“உத்தமவில்லன், பாபநாசம் என மியூஸிக் பண்ணி, அந்த ஹேங் ஓவரில் இருந்து வெளிவராமல் இருந்தேன். தூங்கா வனத்துக்கு எந்த பேட்டர்னில் மியூஸிக் பண்ணலாம்னு ஐடியா போயிட்டே இருந்தது. கமல் க்ளிட்ச் மியூஸிக் பண்ணலாம் என்றார். எனக்கு ஒரு சந்தேகம். க்ளிட்ச்னு ஒருவகை மியூஸிக் இருக்கு. அதைத்தான் சொல்றாரா எனக் கேட்டேன். ஆமாம்ன்னார். ஆனா, அந்த வகை மியூஸிக்கில் ஸ்பீக்கர் கிழிஞ்சாப்ல சத்தம் வரும். சரியா மிக்ஸ் செய்யலைன்னு நினைச்சுட்டா என்னப் பண்றதுன்னு டென்ஷனா கேட்டேன். ‘க்ளிட்ச் மியூஸிக், மெட்டல் மியூஸிக் ஒன்னு இருக்குன்னு நாம ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கலைன்னா வேற யார் சேர்ப்பா?’ என என்னிடம் கேட்டார். இதுல நானொரு பாடம் கத்துக்கிட்டேன். புதுசா ஒன்னு ஆடியன்ஸ்க்கு அறிமுகப்படுத்துவதில் நாம் தயக்கம் காட்டக் கூடாது” என்றார்.
“ஜிப்ரனின் வாய் பேசாது; அவரது வாத்தியங்கள் பேசும்” என ஜிப்ரானைப் புகழ்ந்த வைரமுத்து, “ஒருநாள் கமல் என்னைத் தொடர்பு கொண்டு, ‘யாரந்த ஜிப்ரன்? என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்’ என்றார். நான் ஜிப்ரனிடம், ‘உனக்கொரு நல்ல வாய்ப்புக் காத்திருக்கிறது’ என கமலிடம் அறிமுகம் செய்து வைத்தேன். இன்று, நான் ஜிப்ரனுக்கு ஃபோன் செய்து கமல் எங்கிருக்கார் எனக் கேட்கும்படி நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது” என்றார்.
வைரமுத்துக்கு பதிலளிக்கும் விதமாக, “வானம் எனக்கொரு போதி மரம்.. தினமும் எனக்கு சேதி தரும் என அற்புதமான பாடல் வரிகளை எழுதியிருந்தார். யாருப்பா அவர்? எனக்கொரு சேதி சொல்லக் கூப்பிடுன்னு அழைச்சுட்டு வந்தோம். அப்படி வந்ததுதான் அந்தி மழை. அன்னியிலிருந்து எங்க வனத்தில் அவர் மழைதான். அவரைத் தவிர, அவருக்கு மாற்றாக வேறொரு கவிஞர் வரணும்னு வேண்டிட்டு இருக்காங்க. ‘சர சர சார காத்து வீசும்போது’ன்னு யாரோ புதுசா வந்துட்டாங்கன்னு நினைச்சேன். பார்த்தா அதுவும் அவர்தான். சரி எழுதியது நம்மாளுன்னு தெரிஞ்சிடுச்சு, இசை யாருன்னு விசாரிச்சேன். அப்படிக் கிடைத்தவர்தான் ஜிப்ரான். அவர் என்னைப் பத்தி ஏதோ எல்லாம் தெரிஞ்சவன் போல் புகழ்ந்து பேசினார். அதெல்லாம் இல்ல. யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை என்னுடையது போல் பேசி கைதட்டு வாங்கிடுவேன்; பாடகர்கள் பாடினதுக்கு வாயசைச்சு நான் பாடின மாதிரி காட்டிடுவேன். நடிகன் இல்லையா? அப்படித்தான் க்ளிட்ச் மியூஸிக் ஸ்ருதி சொல்லித் தெரியும்” என தன் மகளைப் பூரிப்புடன் கை காட்டினார் கமல்.