Search

தங்க மீன்கள் விமர்சனம்

thanga meenkal

சிறுகதை ஒன்றினைக் கவிதையாக்கிக் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் இயக்குநர் ராம். ஒளிப்பதிவாளர் அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. படத்தின் பலமே அதன் காட்சியமைப்புகள் தான்.

செல்லம்மாவிற்கும் அவளது தந்தை கல்யாணசுந்தரத்திற்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு தான் படத்தின் கதை. 

செல்லம்மாவாக சாதனா. பெரிய மனித தோரணையில் ஏற்ற இரக்கத்துடன் பேசும் திரைப்படங்களுக்கே உரித்தான குழந்தை. ‘அவர் நல்ல அப்பா. ஏமாத்த மாட்டார்’ என்னும் பொழுது ரசிக்க வைக்கிறார். வசனமற்ற காட்சிகளில் முக்கியமாக ‘ஆனந்த யாழ்’, ‘ஃபர்ஸ்ட் லாஸ்ட்’ போன்ற பாடல்களில் செல்லம்மாவின் குறும்புத்தனம் இயல்பாய் உள்ளது. நா.முத்துக்குமார் வரிகளில், யுவன் இசையில் பாடல்கள் எல்லாம் மனதை வருடுகின்றன. 

காலங்காலமாய் வஞ்சிக்கப்பட்டு வரும் பெண்களின் அடையாளமாய் வடிவு எனும் கதாபாத்திரத்தில் ஷெல்லி கிஷோர் நடித்துள்ளார். படத்தில் இவர் செல்லம்மாவின் தாயாக வருகிறார். செல்லம்மாவிற்குப் படிப்பு வரவில்லை என அனைவரும் நினைக்கும் பொழுது, அவளுக்கு ஆதரவாய் அவள் தந்தையாவது உள்ளார். ஆனால் அப்படி எத்தகைய உறுதுணையினுமின்றி, குடும்பச் சூழலில் அபலையாய் சிக்கித் தவிக்கிறார் வடிவு. இவரது மாமியாராக ரோகினியும், மாமனாராக பூ ராமும் நடித்துள்ளனர்.

படத்தின் அதி அற்புதமான பாத்திரத்தில் சஞ்சனா எனும் சிறுமி நடித்திருக்கிறாள். நித்யஸ்ரீ எனும் அந்தப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறாள் சஞ்சனா. பிரதான பாத்திரங்கள் இருவரைத் தவிர்த்து, படத்தில் வரும் மற்ற அனைத்துப் பாத்திரங்களுமே வெகு இயல்பாய் பொருந்துகின்றனர். அதற்கு உதாரணமாக ஒரே ஒரு காட்சியில் வரும் எவிட்டா டீச்சரின் கணவராக நடித்திருக்கும் அருள்தாஸை சொல்லலாம். எவிட்டா டீச்சராக வரும் பத்மப்ரியா ஈர்க்கிறார். ஆனால் செல்லம்மாவிற்கு எவிட்டா டீச்சர் மேல் ஏற்படும் ஈர்ப்பிற்கான காரணம் வலுவாகப் பதியப்படவில்லை.

கல்யாணி (எ) கல்யாணசுந்தரமாக இயக்குநர் ராம் நடித்துள்ளார். வழக்கமான தமிழ்த்திரைப்பட நாயகனாக இல்லாமல், திரைக்கதையில் வரும் பிரதான பாத்திரமொன்றாக நடித்திருப்பதால், அவரது நடிப்பை   கல்யாணி எனும் கதாபாத்திரம் மறைத்து விடுகிறது. படத்தில் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் ஏராளம். படத்தை ஒரு சோகனுபவமாக மாற்றி கலையம்சம் பெறும் முயற்சியோ என்னவோ!?

உதாரணமாக சில. W என்ற எழுத்துப் பெரிதாகக் கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கு. கணித ஆசிரியை அதை அழிக்காமல் ஓர் ஓரமாய் பின்னங்களை எழுதுகிறார். தேவதை உடை அணிந்து கொண்டு செல்கிறாள் செல்லம்மா. ரிஹர்சலில் நடனமாட வரிசையில் நின்று கொண்டுள்ளார். அவரது எதிரே கொடுமைக்காரரான ஸ்டெல்லா மிஸ் நின்று கொண்டிருக்கிறாள். பின் செல்லம்மா முன்னால் வந்து தனது தேவதை உடையை மகிழ்ச்சியாகக் காட்டுகிறாள். அப்போது தான் அது தேவதை உடை என்று தெரிந்தாற்போல், ‘காத்திருந்து’ ஸ்டெல்லா மிஸ் பொரிந்து தள்ளுகிறார். அதே போல் செல்லம்மாவிற்கு நடனம் வராது என்பதை சொல்லித் திட்ட, ஸ்டெல்லா மிஸ் ஏன் ரிஹர்சல் நாள் வரை காத்திருக்கணும்? அப்போது தான் செல்லம்மா பாத்திரத்தினை வைத்து வலுவாகச் சோகத்தைப் பிழிய முடியும் என்பதற்காக தானே! 

SPOON FEEDING செய்து ரசிகர்களைக் கொச்சப்படுத்த மாட்டேன் என்றும், திரைமொழி குறியீடு புரியாதவர்களை முட்டாள்கள் என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கோனார் உரைஎழுதி வருகிறார். 

‘எதுக்கு நாயை அடிச்சீங்க?’ – வடிவு.

‘அப்போ வேற யாரைத்தான்டி நான் அடிக்கிறது? – கல்யாணி.

கல்யாணியின் இந்த இயலாமை ‘கற்றது தமிழ்’ பிரபாகரனை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் இப்படம் சுபமாய் முடிகிறது. 
Leave a Reply