
‘திருமணம் எனும் நிக்காஹ்’ நகைச்சுவை கலந்த காதல் படம். இந்து மத மற்றும் இஸ்லாம் மத திருமணச் சடங்குகளும் கலாச்சாரங்களும் படத்தில் அதன் அழகியலோடு பதியப்பட்டுள்ளதாம்.
“படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சப்ப.. ‘நிக்காஹ் எனும் திருமணம்’ என்ற வீட்டிலிருந்த இன்விடேஷனில் பார்த்தேன். கொஞ்சம் உல்டா பண்ணி ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என மாத்திட்டேன். இந்தப் படத்தில் ஒரு அரசியல் வச்சிருக்கோம். அதாவது சகோதரத்துவத்துடன் இருவரும் இருக்கலாம் என்பதை.. ரொம்ப சிக்கலாக புனித நூல் கொண்டுலாம் சொல்லாமல் திருமணத்தில் வைக்கப்படும் உணவை வச்சியே சொல்லியிருக்கோம் ” என்றார் இயக்குநர் அனிஸ்.
“இரண்டு கலாச்சாரங்களை இசையால் பிரதிபலிக்க ரீ-சர்ச் பண்ணி இந்தப் படத்திற்கு மியூசிக் பண்ணியிருக்கேன். அதனால இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான். மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான லோகநாதனைப் பரிந்துரைத்ததும் ஜிப்ரான் தான்.
“இந்தப் படம் தமிழில் நான் நடிக்க கையெழுத்திட்ட முதற்படம். அப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். நடிப்பதில் பெரிதாக ஆர்வம் எதுவுமில்லை. என் குடும்பத்தினருடன் கதை கேட்டேன். படத்தின் கதை எனக்குக் கேட்கும் பொழுதே பிடித்திருந்தது. கதை தான் இந்தப் படத்தில் நான் நடிக்க காரணம். தமிழ் இண்டஸ்ட்ரி பற்றியும், தமிழ் மொழி பேசவும் இங்க தான் கத்துக்கிட்டேன்” என்றார் நஸ்ரியா.
படத்தின் தாமதத்திற்கு என்ன காரணமென என்று கேட்ட பொழுது, “மலையில் வெடி வச்சு நாங்க பிளக்கலை. செதுக்கியிருக்கோம். முகம் ஐயங்கார் பொண்ணாகவும் இருக்கணும்; முஸ்லிம் பொண்ணாகவும் இருக்கணும் எனத் தேடினோம். நண்பரொருவர் மூலம் “யுவ்” ஆல்பம் பார்த்தேன். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் சாரும் இந்த முகம் சரியாக இருக்கும் என்றார். படத்தில் ஒரு மாஸ் ப்ரேயர் காட்சிகள் வரும். சுமார் 1 லட்சம் பேர் கடற்கரையில் தொழுவாங்க. அது கேலிகட்டில் ரம்ஜான் அப்போ காத்திருந்து எடுத்தோம். அதே போல் சென்னை ரம்ஜானும் எடுத்தோம். ஆவனி அவிட்டத்தில் பூனூல் மாத்தும் சடங்கை மயிலாப்பூர், நங்கநல்லூர் என பல இடங்களில் எடுத்தோம். இப்படி ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்துள்ளோம்” என்றார் அனிஸ்.
“படத்தை முஸ்லிம் அமைப்புகளுக்குப் போட்டுக் காட்டியாச்சா? தடை செய்யக் கோரி பிரச்சனை செய்ய மாட்டாங்கன்னு நம்புறீங்களா?” என்ற கேள்விக்கு சிரித்த அனிஸ், “மேடையில் அமர்ந்திருக்கும் நால்வரில் மூவர் (லோகநாதன், நஸ்ரியா, அனிஸ், ஜிப்ரான்) முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவங்க. மேலும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் படத்தில் எதுவுமில்லை. இது ஜாலியான படம்” என்றார் அனிஸ்.
அபுபக்கர் என நினைத்து ராகவனை நாயகியும், ஆயிஷா என நினைத்து ஐயங்கார் பெண்ணை நாயகனும் காதலிக்கின்றனர். பின் என்னானது என்பது தான் கதைச்சுருக்கம். படத்தை அடுத்த வருட காதலர் தினத்தில் வெளியிடத் திட்டமிட்டிருப்பது கூடுதல் செய்தி.