தன் தந்தை மீது விழும் பழியை எப்படி தங்கமகனான தமிழ் கலைகிறான் என்பதே படத்தின் கதை.
ஹேமா டிசோசாவாக எமி ஜாக்சன். முடியைத் தூக்கிச் சீவிய முன் நெற்றியோடு, சுடிதார் அணிந்து வரும் அவர் மிக அந்நியமாகத் தெரிகிறார். ‘ஹீரோ ஃப்ரெண்ட்’ ஆக வரும் சதீஷ் முதற்பாதி கலகலப்புக்கு உதவுகிறார். தனுஷ் மீசையை மழித்தால் கல்லூரி மாணவர்; மீசை வைத்தால் பொறுப்பான மகனும் மனிதனும் ஆகி விடுகிறார். ஆனால் சதீஷின் உடல் வாகிற்கு, அத்தகைய மாற்றம் பொருந்தவில்லை.
மறதியில் தவிப்பவராகவும், பாசமானதொரு தந்தையாகவும் வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். எனினும் வழக்கமான அவரது கலகலப்பு மிஸ்ஸிங். வி.ஐ.பி.யில் அம்மா சென்ட்டிமென்ட் என்றால் இப்படத்தில் அப்பா சென்ட்டிமென்ட்டைத் தொட்டுள்ளார் இயக்குநர் வேல்ராஜ். தனுஷின் அம்மாவாக ராதிகா சரத்குமாரும், அத்தையாக சீதாவும் நடித்துள்ளனர். சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், ஜெயப்ரகாஷ் அழுத்தமான கதாபாத்திரமாக மனதில் பதிகிறார். அதாவது மற்ற கதாபாத்திரங்களைச் சுலபமாக தனுஷ் ஓவர்-டேக் செய்து விடுகிறார். அநேகமாய் ஜெயப்ரகாஷ் மட்டுமே விதிவிலக்காக மனதில் பதிகிறார்.
காதலிக்காக நண்பனையும், பெற்றோர்களுக்காகக் காதலியையும் நாயகன் பிரிகிறான். தன் நண்பன் தன்னை விட அழகாக இருக்கிறான் என்ற நாயகனின் தாழ்வுணர்ச்சியே, முன்னதுக்கான காரணம். இங்கெழும் பொஸிசவ்னெஸைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், நண்பனும் உறவினனுமான ஆதித்தை (‘இனிது இனிது’ படத்தின் நாயகன்) வில்லனாகச் சித்தரிக்க வேண்டி, ‘சிறந்தது எல்லாம் ஏன் உனக்கே கிடைக்கணும்?’ என்ற அவரது மனமாற்றம் தான் வலிந்து திணித்ததாகத் தெரிகிறது. படத்தின் பெயரை அழுத்தமாக வலியுறுத்த, நாயகன் தன் காதலியின் கோரிக்கையை நாயக முறுக்கோடு மறுக்கிறான். ஒரு பதுமையாய் வந்து போகாமல், எமிக்கு நடிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளது திரைக்கதை.
இல்லத்தரசி யமுனாவாக சமந்தா. கணவனே வாழ்க்கையின் பெரும்பேறு; பாதுகாப்பை அளிப்பவன் என நினைக்கும் மெகா சீரியல் நாயகி பாத்திரம். ஒரு கட்டத்தில், சமந்தாவும் எமி ஜாக்சனும் கோயிலில் சந்தித்துக் கட்டிப் பிடித்து அழாத குறையாக கண்ணீர் வடிக்கும் போது மெகா சீரியல் தான் பார்க்கிறோமோ என ஒரு கணம் குழப்பம் நேருகிறது (அதனாலென்ன ஹீரோயின்களில் ஒருவரைக் கூட லூசுத்தனமாகச் சித்தரிக்காததற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்தானே!). இப்படித் தொய்வுறும் காட்சிகள் எல்லாம், நான் இருக்கேன் ஆபத்பாந்தவனாய் என அனிருத் தன்னிருப்பை வெளிபடுத்திய வண்ணமே உள்ளார். முதல் காட்சிகளில் இத்தகைய சீரியல் தன்மை தோன்றாத அளவு நெருக்கமாக ஒருவரை ஒருவர் நெறுக்கிக் காதலிக்கின்றனர் ஹேமாவும் தமிழும்.
சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் பிறர் பணத்தைக் குற்றவுணர்வின்றிக் கவர நினைக்கும் மனித மனத்தையும், அதன் கசடுகளையும் கதாபாத்திரங்கள் வாயிலாகக் கோடிட்டுக் காட்டுகிறார் இயக்குநர் வேல்ராஜ். எனினும் அதற்கான அழுத்தங்களைக் காட்சிகளில் வைக்காமல், நாயகனின் சாகசத்திற்கான காரணிகளாக அவற்றைக் கடந்து விடுகிறார். அவரது முந்தைய படத்தைப் போலவே, வில்லனைப் பழி வாங்குறேன் பேர்வழியென நாயகனை வன்முறையில் இறக்காததற்காக வேல்ராஜை எவ்வளவு மெச்சினாலும் தகும்.
படத்தில் ஒரு துள்ளல்தன்மை இருந்தாலும், எல்லாக் காட்சிகளுமே யூகிக்க முடிந்ததாகவும் பலமுறை பார்த்துப் பழகியதாகவும் உள்ளது ஒரு குறை. ஒரு நடுத்தரக் குடும்பம் வசிக்கும் வீட்டில், புதிதாய் திருமணமாகி இருக்கும் தம்பதிக்கு எத்தகைய சங்கடங்கள் ஏற்படுமெனப் பதிந்துள்ளார் இயக்குநர். “என்னப்பா இவ்ளோ சீக்கிரம் ஊர்ல இருந்து வந்துட்ட?” என்ற கேள்வி, வேதனை கலந்த நகைச்சுவையாகும். வசனங்கள் ஆங்காங்கே இப்படிக் கிச்சுகிச்சு மூட்டிய வண்ணமுள்ளது.
பீர் குடித்து போதை ஏறிய எமி ஜாக்சன், “நீ பார்க்க சுமாரா தானிருக்க” என தங்கமகனைப் பார்த்துச் சொல்வார். போதையில் யாராவது பொய் சொல்வார்களா?