படிக்கிறோமோ இல்லையோ.. புக் ஷாப்பிற்கு போனா சும்மாவாச்சும் ஒரு புக் வாங்கணும்னு தோணும். அன்னிக்கும் அப்படித் தான். கையில காசும் அதிகமா இல்ல. குட்டிப் போட்ட பூனையாட்டும் சுத்திட்டிருந்த தினேஷின் தோளைப் பிடிச்சிழுத்து, “நல்ல புக் ஒன்னு சொல்லுடா?” என என் பட்ஜெட்டையும் சொன்னேன்.
அவன் யோசிக்காம, “வாடிவாசல்” என்றான்.
“வாடி வாசலா?”
“செம புக். சூப்பரா இருக்கும். ஜல்லிக்கட்டு பத்தி புக்.”
“உன்கிட்ட இருக்கா?”
“இல்ல. மிஸ் பண்ணாம வாங்கிடு. ரொம்ப நல்லா இருக்கும்னு எல்லாம் சொன்னாங்க.”
“அட வெண்ண. படிக்காமலே இவ்ளோ பில்டப்பா? உன்ன போய் கேட்டேன் பாரு” என்று நான் சொல்றத காதில் வாங்காம, ஷெல்ஃபில் தேடி எடுத்து புக்கை கையில் கொடுத்துட்டான்.
சின்ன புக். 50 ரூபாய் தான். ஆனா முதல் பதிப்பு 1959ன்னு போட்டிருந்துச்சு. புரியுமான்னு சந்தேகம் வந்துச்சு. சரி போய் தொலையட்டும் என ஒன்னும் சொல்லாமல் வாங்கிட்டேன். அப்பவும் ஒரு சந்தேகம். அவன் படிக்கிறதுக்காக நம்மள வாங்க வச்சிருப்பானோ என்று. அதுக்கு மேல புக் பற்றி எதுவும் மனசுல ஓடல. கே.கே.நகர் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’சிலிருந்து எப்படி வேளச்சேரி போறது என்று கவனம் சிதறிடுச்சு.
அடுத்த நாள் விழுப்புரம் போயிட்டு, திரும்பி பஸ்சில் சென்னை வர்றப்ப சும்மா புக்கை எடுத்துப் புரட்டினேன். சி.சு.செல்லப்பா என்னைத் தூக்கி ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டுட்டாரு. ‘வாடிவாசல்’ன்னா ஊர்ப் பெயரா இருக்கும்னு நினைச்சேன். ஆனா வாடிவாசல்ங்கிறது ஜல்லிக்கட்டுக்காக வந்த மாடுகளை அடைச்சு வச்சிருக்கும் இடத்திற்கும், மைதானத்திற்கும் நடுவுல இருக்கிற சின்ன வாசல். அது வழியா தான் மாடு அணைக்கிறவங்க இருக்கும் மைதானத்துக்கு ஆடி அசைஞ்சு மாடுங்க வரும். பில்லைக் காளை, கரட்டுப்பாளம் மயிலை, பளையூர் கொராலு, ராட்சசக் கருப்புக் காரி என பல களம் கண்ட டெரர் மாடுகள். வெறும் எழுபது பக்கங்களில் சி.சு.செல்லப்பா விறுவிறுப்பான விஷுவல் வச்சி அசத்தியிருக்கார். படிச்சி முடிச்சதும் ஒரு நல்ல ஆக்ஷன் படம் பார்த்த திருப்தி கிடைச்சுது.
இந்தக் கதையில் ஹீரோ உண்டு, ஹீரோயிசம் உண்டு. ஆனா வில்லன் கிடையாது. மாட்டுக்கும், மனுஷனுக்கும் சண்டை நடக்குது. அவ்ளோ தான். சண்டைன்னு கூட சொல்லலாமான்னு தெரில. தவ்வி, திமிறி, முரண்டுப் பண்ணும் மாடுகளை மாடு அணைக்கிறவங்க அணையணும். மிஸ் ஆச்சுன்னா குடல் சரிஞ்சிரும். இல்ல விலா உடையறது அது இது என சில்லறைகளை பலமா அள்ளிக்க வேண்டிது தான். இந்தக் கதையில் வர ஹீரோ ‘பிச்சி’ பாட்ஷா ரஜினி மாதிரி. நாடி நரம்பு ரத்தத்தில் எல்லாம் மாடு அணைக்கிற டெக்னிக் ஊறிப் போனவன். அவங்க அப்பா அம்புலியை குத்தி சரிச்ச காரி என்னும் காளையை அணைக்கிறது தான் பிச்சியோட டார்கெட். வாடிபுரம் காரி காளை வர்றது தெரிஞ்சதும் மைதானம் காலி ஆயிடுது. பிச்சியும், மருதனும் மட்டும் நிக்குறாங்க. மருதன் பிச்சியோட மச்சான். மலையேற மட்டுமல்ல மாடு அணைக்கவும் மச்சான் தயவு வேணும் போல. பிச்சி மாட்டுக் கொம்பில் இருந்து இரண்டு பவுனை எடுத்து ஜெயிச்சிடுறான். தோத்தாங்கோலி மாடு பிச்சியை முட்டப் பாயுது.
‘டுர்ரீ! டுர்ரீ!’ என கத்தி மாட்டின் கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கிறான் மருதன். ஜல்லிக்கட்டு மாடுங்களுக்கு டுர்ரீ சொன்னா கோவம் வந்துடும் போல. ஆனா காரி மத்த மாடுங்க மாதிரி இல்லை. முட்டித் தள்ள டார்கெட் வச்ச பிச்சிகிட்டயே வேகமா போயிட்டிருக்கு. மாட்டுக்காரங்க டுர்ரீ சொல்லிட்டுப் பாதையில ஓடுவாங்க. மாடும் வாடிவாசலில் இருந்து ஓடி வரும். ஆனா கொராலு, காரிலாம் மத்த மாடுங்க மாதிரி இல்லை. ஹிட் லிஸ்ட் ஜல்லிக்கட்டு மாடுங்க. நரித்தனம் ஜாஸ்தி. ஒருத்தனையும் கொம்பைத் தொட விடாது. போட்டியில் ஜெயிச்சாலும் உக்கிரமாகிட்ட காரி மாட்டிடம் இருந்து பிச்சி தப்பிச்சானா என புத்தகம் வாங்கிப் படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க.
அப்பப்ப தினேஷ் சொல்றதும் சரியா தான் இருக்கு. செம புக்.
‘எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்’
– முல்லைக்கலி
(பெருமாள்முருகனின் முன்னுரையில் இருந்து)