Search
டமால் டுமீல் திரைவிமர்சனம்

டமால் டுமீல் விமர்சனம்

Damaal Dumeel review

ஒரு நன்னாளில், மணிகண்டனுக்கு வேலை போய் விடுகிறது. அடுத்த நாள், அவன் வீட்டு வாசலில் 5 கோடி ரூபாய் பணம் கொண்ட அட்டைப்பெட்டி ஒன்றைப் பார்க்கிறான். பின் என்னானது என்பதுதான் படத்தின் கதை.

MONEYKANDAN. நியூமராலஜி பார்த்து நாயகன் வைத்துக் கொள்ளும் பெயர். பணத்தைத் தனதாக்கிக் கொள்ள மணிகண்டன் கற்பித்துக் கொள்ளும் சமாதானம், தானொரு சாமானியன் என்பது. வர வர தமிழ் சினிமா சாமான்யர்களுக்கு நிறையதான் சலுகை தருகிறது. சாமானியன் மணிகண்டனாக வைபவ் நடித்துள்ளார். நாயகனாக அவர் அறிமுகமாகும் முதற்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு போலீஸ்காரரும், ஒரு ரெளடியும் அவரது வீட்டுக்குள் வந்து ஒருவருக்கு ஒருவர் சுட்டுக் கொண்டு இறக்கும்பொழுது, அவர் காட்டும் பாவனை ரசிக்க வைக்கிறது.

மீராவாக ரம்யா நம்பீசன். காதலிக்கவும் காதலிக்கப்படவும்தான் படத்தில் அவர் இருந்தாலும், சினிமாத்தனம் இல்லாத நாயகியாக வருகிறார். சில இடங்களில் வைபவ் இவருக்கு தம்பி போல் காட்சியளிக்கிறார். வாட்ச்மேனாக வரும் சார்லி வாட்ஸ்மேனாக படத்தில் வருகிறார். படத்தில் மிக முக்கியமான பாத்திரம் அவருக்கு. கோட்டா ஸ்ரீநிவாசராவும், ஷாயாஜி ஷிண்டேவும் அவர்களது அடியாட்களும் கலக்கியுள்ளனர். படத்தைக் கலகலப்பாக்குவது வில்லன்களின் அடியாட்களாக வருபவர்களே!

பணம் மனிதனை என்னப் பாடுபடுத்துகிறது என்பதை இயக்குநர் ஸ்ரீ அழகாக திரைக்கதையாக்கியுள்ளார். ஆனால் அமெரிக்கா செல்வதை ஏதோ சென்னையிலிருந்து மதுரைக்கு செல்வது போல் படு மொக்கையாகக் காட்டியுள்ளனர். என்னக் கொடுமை சார் இது? காலையில் அமெரிக்கா போகணுமென முடிவெடுக்கிறார் நாயகன். பின் அமெரிக்காவிற்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்கிறார்; இரவு 12 மணிக்கு டிக்கெட் புக் செய்துவிடுகிறார். அதாவது அஞ்சு பத்து லஞ்சம் (சுமார் 7000/-) கொடுத்து காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் சாமானியராம்! பின் போலி பாஸ்போர்ட் இரவு 8 மணிக்கு கிடைக்கும்படி ஏற்பாடு செய்கிறார். அதற்கு ஜஸ்ட் ஒன்றரை லட்சம்தான் செலவாகிறது. விசா என்ற வார்த்தை ஒருதடவை கூட படத்தில் ஒலிக்கவில்லை.

இப்படியாக லாஜிக் பார்க்காமல் படம் பார்க்கும் பக்குவம் இருந்தால், படம் நல்ல க்ரைம் காமெடி த்ரில்லர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான இயக்குநர் ஸ்ரீ, திரைக்கதையிலுள்ள லாஜிக் பிழைகளை நீக்க இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பாஸ்போர்ட்டுக்கு புகைப்படம் எடுப்பவர் ஓரிரு நிமிடங்கள்தான் வந்தாலும் அசத்துகிறார். படத்தின் பலம் கதாபாத்திரங்களின் தேர்வே!

படத்தின் நீளம் குறைவென்பதால், படம் சீக்கிரம் முடிந்துவிட்ட உணர்வைத் தருகிறது. முக்கியமாக இடைவேளை, படம் தொடங்கியதுமே வந்துவிடுவது போலுள்ளது. கேமியோ ஃப்லிம்சுக்கு நல்லதொரு அறிமுகமாக இப்படம் அமையும். தமணின் இசையும், எட்வின் சகாயின் ஒளிப்பதிவும், பரமேஷ் கிருஷ்ணாவின் படத்தொகுப்பும் படத்தை ‘க்ரிஸ்பாக’ உணர உதவுகிறது.