவின் காதலர்கள் விமர்சனம்

சிநேகாவின் காதலர்கள் விமர்சனம்

இயக்குநர் முத்துராமலிங்கனின் சூட்டியிருக்கும் படத்தலைப்பே கதை சொல்கிறது. நாயகியைப் பிரதானமாக வைத்து எடுக்கப்படும் அரிய படங்கள் வரிசையில் ‘சிநேகாவின் காதலர்கள்’ சேர்ந்து கொள்கிறது.

தன்னை பெண் பார்க்க வருபவரிடம், தனது காதல் கதைகளை விவரிக்கிறாள் சிநேகா. இந்த ஒரு வரிகதையைக் கேட்டால் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் படம்தான் ஞாபகம் வரும். ஆனால் இந்தப் படத்தினை அந்தப் படத்துடன் ஒப்பிடவே முடியாது. சிநேகா, செந்தில்குமார் (சேரன்) போல் தெளிவற்றவள் கிடையாது. காதலில் தோல்வி அது இது என தத்துபித்து என உளறும் சராசரி தமிழ்ப்பட நாயகன்/நாயகி போலின்றி மிகத் தெளிவானவள்; மிகத் தைரியமானவள். சேரன் கணக்கு இரண்டு காதல்தான். ஆனால் சிநேகாவிற்கோ மூன்று (நால்வரில் கிட்டார் வைத்திருக்கும் அதிஃப்பிற்கு சிநேகா மீது ஒருதலை காதல்).

சிநேகாவின் முதல் காதல் கல்லூரியில்தான் தொடங்குகிறது. இதற்காகவே இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு பாடல் ஒன்றைப் போட்டு, பள்ளிப் பருவத்திலேயே சிநேகாவிற்கு காதல் வழிந்து பொங்குவதாக காட்சிகள் இல்லாதது பெரும் ஆறுதல். கல்லூரிக் காதல் கல்லூரியோடு போனதும், ‘திசைகள்’ பத்திரிகையில் பணி புரியும்பொழுது கனவுகளைச் சுமக்கும் உதவி இயக்குநர் பாண்டி மேல் சிநேகாவிற்கு காதல் பிறக்கிறது. தோல்விகளைத் தாங்காமல், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுகிறான் பாண்டி. பின் வேலை விஷயமாக கொடைக்கானல் செல்லும் பொழுது, அங்கு இளவரானைக் காதலிக்கிறாள். அவனோ, ‘நீ போக வேண்டிய பாதை ரொம்ப தூரம்’ என காதலை மறுத்துவிடுகிறான். பின் என்னானது என்பதுதான் படத்தின் முடிவு.

Snehavin Kathalargal Review

மணிரத்னம் படத்து நாயகி போல் துடுக்கானவள் சிநேகா. ஆனால் அதை ஆரம்பக் காட்சிகளில் உணர்த்த தவறிவிடுகிறார் இயக்குநர். மெகா சீரியலில் வரும் ஒரு துணைப் பாத்திரம்போல் அறிமுகமாகிறார் கீர்த்தி. ஏனோதானோ என கலைத்து விட்டாற்போல் செல்லும் படம், உதவி இயக்குநர் பாண்டி திரையில் தோன்றிய பின்தான் ஒழுங்காகிறது. அதற்கு முன்னான காட்சிகள் மிக அமெச்சூர்தனமாக உள்ளன. கல்லூரியில் நிகழும் நகைச்சுவைக் காட்சிகளும் அறுக்கும் ரகம். ஆசிரியர் ஆசிரியை பின்னால் போவது, மாணவர்கள் ஆசிரியரை நேரடியாக கிண்டல் செய்வது என பொறுமையைச் சோதிக்கிறது. வெண்ணிறாடை மூர்த்தியும், சின்னி ஜெயந்த்தும் ரிட்டையராகி விட்டாலும்கூட, அவர்கள் உலாவிய தமிழ் சினிமா டெம்ப்ளட் கல்லூரி மட்டும் அப்படியே உள்ளது. மற்ற மூன்று நாயகரைப் போல், சந்தோஷாக நடித்த திலக்கிற்கு கதாபாத்திர வார்ப்பில் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது.

உதவி இயக்குநர் பாண்டியாக நடித்த தாடிவாலா ரத்ன குமார் கச்சிதமாக அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்துகிறார். நாயகனாக நடிக்க வைக்கிறேன் என ஒருவரை 25,000/- ரூபாயை ஏமாற்றி, மதுரை பின்னணியில் ஒரு பாடல் எடுத்து தயாரிப்பாளரிடம் வாய்ப்புக் கேட்கிறார். அந்தத் தயாரிப்பாளர் பாண்டியின் கதையைச் சுட்டு விடுகிறார். இதனால் மனமுடையும் பாண்டி, லெட்டர் எழுதி வைத்துவிட்டு தனியாக ஓடிப் போகிறார் விரக்தியில். அகெயின் சிநேகா எஸ்கேப்!

முத்துராமலிங்கன்இரண்டாம் பாதியில் படம் விஸ்வரூபம் எடுக்கிறது. சிநேகா கொடைக்கானலில் சந்திக்கும் நபரின் பெயர் இளவரசன்; அவனது காதலி பெயர் ரம்யா. பெயரைக் கொண்டே இளவரசனின் கதையை யூகிக்கலாம். எப்படி இயக்குநருக்கு இது சாத்தியம் ஆனது எனத் தெரியவில்லை. இளவரசனுக்கு நடந்த கொடுமையை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் எளிமையாகக் காட்சிப்படுத்தி இருக்கார் பத்திரிகையாளரான இயக்குநர் முத்துராமலிங்கன். இளவரசனாக நடித்த உதயும் (நீல-வெள்ளை கட்டம் போட்ட சட்டை), ரத்ன குமாரைப் போன்றே சிறப்பான தேர்வு. படம் முழுவதும் சிநேகாவாக நடித்திருக்கும் கீர்த்தியின் ராஜ்ஜியம்தான். ஆனால் பிளாஷ்-பேக்கில் வரும் ரம்யா, சிநேகாவைவிட கவர்கிறார். ஆனால் இளவரசன் ஏன் சிநேகாவை அனுப்பி வைக்கிறான்.. பின் ஏன் அவளுக்காகக் காத்திருக்கான் என்றுதான் புரியவில்லை.

‘கண்ணகியின் கால் கொலுசை..’ என்ற பாடல் கேட்கவும் பார்க்கவும் அருமையாக உள்ளது. பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் நெல்லை பாரதி. ‘குருவி குருவி சின்னக் குருவி..’ என்ற பாடலின் கோரியோகிராஃபியில் கவனம் செலுத்தியிருந்தால் அதுவும் சிறப்பாக வந்திருக்கும். அனைத்துப் பாடல்களும் சிறப்பாக இருந்தாலும், படத்துடன் ஒன்ற முடியாததற்கு இரா.பிரபாகரின் பின்னணி இசையே காரணம். தலையைக் கனக்கச் செய்யும் வணிக சினிமாகளுக்கு மத்தியில், இத்தகைய படங்களுக்கான தேவை மிக மிக அதிகமாகவே உள்ளது.