நானும் என் மனைவியும் ஒரே அலுவலகத்தில், ஒரே டீமில் பணிபுரிவதால், மற்றவரின் பணி சுமையினை நன்கு அறிவோம். என்னை விட என் மனைவிக்கே அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி அதிக ஆணி.
இந்தக் கவலைகளை மறக்க, இதுவரை நாங்கள் பார்த்திராத ஆனால் பார்க்க வேண்டிய ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து எனது தேடலைத் தொடங்கினேன்.
நாங்கள் ஹைதராபாத்தில் இருப்பதால், இங்கிருந்து செல்லக்கூடிய இடங்களை ஆராய்ந்தேன். மேலும் அது குளிர் காலம் என்பதால் ஹில் ஸ்டேஷனைத் தவிர்க்கவும் முடிவு செய்தேன்.
சில நாட்கள் இணையத்தில் மூழ்கி சில இடங்களைத் தேர்வு செய்தேன்
1. ஹம்பி, கர்நாடகா
2. டண்டேலி, ஹூப்ளி, கர்நாடகா
3. கோவா
4. கோதாவரி ரிவர் ட்ரிப், ராஜமுந்திரி,ஆந்திரா
5. அஜந்தா எல்லோரா, ஔரங்காபாத், மஹாராஷ்டிரா
6. கோகர்ணா (Gokarna), கர்நாடகா
இவை அனைத்தும் நாங்கள் ஓர் இரவு ரயில்/பேருந்து பயணத்தில் சென்றடையக் கூடிய இடங்கள்.
மேலும் மனைவியுடன் கலந்து ஆலோசித்தேன்.
1. ஹம்பி, கர்நாடகா
மனைவி — ஹிஸ்டாரிகல் பிளேஸ் ஹ்ம்ம்.. என்று சொல்லிட்டு ஒரு லுக்கு..
நான்— இல்லமா தவறுதலா இந்த லிஸ்ட்க்கு வந்துடுச்சி போல.. நெக்ஸ்ட்
2. டண்டேலி, ஹூப்ளி, கர்நாடகா
மனைவி — இங்க என்ன இருக்கு ??
நான்— ரிசர்வ் ஃபாரெஸ்ட், டேம், முக்கியமா Kali ரிவர்ல White Water Rafting போலாம் .
மனைவி — இதெல்லாம் நாங்கள் ஹரித்வார்/ரிஷிகேஷ்ல Ganges-இலயே பண்ணிட்டோம். ஃபாரெஸ்டும் நிறைய பார்த்தாச்சி..
நான் — அப்போ நெக்ஸ்ட் என்னென்னு பார்க்க வேண்டியது தான் ..
3. கோவா
மனைவி — போக வேண்டிய இடம் தான்.. லிஸ்ட்ல இருக்கட்டும்
4. கோதாவரி ரிவர் ட்ரிப், ராஜமுந்திரி,ஆந்திரா
மனைவி — நல்ல சாய்ஸ் தான், ஆனா..அம்மா அப்பா எல்லாரயும் கூட்டிட்டுப் போலாமே!
நான் — ஓ போலாமே! நல்ல திங்க்கிங். நெக்ஸ்ட்.
5. அஜந்தா எல்லோரா, ஔரங்காபாத், மஹாராஷ்டிரா
மனைவி — இப்போ கலைய ரசிக்கும் மூட் இல்லை
நான் — குட். நெக்ஸ்ட்.
6. கோகர்ணா பீச், கர்நாடகா
மனைவி — இதென்ன வித்யாசமா ஒரு இடம். கேள்விப்பட்டதே இல்லையே?
நான் — இது நார்த் கர்நாடகால ஒரு பீச் மா. கோவாக்குக் கொஞ்சம் கீழ வரும்.
மனைவி — சரி, லிஸ்ட்ல வையுங்க பார்ப்போம்.
ஆக ரெண்டு இடம். கோவாவும் கோகர்ணாவும். இரண்டு இடங்களிலும் கடல் தான். ஆனால் அதைத் தாண்டி நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பதை இணையத்தின் உதவியுடன் அறிந்து கொண்டேன்.
நாங்கள் விரும்பும் அமைதியான/தனிமையான ஒரு சூழல் கோகர்ணாவில் கிடைக்கும் என்று என் மனதிற்கு பட்டது. நான் தேடிய இடம், போகுமிடம் இது தான் என்று முடிவு செய்தேன்.
அடுத்து கோகர்ணாவில் தங்குவதற்கான இடங்களை trip advisor மூலம் தேடத் துவங்கினேன்.
கிட்டத்தட்ட 10-15 நாட்கள் அலுவலகப் பணியின் இடையே இந்தத் தேடலில் செலவு செய்தேன். இறுதியாக கோகர்ணாவின் அருகே இருக்கும் Kumta என்னும் இடத்தில் Nirvana Nature Resort-ஐத் தேர்வு செய்தேன். அந்த ரிசார்ட்டைத் தொடர்பு கொண்டு இரண்டு நாட்கள் தங்குவதற்கு ரிசர்வ் செய்து வைத்தேன். அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்கு முன்பே முன் பதிவு செய்து வைத்தேன். மேலும் ஹைதராபாத்திலிருந்து, கோகர்ணா செல்ல நேரடி ரயில் வசதி இல்லாததால் பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன்.
ஒருவருக்கு ஒரு வழி செலவு மட்டும் 1300 ரூபாய். ஆக இருவருக்கு இருவழிக்கு 5200 ரூபாய்.
இப்படிப் பயணத்திற்குத் தேவையானவற்றை சிறிது சிறிதாக முன்னதாகவே செய்யத் தொடங்கினேன். நாட்கள் கடந்தன, நாங்கள் எதிர்பார்த்த நாளும் வந்தது.
Hyderabad – Mangalore செல்லும் பேருந்தில் பயணம் செய்து, கோகர்ணாவைத் தாண்டி நேராக முருதீசுவர் எனும் இடத்திற்கு காலை 7 மணிக்குச் சென்றோம். கோகர்ணாவில் இருந்து 78 கி.மீ. தெற்கில் உள்ளது இந்த ஸ்தலம்.
அரபிக் கடலோரம் அமைந்துள்ள இந்த முருதீசுவர் கோவில் மூன்று புறமும் கடல் நீரால் சூழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் கோபுரம் 20 மாடிகளை உடையது. மேலும் கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல லிஃப்ப்ட் வசதி உள்ளது (நபருக்கு 10 ரூபாய்). அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம். கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த சிலை, உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலையாகும்.
கோவிலின் ஒரு புறம் இருக்கும் கடற்கரை மீனவர்களாலும் மற்றொரு கரை சுற்றுலாப் பயணிகளாலும் நிரம்பி இருந்தது. மோட்டார் போட், ஸ்பீட் போட் வசதிகளும் அங்கே உண்டு.
தரிசனத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து மீண்டும் பேருந்து மூலம் கும்தாக்குப் புறப்பட்டோம். கும்தாவிலிருந்து ஆட்டோ மூலம் Nirvana Nature, Kagal சென்றடைந்த போது மதியம் 1.30 மணி.
Nirvana Nature, Kagal – நான் முன்பே கூறியிருந்தது போல், 10-15 நாட்கள் மெனக்கட்டு இந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன். அதற்கான முக்கிய காரணம் அந்த இடத்தின் அமைதியான/இயற்கையான சூழல்.
மதிய உணவை உண்டு ஒரு குட்டி தூக்கத்திற்கு பின்பு மாலை 5 மணிக்கு கடற்கரைக்குச் சென்றோம்.
அருகே இருக்கும் ஒரு சில மீனவர்களைத் தவிர வேறு யாரும் அங்கே இல்லை. மக்கள் கூட்டமில்லை; கடைகள் இல்லை; குப்பைகள் இல்லை. வெறும் அலைகளின் சப்தம் மட்டுமே. அந்தப் பெரிய கடல், அது எங்களுக்கே சொந்தம் என்பது போலிருந்தது. இருட்டும் வரை அங்கேயே இருந்தோம்.
அன்றிரவு உணவின் போது கோயம்பத்தூர்க்காரர் ஒருவரைக் கண்டோம். அவருடன் பேசுகையில் Nirvana beach – Gokarna செல்ல படகு வசதி உள்ளதாகவும், ஆனால் நபருக்கு 1000 ரூபாய் கேட்பதாகவும் கூறினார். எனக்கோ அங்கே படகு சவாரி இருப்பது தெரியும் ஆனால் இவ்ளோ ஆகும் என்பது தெரியாதிருந்தது.
அடுத்த நாள் காலை கோகர்ணா செல்லத் தயாரானோம்.
கோகர்ணா என்றால் பசுவின் காது என்று அர்த்தம். தமிழில், திருகோகர்ணம் ஆகும். பசுவின் காதிலிருந்து சிவன் அங்கே தோன்றியதால் இந்த பெயர் என்கிறார்கள். அங்கே இருக்கும் மகாபலேஷ்வர் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. சிவலிங்கத்தின் அளவு, ஒரு பாக்கின் அளவே மிகச் சிறியதாக இருக்கும். தொட்டுப் பார்த்தே, லிங்கத்தை உணர முடியும். பசுவின் காது போல் மென்மையாக இருப்பதை உணரலாம். லிங்கம் பார்ப்பதற்கு பசுவின் காது போலவே தோற்றமளிக்கும். இமயத்தில் சிவனிடமே பெறப்பட்ட இந்த ஆத்மலிங்கத்தை, இராவணனை ஏமாற்றி கோகர்ணத்தில் பிரதிஷ்டை செய்தவர் பிள்ளையார்.
ஒரு முக்கிய புனித ஸ்தலமாக இருந்த கோகர்ணா, நாட்கள் செல்லச் செல்ல அழகிய சுற்றுலாத் தளமாக உருவெடுத்தது.
கோகர்ணாவில் ஒன்றல்ல இரண்டல்ல, 8 பீச்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வித்தியாசமானவை
1. Kudle Beach
2. Om Beach
3. Half Moon Beach
4. Small Hell Beach
5. God’s own beach
6. Heaven Beach
7. Mystery Cave Beach
8. Gokarna Main Beach
நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே இருக்கும் ஒரு சிறிய மலையைக் கடந்தால் Heaven Beach-ஐ அடையலாம். ஆகையால் நாங்கள் இருவரும் உடன் தங்கியிருந்த தமிழ் நண்பர்கள் இருவருடன் trekking செல்ல ஆயுத்தமானோம்.
மலையின் உச்சியை அடைந்த போது, அங்கே பழைய கோட்டை ஒன்று இருந்ததற்கான அடையாளமாக மதில் சுவரை மட்டும் கண்டோம். உற்சாகமாக புறப்பட்ட நாங்கள், அந்தச் சுவரைத் தாண்டிய பின்னர் சிறிது பயந்தோம். வறண்ட புதர்களும், பாம்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுமே அதன் காரணம்..
ஒரு மாதிரி தயக்கத்துடனேயே மலையின் மற்றொரு புறத்திற்கு சென்றோம். ஆனால் அங்கே சென்ற பிறகு தான் கீழே இறங்க வழியில்லை என்பதை அறிந்தோம்.
பின்னர் GPS உதவியுடன் அங்கிருந்து Heaven Beach செல்லும் ஒரு ஒற்றையடி பாதையைத் தொடர்ந்தோம். இறுதியாக Heaven Beach ஐ அடைந்தபோது மணி 11.30. பேருக்கு ஏற்றார் போல் சொர்க்கம் தான் அது.
அங்கே சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறிய பின்னர் மீண்டும் Ferry Point ஐ நோக்கி நடக்கத் தொடங்கினோம். கிட்ட தட்ட 1.30 மணிக்கு Ferry point ஐ அடைந்த போது பசியில் நாக்கு தள்ளிவிட்டது..
அங்கே ஒரு boat பிடித்து நபர் ஒருவருக்கு 600 என்று பேசி, அங்கிருந்து கோகர்ணாவின் மற்ற பீச்களுக்குச் சென்றோம்.
முதலில் Half Moon Beach சென்றோம், அங்கே மதிய உணவினை உண்டோம். பின்னர் kudle beach மற்றும் Om beach சென்றோம். அதனைத் தொடர்ந்து Mystery Cave Beach சென்றுவிட்டு மீண்டும் Ferry Point வந்தடைந்தோம்..
பொதுவாக பாண்டிச்சேரி மற்றும் சென்னையின் கடற்கரை மட்டுமே அதிகம் பார்த்திருந்த எங்களுக்கு இந்த அழகான சுத்தமான கடல்கள் ஆச்சர்யத்தை உண்டாக்கின..
Half Moon Beach : இங்கே 99% வெளிநாட்டவர்களே இருந்தனர். சிறிய கடற்கரையே, ஆனால் அழகாக இருந்தது
Om Beach : ॐ வடிவத்தில் இருப்பதால் இந்த பெயர். Aerial View புகைப்படத்தைக் கீழே காணலாம்..
Kudle Beach: Om Beach போன்று இதுவும் பெரிய கடற்கரையே.. இவ்விரு இடத்திலும் வெளிநாட்டவர்கள் மற்றுமின்றி நம்மவர்களையும் காணலாம்..
Mystery Cave Beach: கரையின் ஓரத்திலிருந்து மலைக்கு மேலே இருந்த அந்தக் கோட்டைக்கு ஒரு குகை பாதை இருப்பதாகக் கூறினர்..
இவை அனைத்தையும் முடித்துக்கொண்டு மீண்டும் அறைக்குத் திரும்பிய பொழுது இரவு 7.30 மணி. அடுத்த நாள், எங்கேயும் செல்லாமல் nirvana beach லேயே இருந்தோம்..
அன்று இரவு Mangalore – Hyderabad பேருந்தில் கும்தாவில் ஏறியாகிவிட்டது.
மொத்தத்தில் அமைதியான resort, ஆளில்லா Nirvana Beach, எதிர்பாராத trekking, கடலில் அலைகளுக்கு நடுவே திரில்லிங் boat ride, வெள்ளை மணல் கொண்ட குப்பைகளில்லா அழகிய கடற்கரைகள் என அனைத்தும் எங்கள் எதிர்பார்ப்பை மிஞ்சியே இருந்தன.
– இரகுராமன்