Shadow

சி.என். அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)

மாயலோகத்தில்..

அறிஞர் அண்ணாஅறிஞர் அண்ணாவைப் பற்றி சுருக்கமாக எழுதுவது மிகவும் சிரமமான காரியம். அவரைப் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு புத்தகம் தான் போட வேண்டும். மேலும், அவரைப் பற்றி தமிழ்கூறும் நல்லுலகில் அறியாதவர் யார்?

எனவே மிகச் சுருக்கமாகச் சில. காஞ்சிபுரம் என்றால் பட்டு மாத்திரமல்ல; அண்ணாவும் உடனேயே நினைவுக்கு வந்து விடுகிறார். 1909 செப்டம்பர் மாதம் பிறந்தார். நூறாண்டு கடந்து விட்டது.

அண்ணா, ஆரம்பத்திலிருந்தே தன்னை ஒரு சுயமரியாதைக்காரராகவே வெளிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். எனவே அவர் நீதிக்கட்சிக் காரராக இருந்தது ஆச்சரியமில்லை. 1934இல் அவருக்கும் பெரியாரின் அறிமுகம் கிடைத்தது.

பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சரளமாகத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மேடையில் பேசும் ஆற்றல் பெற்றிருந்தார்.

நீதிக்கட்சியில் அதன் கடைசிக் காலங்களில் சில நிர்வாகப் பொறுப்புக்களிலும் இருந்திருக்கிறார். இக்கட்சியின் அமைப்புச் செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர் பிறகு பொதுச் செயலாளர் ஆகிய பொறுப்புக்களை வகித்தார்.

1937இல் இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர். அவர் பள்ளிகளில் இந்தியை விருப்பப் பாடமாகப் புகுத்தினார். இதற்கு நீதிக்கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் முதல் இந்தி எதிர்ப்புப் போர் உருவானது.

சென்னையில் இந்திக்கு எதிரான கூட்டமொன்றில் பேசிய அண்ணா கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

1944இல் நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து திராவிடர் கழகம் உருவாயிற்று. இக்கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டுமென்பது அண்ணாவின் ஆசை. பெரியார் அதற்கு உடன்படவில்லை.

அண்ணாவின் எழுத்துக்கள் முதலில் ‘பாலபாரதி’ இதழிலும், காஞ்சி மணிமொழியார் நடத்திய ‘நவயுகம்’ பத்திரிகையிலும் வெளிவந்து கொண்டிருந்தன.

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை மக்களிடையே எடுத்துச் செல்வதில் அண்ணாவின் பணி மகத்தானதாக இருந்தது. பிறகுதான் பெரியாரின் ‘குடியரசு’, ‘விடுதலை’ பத்திரிகைகளில் அண்ணாவின் எழுத்துக்கள் வெளிவர ஆரம்பித்தன. ‘விடுதலை’ யில் அண்ணாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. பெரியார் – மணியம்மை திருமணம் இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

தி.மு.க. உதயமான பிறகு உதயமான பத்திரிகைகளான திராவிட நாடு, காஞ்சி பத்திரிகைகளில் அண்ணா ‘தம்பிக்குக் கடிதம்’ எழுதினார். மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட பகுதி அது.

அண்ணாவின் மேடைப் பேச்சுக்கள் தமிழர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. மேடைப் பேச்சுக்கு அண்ணாவுக்கு இணையாக எவரும் கிடையாது என்கிற நிலை உருவாயிற்று. லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அண்ணாவின் கூட்டம் எந்த ஊரில் நடைபெற்றாலும் அந்த ஊர் அன்று திருவிழாக் கோலம் பூண்டு விடும்.

அண்ணா ஆரம்ப காலத்திலேயே இலக்கியம், கலை போன்றவைகளில் நாட்டமுடையவராக இருந்தார். எனவே அவர் நாடகங்கள் இயற்றியது மிகவும் இயல்பான ஒன்று. ‘நீதி தேவன் மயக்கம்‘, ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்‘ போன்ற நாடகங்கள் மிகவும் வெற்றியடைந்த நாடகங்கள்.

அண்ணாவின் ‘ஓர் இரவு’ நாடகத்தைப் பார்த்து வியந்த ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி அண்ணாவை தென்னாட்டு பெர்னாட்ஷா என வருணித்ததாகப் பதிவுகள் உள்ளன.

நாடகங்கள் தவிர கவிதை, சிறுகதை, நெடுங்கதை, திரைக்கதை என கலை வடிவத்தின் பல்வேறு துறைகளிலும் அண்ணாவின் பணி இருந்திருக்கிறது. திராவிட இயக்க இலக்கியவாதிகளின் தந்தை எனக் கூறும் அளவிற்கு அவரது ஆளுமை அவர் எழுதிய எழுத்துக்களில் காணப்பட்டது. இவரைப் பின்பற்றி ஏராளமான திராவிட இலக்கியவாதிகள் தோன்றினார்கள்.

திரைப்படத்துறையிலும் அண்ணா தடம் பதித்தார். 1949இல் வெளிவந்த ‘வேலைக்காரி‘ படம் மாபெரும் வெற்றிச் சித்திரம். கதை, திரைக்கதை, வசனம் அண்ணா.

இதே ஆண்டு வெளிவந்த என்.எஸ்.கிருஷ்ணனின் ‘நல்லதம்பி’ படத்தின் கதை வசனமும் அண்ணா அவர்களே கையாண்டார். இதுவும் ஒரு வெற்றிப்படம். இப்படத்தில் தான் என்.எஸ்.கே.யின் கிந்தனார் காலட்சேபம், மதுவிலக்குப் பிரசார நாடகமெல்லாம் இடம்பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றது.

1951இல் ‘ஓர் இரவு’, 1954இல் ‘சொர்க்க வாசல்’, 1956இல் ‘ரங்கோன் ராதா’ போன்ற படங்கள் வெளியாகி அண்ணாவின் புகழை மேலெடுத்துச் சென்றன.

மேலும், அண்ணாவின் படங்கள் அவரது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை, கோட்பாடுகள் போன்றவற்றை சாமானிய மக்களிடம் எடுத்துச் செல்லும் கருவியாகவும் அமைந்தது. தன்னையும் ஒரு சாதாரண மனிதனாகவே அண்ணா எப்போதும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தார்.

அதுவரை சமூக இயக்கமாக இயங்கி வந்த தி.மு.க.வை தேர்தலில் கலந்து கொண்டு மக்களுக்காகப் பணியாற்றும் அரசியல் இயக்கமாக மாற்றும் தீர்மானத்தை திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிலே 1956இல் இயற்றி, முதன்முறையாக 1957இல் தேர்தலைச் சந்தித்தது தி.மு.க.

இத்தேர்தலில் தி.மு.க. 15 இடங்களை வென்றது. 1962இல் நடைபெற்ற தேர்தலில் 50 இடங்களைக் கைப்பற்றியது. காஞ்சிபுரத்தில் அண்ணா, நடேச முதலியார் என்னும் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதன்பின் நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்ற மேலவைக்குச் சென்றார். அங்கு அவர் ஆற்றிய உரை சரித்திரம் படைத்தது. குள்ளமான அண்ணாவை ஏறெடுத்துப் பார்க்க வைத்த உரை அது.

ஒருகட்டத்தில் தி.மு.க.வை தடை செய்து விடுவார்கள் என்கிற ஐயப்பாடு எழ ஆரம்பித்தது. அதற்கு கழகத்தின் திராவிட நாடு பிரிவினை கோஷம் காரணமாக அமைந்திருந்தது. கட்சியைக் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அண்ணாவிற்கு ஏற்பட்டது. கட்சியின் சில விதிமுறைகளை மாற்றியமைத்தார். திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதாக அறிவித்தார். ‘பிரிவினையைத் தான் கைவிட்டோம், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ எனவும் அறிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றப்பட்டது.

1967இல் நடந்த தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றியை ஈட்டி, தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா மிகுந்த பொறுப்புடன் மந்திரி சபையை அமைத்தார். மொத்தம் 9 மந்திரிகள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற தார்மீக பயம் அவருக்கு இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணம், தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது. இருமொழிக் கொள்கை, சுயமரியாதைத் திருமணம் போன்றவற்றிற்கு சட்டபூர்வமான வடிவம் கொடுக்கப்பட்டது. தி.மு.க. அரசைப் பெரியாருக்குக் காணிக்கையாக்கினார்.

மக்களுக்கு அண்ணாவிடம் அளவில்லாப் பிரியம் இருந்தது. அதேசமயம் எதிர்பார்ப்புகளும் இருந்தன. ஆனால் அண்ணா முதல்வராக 23 மாதங்களே பதவி வகித்தார். 3-2-1969இல் அவர் அகால மரணமடைந்தபோது அவருக்கு வயது 59 வருடங்கள் 4 மாதங்களே ஆகியிருந்தன.

அண்ணா அவரது பெயரின் ஒருபகுதி மாத்திரமல்ல. லட்சோப லட்சம் தமிழர்களும், அவரை உடன்பிறந்த அண்ணனாகவே எண்ணியிருந்தார்கள்.

அண்ணா இறந்தபோது, தமிழகமெங்கும் லட்சக்கணக்கான அண்ணாவின் தம்பிகள் மொட்டையடித்துக் கொண்டு உடன் பிறந்த அண்ணன் மறைந்து விட்டதாகவே எண்ணி சோகத்தில் ஆழ்ந்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா புதைக்கப்பட்டு, அவரது நினைவாக சமாதியும் அமைக்கப்பட்டது சரித்திரம்.

அண்ணா ஒரு மாபெரும் சகாப்தம்.

திரையுலகில் அண்ணாவின் பங்களிப்பு:

1949 – வேலைக்காரி கதை, திரைக்கதை, வசனம்
1949 – நல்லதம்பி கதை, திரைக்கதை, வசனம்
1951 – ஓர் இரவு கதை, வசனம்
1954 – சொர்க்க வாசல் கதை, திரைக்கதை, வசனம்
1956 – ரங்கோன் ராதா கதை
1959 – தாய் மகளுக்குக் கட்டிய தாலி கதை
1961 – நல்லவன் வாழ்வான் கதை, வசனம்
1978 – வண்டிக்காரன் மகன் கதை

– கிருஷ்ணன் வெங்கடாசலம்