
கண்ணே, மணியே யென்றான்
உன்னையல்ல என்னை
உனக்காக தூதுபோக
அரசமரப்பூக்கள் தலைகீழாய்
தவமிருக்குமென்பான்
அர்த்த ராத்திரியில்
பசிக்கிறதென்பான்
மொட்டை மாடியில்
நிலா வசிக்கிறதுயென்பான்
புரியாத கவிதைகளையெல்லாம்
புரிந்த மாதிரிச் சிரிக்கிறான்
தெரியாத தெருவுக்கெல்லாம்
சென்றுத் தவிக்கிறான்
அன்றொருநாள் நீ
மறந்துவிட்டுப் போன
கைக்குட்டையுடன்
மாதக்கணக்கில்
வாழ்ந்துவருகிறான்
திருமணத்திற்குப் போனால்
செருப்பைக் கழட்டிவிடாதே!
அதைக்கூட அபகரித்துவிடுவான்
நீ கிறுக்கிப்போட்ட காகிதத்தை
கிறுக்கனாய் தேடுகிறான்
கடைசியில் அதுதான்
கவிதையென்று அடம்பிடிக்கிறான்
முழுமதி உனக்காகப் பேசியதாம்
நீரோடை உனக்காக சிலிர்த்ததாம்
அம்மாவின் சமையலில்
குறைகள் கண்டுபிடிக்கிறான்
அதை நீ பரிமாறினால்
காதல் கத்திரிக்காய்கள்
கண்டுபிடிப்பான்
உன் வழியில் அவன் செல்ல
என்னைக் காவல் வைக்கிறான்
என் வழியே நீ செல்வதால்
என்னைப் பள்ளியில் இறக்கிவிட்டு
ஏவல் செய்கிறான்
என் அண்ணன் கவிஞன்தான்
கைபிடித்துப்பார் உனக்காக
காவியமே செய்வான்
இப்போதைக்கு இந்தக் கடிதத்தைப்
பிடி காதல் செய்வான்
– நீச்சல்காரன்