Shadow

தற்காப்பு விமர்சனம்

Tharkappu vimarsanam

வேட்டையாடும் அதிகாரம் பெற்றவர்களே வேட்டையாடப்படுகிறார்கள். யாரால் ஏன் என்பது தான் படத்தின் கதை.

போலிஸ் செய்யும் என்கவுன்ட்டர்களை அதீத ஹீரோயிஸமாகச் சித்தரிக்கும் படங்களுக்கு இடையில், அதற்கெதிரான வலுவான குரலைப் பதிந்துள்ளது படம். படத்தின் தலைப்பும் காரணப் பெயர்தான்.

மனித உரிமை ஆணையத்தின் உயரதிகாரியாக வரும் சமுத்திரக்கனியின் வரவுக்குப் பின் படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. முதல் பாதி படத்தின் நான்-லீனியர் படத்தொகுப்பு, நாயகன் சக்தியின் குணவார்ப்பைப் பற்றிய குழப்பத்தையும், படத்தின் போக்கு பற்றிய கேள்வியையும் அளிக்கிறது. இரண்டாம் பாதியில் எல்லாம் தெளிகிறது என்றாலும், அதற்கு முதற்பாதி பில்டப்ஸ் அவ்வளவாக உதவவில்லை.

படத்தில் இரண்டு காதல் கதைகள் வருகிறது. ட்ரெயின் பயணத்தில் ஒன்று; நாயகனின் தற்கொலை முயற்சியில் இன்னொன்று. உப்புக் கருவாடு படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்த சதிஷ் கிருஷ்ணனும், வட்சன் சக்கரவர்த்தியும் முறையே அக்காதல் கதைகளில் நடித்துள்ளனர். இரண்டு காதல் கதைகளுமே அதன் அளவில் அதிகம் படத்தில் துருத்திக் கொள்ளாமல், பிரதான கதைக்கு இடைவேளைக்குப் பின் பெரிதும் உதவுகிறது. பதைபதைக்க வைக்கும் படத்தின் இறுதிக் காட்சிகளில், வட்சன் ஆழமாக மனதில் பதிந்து விடுகிறார்.

தான் தேடப்படுவது தெரிந்த சக்தி, சிக்கிக் கொள்ளாமல் இருக்கப் பெரிதாகத் திட்டமிட்டது போல் தெரியவில்லை. சக்திக்கு அவரது கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். என்கவுன்ட்டர் நடந்த இடத்திற்கு அதில் பங்கெடுத்த அதிகாரிகளை அழைத்துச் சென்று, சமுத்திரக்கனி நடத்தும் விசாரனை படத்தின் மிக முக்கியமான காட்சி. சுவாரசியமான காட்சியும் கூட. சமுத்திரக்கனியின் விசாரணையில் சக்தியும், அவரது சக அதிகாரிகளும் சிக்கித் தவிப்பது அட்டகாசமாகமாக உள்ளது.

‘நான் நேர்மையானவன்; நாணயமானவன்; மக்களின் பாதுகாப்புக்காக 17 கொலைகள் புரிந்த அயோக்கியனை என்கவுண்ட்டர் பண்ணேன்’ என்று பெருமை பேசும் காவல் துறை அதிகாரிக்கு, அது பெருமையில்லை கொலை தானெனப் புரிய வைக்கிறார் சமுத்திரக்கனி. அதுவும் மக்களின் நலனுக்காகத்தான் என்கவுன்ட்டர் என்பது சோற்றில் முழுப் பூசனிக்காயை மறைக்கும் மிகப் பெரிய பொய் என்கிறது ‘தற்காப்பு’. யாரிடமிருந்து எவருக்கு தற்காப்பு என்ற அரசியல் தான் படத்தின் மையப்புள்ளி.

தமிழ்ப்படங்கள் என்கவுன்ட்டரை நாயகத்துவமாக வியந்தோதும் வேளையில், அது மனிதாபிமானமற்ற செயலெனப் பதிந்துள்ள இயக்குநர் R.P.ரவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.