‘தி ஆங்க்ரி பேர்ட்ஸ்’ என்ற வீடியோ கேமை, சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் திரைப்படமாகத் தயாரித்துள்ளது.
பறக்க இயலாத பறவைகளுக்கு, பச்சை நிறப் பன்றிகள் மேல் அப்படியென்ன கோபம்? ஏன் வெஞ்சினம் கொண்டு பன்றிகளைத் தாக்குகிறார்கள் என்பதே படத்தின் கதை.
ரெட் (Red – Hot head) எனும் சிவப்பு நிறப் பறவைக்கு பெரிய புருவங்கள்; நண்பர்களும் கம்மி. ஊருக்கு ஒதுக்குபுறமாக வீடு கட்டி வாழ்கிறது. கோபம் அதிகமாக வருகிறதென, கோபத்தைக் குறைக்கும் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கே ரெட்-க்கு இரண்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள். ஒன்று மஞ்சள் நிற சக் (Chuck – Speed Demon); மற்றொன்று பாம் (Bomb – Short Fuse). சக்-கிடம் அபிரிதமான வேகம் இயல்பிலேயே இருக்கும். எள் என்றால் எண்ணெயாய் இருத்தல் என்பது என்னவென்று அறிய நீங்கள் கண்டிப்பாக இப்படத்தைப் பார்க்கணும். பாம்-க்கு கோபம் வந்தால் அவ்விடத்தைத் தீக்கனல்களால் தெறிக்க விட்டுவிடும்.
அமைதியையும் நட்பையும் நாடி பறவைகள் தீவுக்கு, பன்றிகள் கப்பலில் வந்து இறங்குகின்றன. ரெட்-டின் எச்சரிக்கையை மீறி, பறவைகள் பன்றிகளோடு கொஞ்சிக் குலாவுகின்றன. பன்றிக் கூட்டத் தலைவனின் வழிகாட்டுதலின் பேரில், பறவைகளை ஏமாற்றி முட்டைகளைக் கவர்ந்து சென்று விடுகின்றன பன்றிகள். ரெட்-டை வெறுத்த பறவைகள், அதனிடம் சரண் புகுந்து உதவி கோருகின்றன.
“யாருக்கெல்லாம் கோபம் வருதோ அவங்க என் கூட வாங்க. முட்டைகளை மீட்போம்” என்கிறது ரெட்.
திரையரங்குகளில், குழந்தைகள் ஆராவாரத்துடன் படத்தை ரசிக்கிறார்கள். ‘மைட்டி ஈகிள்’-ஐத் தேடிப் போகும்பொழுது, சக்-கும் பாமும் ‘ஞான நதி’யில் குளிக்கின்றனர். அந்நதியில் அவர்கள் போடும் ஆட்டத்திற்குக் குழந்தைகள் கை தட்டுகிறார்கள். அந்நதியின் மூல ஊற்று எது எனத் தெரிந்ததும், சக் தன் நாக்கைக் கல்லால் அருவருப்புடன் தேய்க்கும் பொழுது திரையரங்கம் சிரிப்பொலியால் அதிர்கிறது. மிக எளிமையான கதை என்பதால் பெரியவர்களை விடச் சிறியவர்களையே படம் அதிகமாகக் கவர்ந்துள்ளது.
ஹெய்டோர் பெரைராவின் ( Heitor Pereira) பின்னணி இசையில், டெரென்ஸ் பாத்திரத்தைக் கூடுதல் பிரம்மாண்டத்துடன் உணர முடிகிறது. அறிமுக இயக்குநர்களான க்ளே கெய்ட்டிஸும், ஃபெர்கல் ரெய்லியும் ‘ஆங்கிர் பேர்ட்ஸ்’ வீடியோ கேம் விளையாடியவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளார் என்றே சொல்லவேண்டும். ஜான் விட்டியின் திரைக்கதை அதிகம் மெனக்கெடாமல் பறவைகளுக்கும், பச்சை நிறப் பன்றிகளுக்கும் பரம்பரைப் பகையை மூட்டி விட்டுவிடுகிறது. ஆம், வழக்கம் போல் இரண்டாம் பாகத்திற்கான சாத்தியத்தையும் கோடிட்டுக் காட்டுவதோடு படம் முடிகிறது.