Shadow

சூது கவ்வும்

குருஷேத்ரப் போர் முடிந்து விட்டது. தர்மருக்கு முடி சூட்டி விட்டனர். ஆனால் அந்த வெற்றி அவரை நாளுக்கு நாள் சோர்வுடையச் செய்கிறது. இந்தப் பாழும் பதவிக்காக இத்தனை கொலைகள் என்று மனம் ஒடிகிறார். முன்பு தர்மர் துவளும் பொழுது எல்லாம் தன் தோளில் சாய்த்துக் கொண்டு ஆறுதல் சொல்ல விதுரர் இருந்தார். ஆனால் இன்று அவர் இல்லை. தர்மர் மனதில் அமைதியும் இல்லை. திசைகள் நான்கினையும் கலங்கிய கண்களோடு கைகூப்பி, ‘என் சிற்றப்பா அவ்விடம் உள்ளரா?’ என தழுதழுக்கக் கேட்கிறார். ஒரே ஒரு திசையில் மட்டும் மனம் சற்று சலனம் அற்று மீண்டும் விக்கித்துக் குறுகுகிறது. எதுவும் யோசிக்காமல் கிரீடம் அற்ற கலைந்த கேசத்தோடும், மேலாடை மறந்த திறந்த மார்போடும், கலங்கிய கண்களோடும் நடுநிசியில் கானகம் நோக்கி செல்லும் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறார்.

நடந்து கொண்டிருப்பவன் மன்னர் மன்னன் அல்ல. மன அமைதி தேடிச் செல்லும் சாதாரணன். பரம ஞானியான விதுரரை ஒருமுறையாவது தரிசிக்க மாட்டோமா என கவலையுறும் பக்தன். விடிந்துக் கொண்டே இருக்கிறது. முழுவதும் விடிந்து மன்னனைக் காணவில்லை என்ற செய்தித் தெரிந்தால் அரண்மனையே பதறும். அங்கு மன்னனின் இருப்பைப் பற்றித் தான் கவலை, மன்னனின் பதறும் மனதினைப் பற்றி எவருக்கு என்ன அக்கறை? அப்படி அவர்களுக்கு மன்னனின் மனநிலை மீது அக்கறை ஏற்பட்டாலும் அதனால் என்னப் பயன்? அவர்கள் யாரும் முயன்று தர்மருக்கு மன அமைதினை பெற்றுத் தந்து விட முடியாது.

பல உயிரை பணயம் வைத்து இச்சுமையை பெற்றுத் தந்த கண்ணன் இந்நேரம் என்ன செய்துக் கொண்டிருப்பான் என்று யோசித்தார் தர்மர். கண்ணன் தான் வாங்கி கொடுத்தானா? இல்லையே பாண்டவர்களான தங்களை இயக்கி அல்லவா அவன் அதை சாதித்தான். தர்மருக்கு குழப்பம் மேலிட்டது. ஒருவேளை கண்ணன் சாதித்திருந்தால் அவனைக் குற்றவுணர்வு துரத்தும் என்பதால் பாண்டவர்களை பகடைகளாக உருட்டி விட்டான் போலும். சகுனி பரவாயில்லை.. பகடைகளை உருட்டி பாண்டவர்களை நாட்டை விட்டு விரட்டினார். ஆனால் இந்த மாய கண்ணனோ பாண்டவர்களையே பகடையாக்கி உருட்டி விளையாடி விட்டான்.

எல்லாம் முடிந்து விட்டது. இனி கண்ணனை இகழ்ந்தென்ன ஆகப் போகிறது. கடைசியில் தாயாதி துரியோதணனிடம் கொன்று பிடுங்கியது நிம்மதியற்ற மனநிலையை தானா? கண்ணனிற்கு துரியோதணன் மேல் தான் எத்தனை பிரியம் இருந்துள்ளது என்று அதிசயித்தார் தர்மர். எங்களுக்கு உதவுவதாக பாசாங்கு செய்து உலக வாழ்வில் இருந்து துரியோதணனை விடுவித்து விட்டார். கண்ணனால் முடிகிறது ஆட்டுவிக்கிறான். ஆனால் கண்ணனின் நாடகத்தில் இருந்து தப்பித்து, வில்லை உடைக்க விதுரரால் எப்படி இயன்றது?

“சிற்றப்பா.. என் ஞானத் தந்தையே! தங்களை தரிசிக்கும் வாய்ப்பினைக் கடைசியாக ஒரு முறை தரக் கூடாதா?” என்று கண்களை மூடி ஈனஸ்வரத்தில் நெக்குருகினார்.

கண்களில் நிரம்பிய நீரின் ஊடே தொலைவில் ஒரு சிறு பிம்பம் இவரை கைகளை நீட்டு வா என அழைப்பது போல் தெரிந்தது. துரும்பென இளைத்தவராய் காற்றில் மிதக்கும் தக்கைப் போல் இருக்கும் இவர் தான் காண் விழைந்த விதுரரா? மனம் தோற்றுவித்த மாயப் பிம்பமா என அறிய கண்களில் தேங்கிய நீரை துடைத்து உற்றுப் பார்த்தார். உள்ளத்தை குளிர்விக்கும் அதே கனிவு ததும்பும் பார்வை. நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்த தர்மரை தொட்டுத் தூக்கி தென்றல் வருடுவது போல தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார் விதுரர். தர்மருக்கு கேட்க நிறைய இருந்தது. ஆனால் விதுரருக்கு சொல்ல எதுவுமே இல்லை. அதை உணர்ந்தோ என்னமோ.. தர்மர் மெளனமாய் விதுரர் அவராக ஏதேனும் சொல்வாரா என்று காத்திருந்தார்.

“நாடு இழந்தாய். காடு சென்றாய். கர்ம வினைகளைத் தொலைத்தாய். பரம்பொருளான கண்ணனின் கைப்பாவை ஆனாய். சுவர்க்கம் உனக்காக காத்திருக்கிறது. மீண்டும் பிறப்பற்ற மோட்ச பெருங்கதிக்கு தகுதியானவனாய் உள்ளாய். நானோ நிதானமிழந்து, செஞ்சோற்றுக் கடன் தீராமல், கர்மம் ஆற்ற அஞ்சியவனாய் இன்னுமொரு பிறவி எதிர்நோக்கி உள்ளேன். துரியோதணன் குணம் அது என அறிந்திருந்தும் மெளனம் காக்காமல் எனது கர்ம வினையின் பலன் என பொறுத்துக் கொள்ளாத என்னையா நீ பரம ஞானி என்கிறாய்?”

“கலங்கி இருக்கும் என்னைத் தாங்கள் மேலும் சோதிக்கலாமா?”

விதுரர் புன்னகைத்து, “என்னிடம் ஏதேனும் மந்திரம் எதிர்பார்க்கிறாயா என்ன? நிம்மதி என்பது மனநிலை. அனுபவத்தால் வரும் பக்குவத்தால் அல்லவா அது கை கூடுகிறது?” என்று கேட்டார்.

“அனைவருக்கும் அனுபவம் பக்குவத்தினை அளிப்பது இல்லையே!!”

“இறக்கும் தருவாயில் பிதாமகர் அருளிய உபதேசங்களும் போதவில்லையோ?” என்று மீண்டும் புன்னகைத்தார்.

தர்மரும் புன்னகைக்க, “பயம் தவிர். நடப்பவை அனைத்திற்கும் சாட்சியாயிரு. மீன்களைத் திண்ணும் கொக்கினைக் காணும் பொழுது.. மீன்களுக்காகப் பரிதாபமும் கொள்ளாமல், கொக்கின் பசி ஆறியதென சமாதானமும் அடையாமல் அக்காட்சியினைப் பிரித்துப் பார்க்காமல் லயிக்கப் பழகு. உன்னால் ஆவது ஒன்றுமில்லை என்ற தெளிவு ஒன்று போதும். கண்ணன் உன்னைக் கடைத்தேற்றுவான்” என்று விதுரர் உரைத்தார்.

“கண்ணனா.. அவன் தானே எல்லாப் பிரச்சனைகளுக்கு காரணம்?”

‘ங்கொய்யாலே.. வருத்தப் படுகிறானே என்று விதுரரா காட்சி தந்தா, பயப்புள்ள என்னைய குறை சொல்றதுலயே குறியா இருக்கான்.’

– தினேஷ் ராம்

Leave a Reply