Shadow

சுட்ட கதை விமர்சனம்

Sutta Kadhai Vimarsanam

சுட்ட கதை – முழு நீள ஃபேண்டசி தமிழ்ப்படம்.

‘பாஸ்மார்க்’கில் (BOSSMARK) குடித்து விட்டு ஒருவரை ‘சுட்டு’க் கொலை செய்து விடுகிறார் கோரமலை கான்ஸ்டபிள் ராம்கி. பின் என்னானது என்பது தான் சுட்ட கதை.

கான்ஸ்டபிள் ராம்கியாக பாலாஜி. அவர் அனிச்சைத் திருட்டு (Kleptomania) எனும் உளக்குறையால் பாதிக்கப்பட்டவர். இவரும் வலப்பக்க காது கேளாதவருமான கான்ஸ்டபிள் சங்கிலிராயனும் லட்சியவாதிகள். கோரமலையில் தர்மத்தை நிலைநாட்டுவது தான் அவர்களின் அந்த உயரிய லட்சியம். சிலந்தி எனும் மலைவாசிப் பெண்ணால் அவர்களின் லட்சியம் கொஞ்சம் சறுக்கினாலும், ஒரு கட்டத்தில் “ஃபிகரை விட தர்மமே முக்கியம்” என சிலந்தியையே தூக்கி எறிகின்றனர். கான்ஸ்டபிள் சங்கிலிராயனாக வெங்கி. இந்த இருவர் தான் படத்தின் கதாநாயகர்கள்.

 

சிலந்தியாக லக்ஷ்மி பிரியா. அறிமுக நாயகி. கோரமலையின் மலைவாழ் மக்களின் சாமி (அ) வீராங்கனை. இடுப்பில் ஒரு குறுவாளை வைத்துக் கொண்டு, ஒரு வரைமுறையில்லாமல் கொலை செய்கிறார். குறிப்பிட்டுச் சொல்லும்படியான காட்சிகள் இல்லையெனினும், வழக்கமான நாயகி போலில்லாமல் படத்தின் கதைக்கு உதவுகிறார். 

காவல்துறை உயரதிகாரியாக நாசர். அவருக்கு பழக்கப்பட்ட கதாபாத்திரம் தான். எனினும் அதை மேலும் ரசிக்கும்படியாகவும், அவரை விட்டால் அத்தகைய பாத்திரத்திற்கு ஆளே இல்லாதது போலவும் கச்சிதமாக நடித்துள்ளார். கொத்தாபுரம் சமஸ்தானத்தின் கடைசி மகாராஜாவாக சிவாஜி, மலைவாசி ஒட்டகமாக எம்.எஸ்.பாஸ்கர், ஆராய்ச்சியாளராக ஜெயப்ரகாஷ் என படத்தின் பாத்திரங்கள் அனைவரும் ரசிக்க வைக்கின்றனர்.

பாடல்கள் பெரிதாக சோபிக்கவில்லை எனினும், பின்னணி இசையில் அமர்க்களப்படுத்தியுள்ளனர் ‘மேட்லி ப்ளூஸ்’ இரட்டையர்களான ஹரீஷ் வெங்கட்டும் பிரஷாந்தும். ‘ஏலே..ஏலே’ எனத் தொடங்கும் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

எழுத்தும் இயக்கமும் சுபு. கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர் போடும்பொழுதே, காமிக்ஸ் பாணியில் படத்தின் முழுக் கதையையும் சொல்லி விடுகின்றனர். அதோடு நில்லாமல், “சாம்பசிவம் காமிக்ஸ்” என்ற பெயரில் தமிழ் காமிக்ஸ்களை, தொலைக்காட்சிகளில் வரும் வாரயிதழ் விளம்பரங்களின் பாணியில் சகட்டுமேனிக்குக் கலாய்த்துள்ளனர். ஏன் தமிழ் காமிக்ஸ்களின் மேல் இயக்குநருக்கு இந்தக் கொலைவெறி எனத் தெரியவில்லை? ஆனால் கதை மாந்தர்களே காமிக்ஸ் கதாபாத்திரங்கள் தான். இரண்டு ரேஞ்சர்கள், செவ்விந்தயர்கள் என்ற லயன் காமிக்ஸ் மாந்தர்களை நினைவுபடுத்துவது போலுள்ளது. 

படம் நெடுகே நகைச்சுவை இழையோடிய வண்ணமே உள்ளன. பெரிய வயிறுடைய மனிதர் ஒருவர் தனது மகளை அழைத்து, “அப்பா பெல்ட் போட்டிருக்கேனான்னு பாரும்மா” எனக் கேட்கும் காட்சி ஓர் உதாரணம். 

படத்தின் ‘கலை’ வேலைகள் பிரமாதமாக உள்ளன. ‘பாரடைஸ் டீ ஸ்டால் (PARADESI TEA STALL)’ என்ற டீக்கடை போர்ட், KRM என வாகனங்களின் ரெஜிஸ்ட்ரேஷன், ‘கான்டேக்ட் மீ’ என தொலைபேசி எண்ணோடு இருக்கும் துப்பாக்கிக் குண்டு, கதாபாத்திரங்களின் உடை எனப் பார்த்துப் பார்த்து அசத்தியுள்ளனர். படத்தின் இன்னொரு சிறப்பம்சம் அதன் சிறிய காலளவு.

Leave a Reply