Shadow

ஜம்புலிங்கம் 3D – குழந்தைகள் சினிமா

Jumbulingam 3D Audio Launch

“குழந்தைகளுக்கான சினிமா என்பது தமிழில் அருகிவிட்டது அல்லது இல்லவே இல்லைன்னு சொல்லலாம். அந்த வகையில், ஜம்புலிங்கம் 3D எனும் படத்தை நான் ‘தமிழ் ஹாரி பாட்டார்’ எனச் சொல்வேன். மிகச் சுவாரசியமான படம்” எனப் புகழ்ந்தார் Y.G.மகேந்திரன். இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு, எஸ்.வி.சேகர் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் வாழ் தமிழரான ஹரி இப்படத்தைத் தயாரித்துள்ளார். நாடகம், இசை என தமிழ்க்கலை சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் பொறுப்பேற்பெடுத்து ஜப்பானில் அரங்கேற உதவி செய்து வருபவர். அதனால்தான் நாடகக் கலைஞர்களான க்ரேசி மோகன், எஸ்.வி.சேகர், Y.G.மகேந்திரன் போன்றோர்களும், இசைக் கலைஞர்களான கங்கை அமரன் முதலியவர்களும் ஹரியின் நட்பிற்காகவும் நற்குணத்துக்காகவும் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து சிறப்பித்தனர். விழாவிற்கு வந்திருந்த ஜப்பானியர் ஒருவரின் அழகு தமிழ் கொஞ்சும் உரை மனதிற்கும் காதிற்கும் இனிமையாகவும் இதமாகவும் இருந்தது.

“முதன்முறையாக 90 சதவிகிதம் ஜப்பானிலேயே எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் இது. இதற்கு முன் இப்படி தமிழ்ப்படம் வந்ததா எனத் தெரியவில்லை. இப்படம் ஜப்பானின் ‘டொயமா (Toyama)’ எனும் நகரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. டொயமா அழகு நகரம்; அங்குள்ள மக்கள் அமைதியானவர்கள். டோக்யோவிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தள்ளியுள்ளது. டொயமாவில் மலை இருக்கு, அருவி இருக்கு, கடல் இருக்கு. அதெல்லாம் படத்தில் அழகாகப் பதியப்பட்டிருக்கு’ என்றார் அழகான தமிழில்.

Jumbo 3D

படத்தில் ஜப்பானைச் சேர்ந்தவர்களும் நடித்துள்ளனர் என்பதோடு, ஜப்பானில் பரவியுள்ள ரஜினியின் புகழையும் அவர்கள் மூலம் பதிந்துள்ளனர் இரட்டை இயக்குநர்களான ஹரியும் ஹரீஷும். அவர்களின் ஆஸ்தான நடிகரான கோகுல்தான் இப்படத்தின் நாயகனும். அவரது திறமையை நிரூபிக்க கதையிலேயே ‘மைம்மிங்’கிற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல்களுக்கு ஸ்ரீவித்யா என்ற பெண் இசையமைப்பாளரும், பின்னணி இசையை வெங்கட் பிரபு ஷங்கரும் படைத்துள்ளனர்.