Shadow

துப்பாக்கி விமர்சனம்

Thuppaki
சகுனி, பில்லா 2, தாண்டவம், மாற்றான் என தொடர் ஏமாற்றங்களில் இருந்து ரசிகர்கள் மீளவும், இந்த வருட தீப ஒளி திருநாளைக் கொண்டாட்டமாக்கவும் வந்திருக்கும் இளைய தளபதி விஜய்யின் படம்.
விடுமுறைக்கு வரும் இராணுவ வீரர் ஒருவர், தீவிரவாதிகள் திட்டமிடப்பட்டிருக்கும் வெடுகுண்டு தாக்குதலை முறியடிக்கிறார். அதை தொடர்ந்து தீவிரவாதிகளின் தலைவன்  வகுக்கும் வியூகங்களை இராணுவ வீரர் எப்படி சமாளிக்கிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.
ஜெகதீஷ் என்னும் இராணுவ அதிகாரியாக விஜய். இளமை துள்ளலுடன் அழகாய் பாத்திரத்தில் பொருந்துகிறார். உள்ளூர் ரவுடிகளையே தொண்டைக் கிழிய கத்தியால் வெட்டுபவர், தீவிரவாதிகளை சத்தமின்றி டொப்பென சுட்டு தள்ளுகிறார். எப்பொழுதும் போல் நடனத்தில் தனி ஆர்வம் ஏதும் காட்டாமல் வந்தேன், ஆடினேன் என்பது போல் பாடல்களில் தெரிகிறார்.  காஜல் அகர்வால் நாயகியாக. குத்து சண்டை வீராங்கனையாக அறிமுகமாகி வழக்கமான தமிழ்ப் பட நாயகியாக பரிணமித்து பாடல்களுக்கு மட்டுமே நேர்ந்து விடப்படுகிறார். ஜெயராம் படத்தில் ஏன் எதற்காக என்று தெரியவில்லை. விஜய்யின் மூத்த அதிகாரியாக நடித்துள்ளார். மும்பை காவல்துறை அதிகாரியாக சத்யன். சிற்சில இடங்களில் நகைச்சுவைக்கும் உதவுகிறார். வில்லனாக வித்யூத் ஜம்வால். நாயகனைப் போலவே அதிர்ந்து கத்தாத வில்லன். துப்பாக்கியால் சுட்டு விட்டு, ‘ஷோ மீ.. ஷோ மீ’ என பழித்து காட்டும் பொழுது மட்டும் சிறிதளவு நடிக்க செய்கிறார்.
தமிழ்ப் படங்களில் ‘காதல்’ படும்பாட்டை நினைத்தால் இதயமே வெடித்துவிடும் போல. ‘அழகாக இருப்பவன் சாதிக்க மாட்டான். சாதிக்கிறவன் அழகாக இருக்க மாட்டான்’ என்று நாயகியின் தோழி சொல்லும் கணத்தில் நாயகிக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. என்னக் கொடுமை இது!? மீண்டும் மீண்டும் அழகானவர்கள் தான் காதலிக்க தகுதியானவர்கள் என்ற விஷ கருத்து அழுத்தம் திருத்தமாய் தமிழ்ப் படங்களில் பதிந்த வண்ணமே உள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ் தானொரு வெற்றிப் பட இயக்குனர் என்பதை மீண்டும் நிருபித்து விட்டார். முருகதாஸின் நாயகர்களுக்கு சண்டையின் பொழுது அடிபட்டு கை பிசகி சுளுக்கு ஏற்பட்டாலோ, எலும்பு நழுவினாலோ.. அதை அவர்களே சரி செய்து கொள்ளும் அற்புத சக்தியைப் பெற்றவர்களாக உள்ளனர். கஜினியில் ‘ஷார்ட்-டைம் மெமரி லாஸ்’, ஏழாம் அறிவில் ‘போதி தர்மர்’. அதே போல் இந்தப் படத்தில் ‘ஸ்லீப்பர் செல்’. படத்தினை இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பித்துள்ளனர். துப்பாக்கியில் இருந்து பாயும் குண்டினைப் போல திரைக்கதை துல்லியமாக லாஜிக் ஓட்டைகளின் ஊடே பாய்கிறது. மொக்கை போடும் ஜெயராம், தீவிரவாதியை விஜய் வீட்டிற்குள் மறைத்து வைப்பது, கல்யாண ஆல்பத்தில் சிலரின் ஃபோட்டோகளை குறித்து தனது அடுத்த நகர்வை நாயகனுக்கு புலப்படுத்தும் வில்லனின் அமெச்சூர்த்தனம், வீடியோவில் தெரியும் பெண்ணின் அண்ணன் யாரென கண்டுபிடிக்காமல் க்ரூப்பிலுள்ள அனைவரையும் கண்கானிக்கும் வில்லனின் லூசுத்தனம், கடுப்பேற்றும் பாடல்கள் என்பதை எல்லாம் மீறி படம் கவரவே செய்கிறது. பாடல் வரிகள் காதில் விழாத அளவுக்கு இசை இரைச்சலாய் உள்ளது. பின்னணி இசையிலும் ஹாரிஸ் ஜெயராஜ் பெரிதாக சோபிக்கவில்லை. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் விஜய் முதல் வில்லன் வரை அனைவரும் அழகாக தெரிகின்றனர்.

Leave a Reply