தலைப்பு மட்டுமன்று படமும் வித்தியாசமாகவே உள்ளது. ஆனால் கதைக்குப் பொருந்தும் தலைப்பாகத் தெரியவில்லை.
சூரியனின் மேற்பரப்பில் எழும் வெப்ப அலைகளால் பூமியில் காந்தப் புயல் வீசுகிறது. அதனால் செல்ஃபோன் சிக்னல்கள் வேலை செய்யாமல் போகின்றன. மீண்டும் எப்படி வேலை செய்கிறது, அதுவரை என்ன நிகழ்ந்தது என்பதே கதை.
வழக்கமான தமிழ்ப் படமாக இல்லாமல் படம் நெடுகவே நிறைய சுவாரசியங்கள் உண்டு. உதாரணத்திற்கு பிக்பாக்கெட் திருடனாக வரும் அஜய்யின் கதாபாத்திரம். எல்லாப் பாத்திரத்துக்குமே சம அளவு முக்கியத்துவம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனித்துவ அடையாளங்களையும் தந்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பு முகவர் முகிலாக வரும் அட்டகத்தி தினேஷ், கண்ணை உருட்டியவாறே இருக்கார் இப்படத்திலும். சிமியாக வரும் பிந்து மாதவியினுடனான காட்சிகள் ஈர்க்கவில்லை எனினும் அலுக்கவில்லை. சிமியின் குழந்தைப் பருவ ஃப்ளாஷ்-பேக், பிந்து மாதவியின் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது.
படத்தின் அச்சாணியே வசந்தாக வரும் நகுல்தான். 3 இடியட்ஸ் அமீர்கான் போன்றவரென அவரது பாத்திரத்தை வரையறுக்கலாம். பொறியியல் கல்லூரி இறுதி வருட மாணவர்களுக்கு ஃப்ராஜெக்ட்ஸ் செய்து தருபவராக வருகிறார். சோலார் பைக்கை உருவாக்கிப் பயன்படுத்துதல், ஏர்-டாக் நிறுவனத்தின் access code-ஐ ஹேக் செய்தல் என ஆல்-இன்-ஆல் அழகு ராஜாவாக இருக்கார். இடைவெளிக்குப் பிறகான படம், இவரைச் சுற்றியும், இவர் கையாளும் மின்னணு கருவிகளைச் சுற்றியே நகர்கிறது. அந்த விஞ்ஞான டெமோக்களைக் கடக்க உதவுவது தமனின் பின்னணி இசையும், சுழலும் தீபக்குமார் பாடியின் ஒளிப்பதிவும், திரைக்கதையின் சுவாரசியமுமே.! நகலுக்கொரு ஜோடி வேண்டும் என்பதற்காக மட்டும் ஐஸ்வர்யா தத்தா படத்தில் உள்ளார்.
எழுதி இயக்கியுள்ள ராம்பிரகாஷ் ராயப்பா கலக்கியுள்ளார். மூன்று இழைகளை அழகாகப் பிணைந்து திரைக்கதையை உருவாக்கியுள்ளார். கதாபாத்திரத் தேர்வுகளும் கச்சிதமாகச் செய்துள்ளார். டேக்ஸி ஓட்டுநராக வரும் எதிர்நீச்சல் சதீஷையும், நகைச்சுவைக்கு மட்டும் பயன்படுத்தாமல் கச்சிதமாக கதையில் உபயோகப்படுத்தியுள்ளார். கதைக்குத் தேவையான சம்பவங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, செல்ஃபோன் இயங்காவிட்டால் அன்றாட வாழ்வுகளில் ஏற்படும் பெரும் விளைவுகளைப் பற்றி காட்சிப்படுத்தாமல் விட்டுவிட்டார். ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என இயக்குநர் கதையின் முடிவை சூசகமாக சதீஷினுடைய காரின் பின்புறத்தில் குறியீடாக எழுதி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.