Search

தி மேன் வித் தி அயர்ன் ஃபிஸ்ட்ஸ்


2012 இல் வெளிவந்த இந்த அமெரிக்கப் படம், “இரும்புக்கை மாயாவி” என்ற பெயரில் டப் செய்யப்பட்டு இரு வாரங்களுக்கு முன் தமிழகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பிரபல முத்து காமிக்ஸ் நாயகனான இரும்புக்கை மாயாவியின் பெயரை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தி கொண்டுள்ளனர். படத்தில் எந்த மாயாவியும் இல்லை.

ஜங்கள் வில்லேஜ் என்ற கிராமம் பல போராளி குழுக்களின் தலைமையகம். அவ்வூரின் வழியாக கொண்டு செல்லப்படும் தங்கத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படி, லயன் குழுவின் தலைவர் கோல்ட் லயனிடம் ஒப்படைக்கிறார் அப்பிராந்தியந்தின் கவர்னர். ஆனால் கோல்ட் லயனை வஞ்சகமாகக் கொன்று லயன் குழுவின் தலைவராகிறார் சில்வர் லயன். சில்வர் லயனின் நோக்கம் தங்கத்தை அபகரிப்பது. அவரது நோக்கம் நிறைவேறியதா என்பதற்கு பதிலுடன் நிறைவுறுகிறது படம்.

படத்தின் பலம் அதன் கதாபாத்திரங்களும் அவர்களின் ஆயுதங்களும் தான். கோல்ட் லயனின் மகனான யென் யீயின் உடை பிளேட்களால் ஆனது. பிராஸ் பாடியாக வரும் வ்ரெஸ்லிங் புகழ் பட்டிஸ்டாவின் கதாபாத்திரம் நல்ல கற்பனை. அவரது தோலில் ஏதாவது உலோகங்கள் பட்டால், அவர் உடல் பித்தளையாக மாறி விடும். சாகா வரம்பெற்ற அரக்கன் போல தனது மாபெரும் உடலுடன் கலக்குகிறார்.

படத்தின் இன்னொரு சுவாரசியமான கதாபாத்திரம் ஜாக் நைஃப்பாக வரும் க்ளாடியேட்டர் புகழ் ரஸல் க்ரோவ். தனது கம்பீரமான ஆளுமையால் திரையை ஆளுகிறார். அவரது ஆயுதம் இரட்டை பிளேட் கொண்ட வித்தியாசமான சுழல் கத்தி. ஒரு காட்சியில் எதிராளியை சமாளிக்க இயலாமல் சுட்டு விட்டு, “நான் எப்பவுமே வாள் சண்டைகளுக்கு துப்பாக்கி எடுத்து செல்வது வழக்கம்” என அசால்ட்டாக சொல்வார். பெண்களுடனான சல்லாபக் காட்சிகளில் ரசித்து நடித்து ரசிக்க வைக்கிறார். வில்லன் சில்வர் லயனாக நடித்திருக்கும் பைரான் மான் படத்திற்கு கச்சிதமான தேர்வு. 

படத்தின் நாயகன் படத்தின் இயக்குநரான ராபர்ட் ஃபிட்ஸ்கெரால்ட் டிக்ஸ் (RZA). அவரது முதல்படம் இது. க்வென்டின் டாரன்டினோவின் கில் பில் படத்திற்கு இசையமைத்தவர் இவர். அந்தப் பழக்கத்தால் தான் ‘க்வென்டின் டாரன்டினோ வழங்கும்’ என படத்தில் தனது பெயரைப் போட சம்மதித்துள்ளார் டாரன்டினோ. ராபர்ட் படத்தில் ஆயுதங்கள் செய்யும் கொல்லராக வருகிறார். படத்தின் கதைச் சொல்லி இவர் தான். அவர் எதற்காக சம்பாதிக்கிறார், எங்கிருந்து வந்தார் என்பதற்கும் கதை சொல்கிறார். பட்டிஸ்டா இவர் கைகள் இரண்டையும் வெட்டி விடுவதால், ரஸல் க்ரோவின் உதவியோடு தனக்கு இரும்புக் கரங்களை செய்து கொள்கிறார். இந்தப் படத்தின் கதை வடிவம் பெற 18 மாதங்கள் ஆனதாம். படம் முழுவதும் இரத்தம் தெறிக்கிறது. க்ளைமேக்ஸ் சண்டையினை விட படத்தின் இடையில் வரும் சண்டைக் காட்சிகள் நன்றாக உள்ளன. முக்கியமாக தங்கத்தினை எடுத்து வரும் ஜெமினி தம்பதியரின் சண்டைக் காட்சிகள் பிரமாதமாக உள்ளன. எனினும் ராபர்ட்டின் தூக்கம் மிகுந்த கண்கள் போல விறுவிறுப்பற்ற திரைக்கதையால் ஒரு சாதாரண மார்ஷியல் ஆர்ட் படம் தரும் தாக்கத்தினை கூட தரவில்லை.