‘இன்னிக்கு தான் அவனுங்களுக்கு கடைசி எக்ஜாமாம். சீனுவ தவிர மத்த பயலுவலாம் ஊருக்குப் போயிடுவானுங்க. ஜொள்ளனும் தூக்கணாம்பாளையத்தில் இருக்கிற அவன் மாமா வீட்டுக்குப் போயிட்டான். வர நாலஞ்சு நாள் பிடிக்கும். எல்லோரும் சேர்ந்து என்னைத் திண்ணையில தனியா உட்கார்ந்து புலம்ப விட்ருவானுங்க போல’ என்று திண்ணையில் கால் நீட்டி சுவரோடு சாய்ந்துக் கொண்டார்.
திண்ணையை ஒட்டிய சாளரம் வழியாக உள்ளே பார்த்தார். அவர் மனைவி சாளரத்திற்கு முதுகைக் காட்டியது போல் கட்டில் மேல் ஒருக்களித்து படுத்துக் கொண்டிருந்தார்.
“தூங்கிட்டியா?”
“இல்ல. ஏன்?”
“உள்ள புழுங்கல? திண்ணைக்கு வாயேன். பேசிட்டிருப்போம்.”
“இப்ப அது மட்டுந்தான் குறைச்சல். உங்க கூட சேர்ந்து திண்ணைய தேய்க்க ஆள் யாரும் இன்னிக்கு கிடைக்கலையா? நானே கரன்ட்க்காரனுக்கு கரன்ட் கொடுக்க என்னக் கேடுன்னு கடுப்புல இருக்கேன்.”
“டி.வி.ல நாடகம் எதுவும் பார்க்க முடியாத கடுப்புன்னு சொல்லு.”
“ஆமாம். அப்படித் தான். அதுக்கு என்ன இப்ப?” என்று கோவமாக எழுந்து நமசிவாயத்தை திரும்பி பார்த்து, “சித்த படுக்கலாம்னு இங்க வந்தேன் பாருங்க.. என்னைச் சொல்லணும்” என்று எழுந்து உள்ளே போய் விட்டார்.
“ஒன்னுமே இல்லாத விஷயத்துக்கு எல்லாம் எரிச்சல் பட்டா எப்படி? டென்ஷன் ஆனா உடம்புக்கு நல்லது இல்லன்னு சொன்னா புரிய மாட்டேங்குதே உனக்கு!!” என்று கவலையாக கேட்டார் நமசிவாயம்.
எதையும் கவனிக்காதது போல் சென்று விட்டார் நமசிவாயத்தின் மனைவி. ஆனால் அவருக்கு தன் கணவரைக் குறித்த பிரமிப்பு மேலும் அதிகமாகியது. தனது கணவரின் கோபம் எங்கே போனது என்று பெரிய புதிராக இருந்தது. நாற்பது வயது முதல் சுமார் 30 வருடங்களுக்கு மேல் இருந்த நாய் குணம் திடீரென விலகிடுமா என்று குழப்பமாக இருந்தது. தன்னால் மட்டும் ஏன் இன்னும் எரிச்சலுறுவதை தடுக்க முடியவில்லை என்று யோசித்துக் கொண்டே கூடத்தில் சென்று படுத்துக் கொண்டார் நமசிவாயத்தின் மனைவி.
நமசிவாயத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. இன்னும் ஒரு மணி நேரம் தான் இருந்தது. கதிரேசனை ஆள் விட்டு அனுப்பி இருந்தார். ஆனால் இன்னும் காணவில்லை. நேரில் சென்று அழைத்து வரலாமா என யோசித்தார். அவ்வளவு தூரம் நடக்க இயலுமா என தெரியவில்லை. அவர் மீண்டும் நடக்க தொடங்கி முழுமையாக இருபது நாட்கள் வாரம் கூட ஆகவில்லை. மூன்று மாத படுக்கைக்குப் பின் மெல்ல ஊன்றுகோலின் உதவியோடு வீட்டிற்குள் மட்டும் நடமாட தொடங்கி இருந்தார். ஒருவழியாக கதிரேசன் வந்து சேர்த்தான்.
“கொடுக்காப்புளி கொஞ்சம் உலுக்கி வுட்டுடேன்” என்றார் நமசிவாயம். கதிரேசன் எதுவும் சொல்லாமல் சந்து வழியாக தோட்டத்திற்குச் சென்றான். நமசிவாயம் தோட்டத்திற்கு செல்லும் முன்பே கொடுக்காய்ப்புளிகள் வேகமாய் மண்ணில் விழுந்துக் கொண்டிருந்தன. பறிக்கப்பட்ட கொடுக்காய்ப்புளிகளில் பாதியை கதிரேசனிடமே தந்தார். கதிரேசனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. வாங்கிக் கொள்ளலாமா வேண்டாமா என அவன் முடிவெடுப்பதற்குள் கதிரேசனின் கைகளில் கவரினைத் திணிப்பது போல் வைத்தார். சமையலறையில் கொஞ்சம் வைத்து விட்டு திண்ணைக்கு சென்று அமர்ந்துக் கொண்டார். அடுத்த சில தினங்களுக்கு விடுமுறை என்பது பையன்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் தெரிந்தது. அவர்கள் அனைவருக்கும் கொடுக்காய்ப்புளிகளை அளித்து விட்டு, மீதமுள்ளதை சீனுவிடம் கொடுத்து ஜொள்ளன் வீட்டில் தர சொன்னார். நேற்று ஜொள்ளன் ஊருக்குப் போனதில் இருந்து அவன் நினைவாகவே இருந்தது. ஜொள்ளன் முதல் தடவை வீட்டிற்குள் வந்தததையே அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று ஒரு நாள் நமசிவாயத்தால் நடக்க முடியவில்லை. வெளியூரில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தார். சமாளித்து பேருந்தில் ஏறி விட்டார். ஊரில் வந்து இறங்க இயலவில்லை. ஊர்க்காரர்கள் கைத்தாங்கலாக இறக்கி ஆட்டோவில் ஏற்றி விட்டனர். என்றுமே ஆட்டோவில் வராதவர் அன்று வந்ததில் நமசிவாயத்தின் மகனுக்கு வித்தியாசமாகப் பட்டது. ஆனால் அவரே எதிர்பார்க்கவில்லை நமசிவாயம் அடுத்த இரு தினங்களில் நடக்கவே முடியாமல் படுக்கையில் விழுவார் என்று. இரண்டு நாள் ஊன்றுகோல் உதவியுடன் நடக்க முயன்றார். ஆனால் சுத்தமாக கால்களில் சுரணையே இல்லாமல் போனது. சின்ன வயதில் என்றோ முதுகில் பட்டிருந்த அடியால் நரம்புகள் பிசகிக் கொண்டது என்றார்கள். நமசிவாயத்திற்கு முதுகு வலி நீண்ட காலமாகவே இருந்தது. ஆனால் நடக்க இயலாமல் போகும் என்று கனவிலும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. பின்னர் முதுகில் சிறு கட்டி உள்ளதாக சொன்னார்கள். எழுபது வயதில் எப்படி அறுவை சிகிச்சை என்று சிறு உறுத்தல் இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை அவரின் குடும்பத்தினர்களுக்கு. அறுவை சிகிச்சை முடிந்தும் அவரது காலை அவரால் அசைக்க இயலவில்லை. கால் வலுப் பெற சில நாட்கள் ஆகும் என சொல்லி விட்டார்கள். முதுகில் இருந்து அறுவைச் சிகிச்சையில் நீக்கப்பட்ட கட்டியின் மாதிரியை பெங்களூரு நிம்மான்ஸ் மருத்துவமனைக்கும், அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டிற்கும் அனுப்பி வைத்தனர். படுத்துக் கொண்டே இருந்ததால் அவருக்கு ‘பெட் சோர்’ ஏற்பட்டது. அதை தவிர்க்க வாட்டர் பெட் அல்லது ஏர் பெட் வாங்க மருத்துவர் பரிந்துரைத்தார். வாட்டர் பெட் விலை அதிகம் என்று மின்சாரத்தில் இயங்கும் ஏர் பெட் வாங்கி வந்தார் நமசிவாயத்தின் தங்கை மகன். காலிற்கு சில பயிற்சிகள் மட்டும் தொடர வேண்டும் என பிசியோதெரஃபிஸ்ட் வலியுறுத்தினார். நமசிவாயத்தை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.
சாய்ந்துக் கொள்ள தோதாக மடக்கும் வசதி உள்ள கட்டிலை வாங்கி திண்ணை அருகில் உள்ள அறையில் நமசிவாயத்தைப் படுக்க வைத்தனர். ஒன்றிரண்டு நாட்களுக்கு பின் யாருக்கும் தெரியாமல் நமசிவாயத்தின் மகன் அழுவதாக அவர் மனைவி சொன்னார். பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து வந்த பரிசோதனை அறிக்கைகள் நமசிவாயத்திற்கு கேன்சர் இருப்பதை உறுதி செய்தது. மாத கணக்கே கெடு உள்ள முற்றிய நிலைக்கு மிக அருகில் என்றார்கள். எழுபது வயது என்பதால் முடிந்த வரை மாத்திரைகளால் மட்டும் கேன்சர் செல் பரவுவதைத் தடுக்கலாம் என பரிந்துரைத்தனர் மருத்துவர்கள். அவரது முதுமை கீமோ தெரஃபியை ஏற்றுக் கொள்வது கடினம். வரும் முன் புற்று நோயைத் தவிர்ப்பது சுலபம் என்ற மருத்துவர்.. நாட்பட்ட இருமல், அதீத இரத்தப் போக்கு, வித்தியாசமான கட்டிகள் என பட்டியல் ஒன்றை அறிகுறிகளாக கூறினார். இந்தஅறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தோன்றினால் ‘ஸ்க்ரீனிங்’ செய்து கேன்சரைக் கண்டுபிடித்து முளையிலேயே தடுத்து பூரணமாக குணப்படுத்தலாம் என்றார். மருத்துவர் ஏன் விலாவாரியாக தன்னிடம் சொல்கிறார் என கவலையில் தோய்ந்த நமசிவாயனின் மகனுக்கு புரியவில்லை. அதே போல் தன் மகன் ஏன் அழணும் என்று நமசிவாயத்திற்குப் புரியவில்லை. அவர் மகனிடம் அவசியம் இல்லாமல் பேசிக் கொள்வது இல்லை. தன் தந்தை காலத்தில் வீட்டு தெருவில் கால் வைக்க நடுங்கியவர்களை எல்லாம் வீட்டிற்குள் சர்வ சாதாரணமாக தன் மகன் நுழைய விட்டு விட்டான் என்ற வருத்தம் நமசிவாயத்திற்கு இருந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் எக்ஸ்-ரே எடுக்கவோ அல்லது எதற்காகவோ ஸ்ட்ரெக்ச்சரில் வைத்து தள்ள நமசிவாயத்தைத் தூக்கினால், “தூக்கி தொப்புன்னு போடுங்க. என்னை மனுஷன்னு நினைச்சீங்களா இல்ல வேற ஏதாச்சும் நினைச்சிக்கிட்டீங்களா? எல்லாம் என் தலையெழுது” என்று தலையில் அடித்துக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வார். அவரது வாய் கோவத்தில் துடித்த வண்ணமே இருக்கும். நமசிவாயத்தின் மகன் முகம் இறுகி விடும். ஆனால் எதுவும் பேச மாட்டார். அவரின் உடலைத் திருப்பி, அன்று வாங்கிய தினகரன் செய்தி தாளைக் கிழித்து அவரது மலத்தைத் துடைத்தெறிந்து, குதத்தை சுத்தபடுத்தும் பொழுது மட்டும் கண்கள் கலங்கி விடுவார் நமசிவாயம். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் முந்தைய தினம், “உன்ன வேணும்னு நான் எதுவும் சொல்றதில்ல. வலி பொறுக்காம தான்” என்று மகனின் கையைப் பிடித்துக் கொண்டார் நமசிவாயம். அவரது மகன் அவரை ஓய்வெடுக்க சொல்லி அறையை விட்டு வெளியில் வந்து துளிர்ந்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்துக் கொண்டார்.
நமசிவாயத்தின் உலகம் சாளரம் வழியே தொடங்கி முடிந்தது. முடங்கி கிடப்பது அவரை மேலும் பலவீனப்படுத்தியது. பப்பாளிப் பழம் முதுகெலும்பிற்கு நல்லது என சித்த வைத்தியம் தெரிந்தவர் யாரோ சொன்னர்கள் என்று அவரது மகன் பறிந்து வந்து சாப்பிட கொடுத்தான். பப்பாளிப் பழத்தைப் பார்த்ததும் அவருக்கு அவர் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பப்பாளி மரம் நினைவிற்கு வந்தது. கொஞ்சம் ஏமாந்தால் பள்ளி விட்டு செல்லும் வழியில் வீட்டின் பின்னால் இருக்கும் குளத்தின் வழியாக வந்து பப்பாளிப் பழத்தை பையன்கள் பறித்து சென்று விடுவனர். தான் இல்லாததது அந்தக் குட்டிச் சாத்தான்களுக்கு வசதியாக போய் விட்டிருக்கும் என நினைத்தார். பொறுப்பாய் பள்ளி விடும் நேரத்தில் தோட்டத்தில் காவல் இருக்க அந்த வீட்டில் யாருக்கும் பொறுப்பில்லையே என கவலைக் கொண்டார். தன் பேரன் இருந்திருந்தால் சொல்லிப் பார்க்கலாம். சில சமயம் செய்வான். சில சமயம் கிரிக்கெட் விளையாட போயிடுவான். ஆனால் இப்ப அவன் வேறு மாநிலத்தில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான். அவனை சிரமப்படுத்த வேணாம் என அவனுக்கு விவரம் எதுவும் சொல்லவில்லை.
நமசிவாயத்திற்கு அவரது மருமகள் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கும் பொழுது ‘கேன்சர்’ என்று சொல்லியது காதில் விழுந்தது. வருபவர்கள் எல்லாம் அவரைப் பற்றித் தான் விசாரிப்பார்கள். தனக்கு தான் புற்று நோய் இருப்பதை மறைக்கிறார்களா என்று நமசிவாயத்திற்கு ஐயம் எழுந்தது. அது அரிக்கும் கவலையாக பரிணமித்தது. யாரிடமும் கேட்கவும் முடியவில்லை. சில நாட்களில் நடந்து விட முடியும் என்ற நம்பிக்கையும் தகர்ந்து நமசிவாயத்திற்கு வாழ்வின் மீதான பற்று பெரும் பயமாக குடிக் கொண்டது. அவரது உதடுகளில் தொடங்கி வாயின் உட்புறம் முழ்வதும் தொண்டை வரை கொப்பளங்கள் வந்தன. அவரால் பேசவோ, சாப்பிடவோ இயலவில்லை. மருத்துவமனை அழைத்து சென்று ட்ரிப்ஸ் ஏற்றினார்கள். அவரது உடல் வற்றலாய் இளைத்து விட்டிருந்தது. மூன்று நாளிற்கு சிறிது அளவு திரவ உணவு பருக முடிந்தது. ‘உங்களுக்கு சரி ஆகிடுச்சு. பயப்படாம நீங்க நடக்கணும்னு நினைச்சு ட்ரைப் பண்ணா கண்டிப்பா உங்களால நடக்க முடியும். முதலில் வாக்கர்ல ட்ரைப் பண்ணுங்க’ என்று பிசியோதெரஃபிஸ்ட் சொன்னார். ஆனால் தன்னால் கால்களைத் தூக்கவே முடியவில்லை என்று மறுத்து விட்டார். மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப் பட்டார். தினமும் ஊசி போட வேண்டும் என்பதால் பட்டிக்காரன் மகன் சுந்தரத்தை வர சொல்லி இருந்தார்கள். முதல் முறை வரும் பொழுது சுந்தரம் வீட்டு வாசலில் தயங்கி நிற்பதை சாளரம் வழியாக பார்த்தார் நமசிவாயம். சுந்தரத்தின் தயக்கம் நமசிவாயத்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. சரி நிற்கட்டும் என கம்மென்று இருந்து விட்டார். ஆனால் சுந்தரம் மரியாதை தெரிந்தவன் என்ற முறையில் அவனை நமசிவாயத்திற்கு பிடித்து விட்டது. பதினைந்து நிமிடம் கழித்து நமசிவாயத்தின் மகன் பார்த்து சுந்தரத்தை உள்ளே அழைத்து வந்தார்.
புயல் வேறு நடுவில் வாட்டி எடுத்து விட்டது. சவுக்கு எல்லாம் ஓடிந்து விட்டிருந்தது. மின்சாரம் இல்லாததால் ஏர் பெட் வேலை செய்யாமல் மீண்டும் சோர் பெட் வந்து பின்னால் தோல் உரிய தொடங்கியது. ‘பட்ட காலிலேயேவா படணும்’ என நமசிவாயத்தின் மனைவி பொறுமிக் கொண்டிருந்தார். நமசிவாயம் இரவில் புலம்ப வேறு துவங்கி விட்டிருந்தார். ஏனோ கூப்பிடு தூரத்தில் எமன் வந்து விட்டதாக நமசிவாயத்தின் மனைவிக்கு தோன்றியது. அப்படிப் புலம்பினால் நாள் நெருங்கி விட்டது என அர்த்தம் என்று அவரின் பாட்டி சொல்லியுள்ளார். அவர் பாட்டியும் அப்படியே புலம்பிய கொஞ்ச நாட்களில் போய் சேர்ந்தார். நான்கைந்து நாட்கள் ஆகியும் நமசிவாயத்தின் மனைவி எதிர்பார்த்தாற் போல் எமன் வரவில்லை. ஜொள்ளன் தான் வந்தான். அதுவும் சாதாரணமாக அன்று. ஆர்ப்பாட்டமாகவும், அழையா விருந்தாளியாகவும் நமசிவாயத்தின் வீட்டிற்குள் வந்திருந்தான். நமசிவாயம் மட்டுமே தான் அப்பொழுது அவ்வறையினுள் இருந்தார். ஏதோ உடையும் சத்தம் கேட்டு பதறி விழித்தார். எழுதுவதற்காக உள்ள சின்ன மேசை மீதிருந்த மருந்து பாட்டில்கள், மாத்திரைகள் எல்லாவற்றையும் இழுத்து கைகளால் அதை தேய்த்துக் கொண்டு அந்த பத்து மாத சிறுவன் தன் பொக்கை வாயால் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் வாயில் ஜொள் வடிந்துக் கொண்டிருந்தது. நமசிவாயத்தின் மனைவி ஓடி வந்து குழந்தையைத் தூக்கி தூரத்தில் வைத்து விட்டு அனைத்தையும் ஒழுங்குப் படுத்தினாள்.
“நல்லவேள.. ஊசிய கையில குத்திக்கல. சரியான வாலு” என்றார் நமசிவாயத்தின் மனைவி.
நமசிவாயம் மனைவியையும், குழந்தையையும் மாறி மாறி பார்த்தார். வலது கையை வாயினுள் விட்டுக் கொண்டு இடது கையை நமசிவாயத்தை நோக்கி நீட்டிச் சிரித்தது. ஜொள்ளு மேலும் கொஞ்சம் வாயினுள் இருந்து வடிந்தது.
“யார் இந்த ஜொள்ளு?” என்றார் ஜொள்ளனைப் பார்த்துக் கொண்டே.
“உங்க தம்பியோட பேரன். பேரு சுபாஷ். சுபாஷ் குட்டி” என்றார் உடைந்த பாட்டிலின் கண்ணாடித் துகள்களை அகற்றியவாறு.
நமசிவாயத்திற்குப் புரியவில்லை. உடைந்த அந்தப் பாட்டிலின் விலை நூற்றிருபது ரூபாயோ என்னவோ. இன்னும் என்ன உடைந்ததோ? மலத்தை இளக்கும் டானிக் பாட்டில் அது. ஜொள்ளன் தவழ்ந்து கட்டில் நோக்கி வந்தான். கட்டிலைப் பிடித்து நிற்க முயலும் பொழுது, நமசிவாயத்தின் பங்காளி ஆறுமுகம் அறைக்குள் வந்தார். ஜொள்ளனைத் தூக்கிக் கொண்டு நமசிவாயத்தை சில நொடிகள் பார்த்தார். பின் ஜொள்ளனோடு சென்று விட்டார். ஆறுமுகத்தின் கண்கள் நமசிவாயத்தைப் பார்க்கும் பொழுது கலங்கியது போல் இருந்தது. ஆறுமுகம் நமசிவாயத்தின் சித்தப்பா மகன். இரண்டு குடும்பமும் பேசி நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. தன் மனைவியைப் பார்த்தார் நமசிவாயம். ஜொள்ளனின் வரவால் எந்தச் சலனமும் நிகழாதது போல் சாதாரணமாக இருந்தது அவர் மனைவியின் முகம். சுபாஷ் என்று பெயரெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாளே என்று ஆச்சரியமாக இருந்தது. அவர் மனைவி வீட்டை விட்டு செல்லும் சுபாவம் உடையவர் அல்ல. ஆனால் பெண்கள் சமையலறையில் இருந்த வண்ணமே எல்லாம் தெரிந்துக் கொண்டு விடுகின்றனர். ஒருவேளை தனக்கு தெரியாமல் ரகசியமாக பேசுவாளோ என ஐயத்துடன் ஓரக் கண்ணால் பார்த்தார். எப்படிப் பெயர் தெரியும் என்று நேரடியாக கேட்டாளும் மனைவியிடம் இருந்து பதில் வராது. ‘அது இப்ப ரொம்ப முக்கியமா?’ என்று கேட்டு விட்டு அவர் மனைவி போய் விடுவார்.
அடுத்த நாளும் ஜொள்ளன் வந்தான். திண்ணையில் நமசிவாயத்தின் மகன் அமர்ந்திருந்தார். அவர் ஜொள்ளனைத் தூக்கி திண்ணையில் தன்னருகில் அமர வைத்துக் கொண்டார். ஜொள்ளன் சாளரக் கம்பிகளைப் பிடித்து தடுமாறியவாறே நின்று நமசிவாயத்தை நோக்கி கையை நீட்டினான்.
“பிடிப்பா.. கம்பியில இடிச்சுக்கப் போறான்” என்றார் நமசிவாயம்.
நமசிவாயத்தின் மகன் கம்பியில் இடித்துக் கொள்ளாமல் வாட்டமாக ஜொள்ளனைப் பிடித்துக் கொண்டார். ஒரு கையால் பிடித்துக் கொண்டு தனது தோள் மேல் இருந்த துண்டை எடுத்து அவனது ஜொள்ளைத் துடைத்து விட்டார். கம்பியை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒரு காலை மட்டும் தூக்கி தூக்கி ஆடுவது போல் தட்டி சத்தம் எழுப்பினான். அவனைத் தூக்கி கொஞ்சம் வேண்டும் போலிருந்தது நமசிவாயத்திற்கு.
“இன்னிக்கும் வந்துட்டானா? இதான் ரத்த பாசம் போல” என்று சுபாஷைப் பார்த்து, “டோய் கண்ணா..” என்றார் நமசிவாயத்தின் மனைவி. ஜொள்ளன் இரண்டு கால்களையும் தட்டி குதூகலித்தான். நமசிவாயம் எழுந்து அமர்ந்து ஜொள்ளனின் கையைத் தொட்டு பார்த்தார்.
“தாத்தா பாரு.. தாத்தா சொல்லு” என்றார் நமசிவாயத்தின் மகன். “த்தா..” என்பது போல் ஏதோ சத்தம் எழுப்பினான் ஜொள்ளன்.
ஜொள்ளனின் வரவு அதிகமானது. முதலில் அவனாக வந்துக் கொண்டிருந்தான். சில சமயம் அவனது வீட்டில் இருந்து யாராவது அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள். நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருமென ஜாதிக்காய் பொடியை வாங்கி வந்து, இரவுகளில் பாலில் கரைத்து தர சொல்லி விட்டு சென்றார் ஆறுமுகம். நமசிவாயத்திற்கு அது மருமகளின் அண்ணன் காலை வேளைகளில் பருக பரிந்துரைத்த முட்டைக்கோஸ் சாற்றை விட நன்றாகவே இருந்தது. காலையில் ஜொள்ளனின் விளையாட்டுக் களம் அவர்கள் வீட்டு திண்ணையாக தான் பெரும்பாலும் இருந்தது. நமசிவாயத்தின் மகனோ அல்லது மருமகளோ ஜொள்ளனுடன் இருப்பார்கள். திண்ணையில் சென்று அமர்வது தான் நமசிவாயத்தின் ஆகப் பெரும் விழைவாக இருந்தது. தன்னால் வாக்கார் உதவியுடன் நடக்க இயலும் என மனைவியிடம் சொன்னார் நமசிவாயம். நமசிவாயத்தின் மனைவி மகன் வந்த பிறகே வாக்கரை முயற்சிக்க தந்தாள். நமசிவாயம் தடுமாறி விழுந்தாலும் தாங்க வலுவான ஆள் வேண்டும் என்பது அவர் மனைவியின் கவலை. ‘ஒரு மனுஷன் நடக்க வாக்கர் கேட்டா கூட தர மாட்டாங்களா இந்த வீட்டில்!?’ என மனைவியைக் கரித்துக் கொண்டிருந்தார். மகன் மலம் அள்ளும் பொழுது கண் கலங்கியவர் மனைவியின் எந்தப் பணிவிடைகளாலும் நெகிழப் படவில்லை. மாறாக குறைப்பட்டுக் கொண்டே தான் இருந்தார்.
அடுத்த இரண்டாவது தினம் ஜொள்ளனின் விளையட்டுக் களமான திண்ணைக்கு மகனின் உதவியுடன் சென்று விட்டார் நமசிவாயம். அடுத்தடுத்த நாட்களில் அவராகவே முயன்று திண்ணைக்கு வந்து விட்டார். பள்ளி விட்டு செல்லும் அந்தக் குட்டிச் சாத்தான் மாணவர்கள் நின்று ஜொள்ளனிடம் விளையாடி விட்டு செல்வார்கள். ஜொள்ளனுக்கு அவர்களைப் பிடித்திருந்ததால் நமசிவாயமும் தன் மகனிடம் சொல்லி கொல்லியில் இருந்து பறித்து வந்திருந்த கொய்யாப் பழங்களைக் கொடுத்து அவர்களுடன் நண்பர் ஆகி விட்டார். ஜொள்ளன் இன்னும் நான்கு நாட்களில் வந்து விடுவான் என வெறுமையாக இருந்த திண்ணையைப் பார்த்து சொல்லிக் கொண்டார் நமசிவாயம்.