Shadow

தி. ஜானகிராமன்

மாயலோகத்தில்..

T.Janakiramanநவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் தி. ஜானகிராமனின் இடம் மிகவும் முக்கியமானது. அபூர்வமான சொற்கட்டுகளும், அலாதியான வடிவமும், தஞ்சைத்தமிழும் அதன் அழகுகளும் இவரின் நாவல்கள், சிறுகதைகளில் பின்னிப் பிணைந்து காணப்படும்.

தஞ்சைப் பிரதேசத்தைச் சேர்ந்த மொழியையும், வழக்குகளையும் உள்ளடக்கியதுதான் இவரது கதைகள் என்றாலும், அவைகள் பிரதேச எல்லைகளையும் தாண்டி தீவிர இலக்கியவாசகன், ஜனரஞ்சக வாசகர்கள் என அனைவரது மனதையும் கவ்வி இழுத்தது என்பது மிகையல்ல.

ஜானகிராமன் தனது இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார் எனத் தோன்றுகிறது. தனது பதினைந்தாவது வயதிலேயே கதைகள் எழுதியிருக்கிறார்.

தி.ஜானகிராமன் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த தேவங்குடி என்னும் ஊரில் 1921இல் பிறந்தார். ஆரம்ப காலங்களில் சங்கீதப் பயிற்சியும் மேற்கொண்டிருக்கிறார். இவருடைய பல கதைகளில் சங்கீதம் பற்றிய பல அருமையான தகவல்கள் விரவிக் கிடப்பதைக் காண, சங்கீதத்தில் இவருக்கு இருந்த ஞானமும், அறிவும் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும். இலக்கியத்தில் எம்.ஏ.படித்திருக்கும் இவர் ஆரம்பத்தில் சிலகாலம் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து பின் அகில இந்திய வானொலி நிலையத்தில் சென்னையில் வேலை பார்த்தார். பிறகு புதுடெல்லி வானொலி நிலையத்திலும் பணியாற்றி சிறந்த சேவை புரிந்து 1978 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

ஆரம்ப காலங்களில் ‘கலைமகள்’ பத்திரிகையில் எழுதி ஒரு நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். ‘மணிக்கொடி’ இதழிலும் இவரது சிறு கதைகள் வெளி வந்திருக்கின்றன. இவரது முதல் சிறு கதைத்தொகுப்பு ‘கொட்டு மேளம்’ 1954இல் வெளி வந்து மிகவும் பிரபலமடைந்தது. இரண்டாவது சிறுகதைத் தொகுதி ‘சிவப்புரிக்ஷா’. 1956இல் வெளிவந்த இச்சிறுகதைத் தொகுப்பும் ஜானகிராமனுக்கு மிகவும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. பல எழுத்தாளர்கள் இவரது விசிறியாகத் திகழ்ந்தார்கள்.

இவரது மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றான ‘மோகமுள்’ 1958இலிருந்து ‘சுதேசமித்திரன்’ வாரப்பத்திரிகையில தொடராக வெளிவந்தது. தமிழின் மிகச் சிறந்த பத்து நாவல்களைத் தேர்ந்தெடுத்தால் அத்தேர்வில் நிச்சயமாக ‘மோகமுள்’ நாவலுக்கு இடமுண்டு.

தொடர்ந்து இவரது சிறு கதைத் தொகுப்புகளாக அக்பர் சாஸ்திரி (1963), கமலம் (1963), சிவஞானம் (1964), யாதும் ஊரே (1967), பிடிகருணை (1974) சக்தி வைத்தியம் (1978), மனிதாபிமானம் (1980) ஆகிய சிறந்த சிறு கதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன.

இவரது ‘சக்தி வைத்தியம்’ தொகுப்புக்காக இவருக்கு 1979இல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

ஜானகிராமன் எழுதிய நாவல்கள் மொத்தம் எண்ணிக்கையில் ஒன்பது. அவைகள் முறையே ‘அமிர்தம்’ (1944), மலர் மஞ்சம் (1961), மோகமுள் (1964), அன்பே ஆரமுதே (1965), அம்மா வந்தாள் (1967), உயிர்த்தேன் (1967), செம்பருத்தி (1968), மரப்பசு (1975), நளபாகம் (1983) ஆகியவை புத்தக வடிவில் உருப்பெற்றன.

‘அம்மா வந்தாள்’ நாவல் தமிழ் வாசகர்களிடையேயும், இலக்கிய விமர்சகர்களிடையேயும் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானாலும், உள்ளபடியே ‘மோகமுள்’ போலவே இதுவும் தமிழின் மிக உன்னதமான படைப்புக்களில் ஒன்று என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. இந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ ஆங்கில இதழில் தொடராக வெளிவந்திருக்கிறது. எம். கிருஷ்ணன் என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். இத்தொடர் பின்னாளில் ‘அப்பூஸ் மதர்’ என்கிற பெயரில் புத்தக வடிவிலும் வடிவிலும் வெளிவந்தது. ‘உயிர்த்தேன்’ மற்றுமொரு மிகச்சிறந்த புதினம்.

இவரது சில சிறு கதைகளும், நாவல்களும் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாவல், சிறுகதைகள் தவிர சில நல்ல நாடகங்களும், பயண நூல்களும் இவற்றியிருக்கிறார். பி.எஸ்.ராமையாவின் நட்பில் இவர் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவிற்காகச் சில நாடகங்கள் எழுதிக் கொடுத்து அவைகளும் நாடகமாக நடிக்கப்பட்டு, மிகச் சிறந்த பெயரைப் பெற்றன. அந்த வகையில் முக்கிய நாடகங்களாக நாலு வேலி நிலம், டாக்டருக்கு மருந்து, வடிவேலு வாத்தியார் போன்ற நாடகங்களைக் குறிப்பிட முடியும்.

இவரது பயண நூல்கள் வரிகையில் உதய சூரியன் (1965), நடந்தாய் வாழி காவேரி (1971) கலைக்கடலும் கருங்கடலும் (1974) போன்றவை மிகவும் முக்கியமானவை. 1971இல் வெளிவந்த ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண நூலை ‘சிட்டி’ அவர்களுடன் சேர்ந்து கூட்டாக எழுதியுள்ளார். பயண நூல்களில் மிகவும் முக்கியமான இந்நூலை சமீபத்தில் புத்தம் புதிய பொலிவுடன் ‘காலச்சுவடு’ பதிப்பகம் வெளிக் கொண்டு வந்திருப்பது இப்போதைய வாசகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு நூல் வடிவில் வெளி வந்துள்ளது.

இவைகளெல்லாம் போதாதென்று, சில அருமையான மொழி பெயர்ப்புகளும் செய்து, நல்ல பிற மொழி நூல்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார். அமெரிக்க நாவலான ஹெர்மன் மெல்வில் எழுதி மிகவும் பிரபலமான ‘மோபிடிக்’ என்ற நாவல், நோபல் பரிசு பெற்ற இத்தாலிய நாவலாசிரியர் டெலடாவின் ‘அன்னை’, ஜார்ஜ் காமரன் எழுதிய ‘பூமி என்னும் கிரகம்’ போன்றவை ஜானகிராமரின் மொழி பெயர்ப்புத்திறனுக்குச் சான்றாக விளங்குகிறது.

1978 இல் பணி ஓய்வு பெற்ற பின் சில காலம் இலக்கிய இதழ் ‘கணையாழி’யின் ஆசிரியராகவும் இலக்கிய சேவை புரிந்திருக்கிறார்.

இவரது ‘நாலுவேலி நிலம்’ திரைப்படமாத் தயாரிக்கப்பட்டு வெளி வந்தது. படம் வசூலில் வெற்றி பெறவில்லை.

‘மோகமுள்’ திரைப்படமும் வசூலில் பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. ஆனால் சினிமா விமர்சகர்களின் பாராட்டு தலை இப்படம் ஏராளமாகப் பெற்றது.

அறுபத்தியொரு வயதை ஒரு பெரிய வயது எனச் சொல்ல முடியாது. ஆனால் இவ்வயதில் தான் 1982இல் ஜானகிராமன் காலமானார். இந்த இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு நிச்சயமாக ஒரு ஈடு செய்ய முடியாத இழப்புத்தான்.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்