Shadow

திருமணம் எனும் நிக்காஹ் விமர்சனம்

திருமணம் எனும் நிக்காஹ் திரைவிமர்சனம்

இயக்குநர் அனீஸ் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாமென யோசிக்கும் பொழுது, வீட்டிலிருந்த ‘நிக்காஹ் எனும் திருமணம்’ என்ற பத்திரிக்கையைப் பார்த்துள்ளார். அதை உல்டா செய்து, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என தலைப்பு வைத்துள்ளார்.

அபு பக்கர் என்ற பெயரில் விஜய ராகவாச்சாரியும், ஆயிஷா என்ற பெயரில் விஷ்ணு பிரியாவும் ட்ரெயினில் பயணிக்கின்றனர். ஒருவரை ஒருவர் முஸ்லிம் என நினைத்துக் கொண்டு, தங்களை முஸ்லிமாகக் காட்டிக் கொண்டே காதலிக்கத் தொடங்குகின்றனர். இருவருமே ஐயங்கார் வீட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்ற உண்மை தெரியவந்ததும் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

விஜய ராகவாச்சாரியாக ஜெய் நடித்துள்ளார். இப்படத்திலும், உளறலாகக் காதலை வெளிப்படுத்தும் வழக்கமான பாத்திரம்தான். அபு பக்கராக தன்னை நாயகியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதால், இஸ்லாம் மதத்தைப் பற்றியும் அம்மதத்தின் சடங்குகள் பற்றியும் தெரிந்து கொள்ள விருப்பம் காட்டுகின்றார். அதனால் யுனானி மருத்துவர் ஒருவர் வீட்டுக்குச் சென்று, தான் 50% முஸ்லீம் என ஒரு கதையைச் சொல்லி இஸ்லாம் மார்க்கத்தினைக் கற்றுத் தரும்படி கேட்கிறார். ஜாலியாகத் தொடங்கும் படம், ஜெய்யின் சீரியசான குழப்பத்தால் நம்மையும் கடைசியில் அலைகழிக்கிறது.

இது நஸ்ரியா நசீம்க்கு தமிழில் முதற்படம். படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால், நேரம் முந்திக் கொண்டது. ஆடப் பாட மட்டும் என்றில்லாமல், படம் நெடுகே வரும் முக்கியமான பாத்திரத்தில் வருகிறார். தன்னை ஆயிஷாவாக நாயகனிடம் காட்டிக் கொள்ள, நாயகனைவிட அதிகப் பிரயத்தனப்படுகிறார். “கண்ணுக்குள் பொத்திவைப்பேன்” பாடலில் அபிநயம் பிடித்து நஸ்ரியா நம்மை ரசிக்க வைத்தால், இன்னொரு நாயகியான ஹீபா பட்டேல் “சில்லென்ற சில்லென்ற காற்றிலே” பாடலை அழகாக்குகிறார்.

படத்தின் பலம் ஜிப்ரானின் இசை. ‘க்வாஜா ஜி’ என இஸ்லாமிய வீட்டில் பாடப்படும் பாடலே அதற்குச் சான்று. அதே போல், ‘கண்ணுக்குள் பொத்திவைப்பேன்’ ஒட்டுமொத்த பாடலும் பார்க்கவும் கேட்கவும் ரம்மியமாக உள்ளது. ஜிப்ரான் இசையிலும், லோகநாதனின் ஒளிப்பதிவிலும், கலை இயக்குநர் Crawford- தர்மேந்திராவின் கைவண்ணத்திலும் அப்பாடல் மனதுக்கு நெருக்கமாய் உள்ளது. படத்தின் டைட்டில் டிசைன் முதற்கொண்டு நாயகனின் அறையின் சுவரிலுள்ள புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணனின் டிசைன் வரை படத்தில் அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துள்ளனர். உடை வடிவமைப்பாளர் M.P.வனிதா ஸ்ரீனிவாசன், கணேஷ் ஆகியோரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

யுனானி மருத்துவர் செளகத் அலியாக ஜமால் நடித்துள்ளார். கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறார். இவருடைய பாத்திரத்தின் மூலமாக, இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகளைப் பற்றி மிக எளிய அறிமுகத்தை முன்வைக்கிறார் இயக்குநர் அனீஸ். ஆனால் எதுவும் மிதமிஞ்சியோ, ரம்பமாகவோ போய்விடாமல் பட்டும்படாமல் கையாண்டுள்ளார். முஸ்லீம்கள் அனைவருமே தீவிரவாதிகள் இல்லை, இஸ்லாத்திலும் வைஷ்ணவத்திலும் உள்ள ஒற்றுமை என அங்கொன்றும் இங்கொன்றுமாக சீரியசான வசனங்கள் வந்து மறைகிறது. நாயகனுக்கும் நாயகிக்கும் உண்மை தெரிந்த நொடியே படம் படுத்துவிடுகிறது. அதனால் படம் நிறைவைத் தரவில்லை. படத்தில் சண்டை இருந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்தை, இயக்குநர் ஏன் உருவாக்கிக் கொண்டுள்ளார் எனத் தெரியவில்லை. சொதப்பலாக படம் முடிவதைத் தவிர்த்து, அனீசின் இந்த நிக்காஹ் கலகலப்பாகவே உள்ளது.