இரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் உல்லாசமாய் இருக்கும் விடுதியில், திவாகரின் மகனைக் கடத்தி வைக்கின்றனர். திவாகர் எப்படி தன் மகனை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.
மீண்டும் ஓர் உத்தம அப்பா கதாபாத்திரத்தில் கமல் ஹாசன். பனிச் சுமையின் பாதிப்பு காரணமாக மனைவி விட்டுப் பிரிந்த கழிவிரக்கத்தில் உழல்பவர். கமலுக்கு, இத்தகைய கதாபாத்திரம் தண்ணீர் பட்டபாடாகி விட்டாலும். ஒவ்வொரு முறையும் வித்தியாசம் காட்ட அவர் தவறுவதே இல்லை. உதாரணமாக, ‘ஜீன்ஸு, ஜீன்ஸு.. டி.என்.ஏ.’ என அவர் மகனை நொந்து கொள்ளும் காட்சியைச் சொல்லலாம். எழுத்தாளர் சுகாவின் வசனங்கள் ஆங்காங்கே புன்னகையை வரவேற்கிறது. சாம்ஸும் தன் பங்கிற்குக் கலகலக்க வைக்கிறார்.
பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத் என பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருந்தாலும் மனதில் பதிய மறுக்கிறார்கள். ஆனால், கமலுக்கு இணையாக அசத்துகிறார் பிரகாஷ் ராஜின் அசிஸ்டெண்ட்டாக வரும் குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டத்தில் சிறுவனின் தந்தை காளையனாகவும், ஜிகர்தண்டாவில் நடிப்பு சொல்லித் தரும் முத்துவாகவும் நடித்தவர்). கமல், பிரகாஷ் ராஜ் என்ற ஜாம்பவன்கள் ஆக்கிரமிக்கும் ஃப்ரேமிலேயே, அவர் இந்த மாயத்தைச் செய்கிறார். ஒவ்வொரு படத்திலும் தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வதில், கமலுக்குச் சவால் விடுமளவு திறமைசாலி என்பது மிகையில்லை.
காவல்துறை அதிகாரி மல்லிகாவாக த்ரிஷா. ஆச்சரியப்படுத்தும் தோற்றப் பொலிவோடு, கதாபாத்திரத்துக்கு ஏற்றாற்போல் கன கச்சிதமாகப் பொருந்துகிறார். கெளதமியின் உடைத் தேர்வும் அதற்கொரு காரணம். அவரவர் உடை, அவர்களது குண நலன்களைப் பிரதிபலிக்கிறது. அதே போல், ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்தோடு நம்மை ஒன்ற வைக்க உதவுகிறது.
ஃப்ரென்ச் படமான ‘ஸ்லீப்லெஸ் நைட் (நுய் ப்ளான்ஷ்)’-இற்கு, திரைக்கதை அமைத்துள்ளார் கமல். அவருக்கே உரிய பிரத்தியேக நுட்பங்களால் மெருகேற்றியுள்ளார் என்றே சொல்லவேண்டும். கீழே விழும் ஆம்லெட்டைக் கழுவுவது, ஸ்னூக்கர்ஸ் டேபிளில் மறிப்பவனின் குறியில் பந்தை எறிந்து ‘எங்கப்பா’ என திவாகரின் மகன் கோபத்தை வெளிபடுத்துவதென நிறைய விஷயங்களைச் சொல்லலாம். கமலின் மகனாக நடித்திருக்கும் அமன் அப்துல்லா மிகச் சிறந்த தேர்வு.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு விடுதிக்குள் படமாகப்பட்டுள்ளது. இதே போன்ற க்ளோஸ்ட் லோக்கேஷனில், சலிப்பு வராத வண்ணம் படத்தை நகர்த்துவது பெரும் கலை. அதுவும் எல்லாமே நைட் எஃபெக்ட் காட்சிகள் (தன்னை மறந்து நடனமாடும் கூட்டத்துக்கு மத்தியில் கேமிராவை கையில் தூக்கிக் கோண்டே, கதாபாத்திரங்களின் பின்னால் ஓடி படம் பிடித்திருத்தால் ஒழிய, இவ்வளவு கச்சிதமாக வந்திருக்காது என்று தோன்றுகிறது). காருக்குள் பொருத்தப்பட்ட கேமிராவின் கோணத்தில் இருந்து, இரவின் வண்ணப் புள்ளிகள் மெல்ல ஒரு மாநகரச் சாலையின் விடியலுக்குள் புகும் பொழுதே படம் உங்களை ஈர்க்கத் தொடங்கிவிடும். அந்த ஈர்ப்பை, கடைசி வரை தக்க வைக்கிறது ஷான் மொகமதின் படத்தொகுப்பு.
ஆண்கள் வெட்கப்படும் தருணம் அழகானது என்பார்கள். ‘மன்னர் முன் நான் இவ்வளவு பேசியதே அதிகம்’ என உத்தம வில்லன் படத்தில், கமல் முன் வெட்கப்பட்ட ராஜேஷ்.. எப்படி கமலையும், இதர நடிகர்களையும் இயக்கியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாய் இருக்கிறது. வரம் பெற்ற இடத்திலேயே, வரத்தைப் பரீட்சித்துப் பார்த்து விட்டார் ராஜேஷ். படம் பார்ப்பவர்களின் கவனத்தை தொடக்கத்திலிருந்து இறுதி வரை சிதற விடாமல் ராஜேஷ் பார்த்துக் கொள்வதிலிருந்தே, பெற்ற வரத்தை சரியாக பயன்படுத்தப்படுத்தியுள்ளார் என்பதை அறியலாம்.