Shadow

தண்ணீரில் விளக்கெரித்த வள்ளலார்!

தண்ணீரில் விளக்கெரித்த வள்ளலார்

வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார் வகுத்த உயர்நெறியே சன்மார்க்க சங்கமாய் உருவாகியது. அனைத்து உயிகளிடத்திலும் அன்பு செய்தலே சன்மார்க்கத்தின் முக்கியக் கொள்கை. சிறந்த மனிதநேயம் கொண்ட இவர். ‘உயிர்களிடத்து இரக்கம் காட்டுங்கள். எல்லா உயிர்களையும் உங்களுடைய உயிர் போலவே எண்ணுங்கள், பாவியுங்கள்’ என்று ஜீவ காருண்யத்தைப் போதித்தவர்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன்,பசியினால் இளைத்தே
வீடு தோறிரந்தும் பசியறாதயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதித்தேன்..

என்கிற பாடல் அவரது ஜீவகாருண்ய கொள்கையை உணர்த்தும். நிலம் வறண்டு போனாலும் மனிதனது மனம் வறண்டு போய்விடக்கூடாது என்பது அவரது எண்ணம்.

இராமலிங்க அடிகளாரின் பாடல்களில் தாயுமானவர், திருமூலர் போன்றோரின் சாயல் தென்படும். நாயன்மார்களில் ஒருவரான ஞானசம்பந்தரே இவருடைய மானசீக குரு. இராமலிங்கருக்கு இரவில் பாட்டெழுதுவது மிகவும் பிடித்தமான செயல். அருகே ஒரு எண்ணெய் விளக்கு வைத்துக் கொண்டு எழுதுவார்.

இப்படி எழுதும் போது ஒரு நாள் விளக்கிலே எண்ணெய் தீர்ந்து போய்விட்டது. எண்ணெய்ப் பாத்திரம் என்று நினைத்து பக்கத்தில் உள்ள தண்ணீர் பாத்திரத்திலிருந்து நீர் ஊற்றினார். விளக்கு அணையவில்லை. தொடர்ந்து எரிந்தது.

இதனை அவர் சீடர்களில் ஒருவரான தொழுதூர் வேலாயுதம் கண்டு வியந்தார். பின்னர்..

தண்ணீர் விளக்கெரித்த தன்மைபோல் மாந்தர்தம்
உண்ணீர் சிவம்விளங்க ஓங்குவிக்கும் கண்மணியாம்
எங்கள் இராமலிங்கர் நல்ல அருட்பா முறையைத்
துங்கமுற மாணா தொழு.

இவ்வாறு தனது குருநாதரை போற்றி பாடினார்.

– தவமணிப் புதல்வன்