Search

தேவதைகளும், பேய் பிசாசுகளும்

டாக்டர் ஆப்ரஹம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகள் எக்காலத்திலும் எல்லா நாடுகளிலும் இருந்திருக்கிறார்கள். எவ்வளவுதான் இப்பகுத்தறிவுவாதிகள் தெய்வங்கள், தேவதைகள்,பேய்கள், பிசாசுகள், ஆவிகள் எல்லாம் வெறும் கற்பனைகள் என்று அடித்துக் கூறினாலும், அவர்களுடைய விவாதங்களை ஏற்றுக் கொண்டவர்கள் வெகுசிலரே. மக்கள் இவைகளில் கொண்டுள்ள நம்பிக்கைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் கைவிடப்படாமல் தொடர்ந்து வந்திருக்கின்றன.

கனிப்பொருளிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனித உருவை எய்திய மனிதன் வேறுவகைகளிலும் பரிணமித்து இயற்கை ஆவி உருக்களாக (Nature Spirits) தோற்றம் பெற்ற உயிரினங்களும் இருக்கின்றன. இயற்கையின் மூலப்பொருட்களை இயக்குவதற்கென்றே ஆவி உருக்கள் இயற்கையின் திட்டத்தில் அமைந்துள்ளன.

ஆரணங்குகள் (Fairies), கந்தர்வர்கள், நிலத்தெய்வம், நீர்த்தெய்வம், அனல்தெய்வம் ஆகியவைகளைப் பற்றி இந்து வேதங்களும், புராணங்களும், இதிகாசங்களும் குறிப்பிடுகின்றன. இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு தேவதையால் ஆட்சி செய்யப்படுவதாகக் கருதப்படுகின்றது. மித்திரன், வருணன், அரியமன், இந்திரன், சூரியன், சோமன் ஆகிய தேவதைகள் இவ்வாறு உருவெடுக்கலாயினர்.

வரலாற்றின் இடைநிலைக்காலத்தில் (Medieval Ages 5-15th Century B.C) மேற்கத்திய நாகரீகங்களும் இயற்கையாற்றலின் அதிதேவதைகளைப் பற்றிய இலக்கியங்களைப் படைத்திருக்கின்றன.

Sylph என்பது காற்றுக்குரிய ஆவித்தேவதை. அடிநிலக்கனிச் செல்வங்களைக் காப்பதாகக் கருதப்படும் குறளித் தெய்வங்களில் ஒன்று Gnome. அனலில் வாழ்வது salaman der என்னும் தேவதை. Brownie என்பது மனிதருக்கு வீட்டுக்காரியங்களில் உதவிகளைச் செய்யும் நற்பண்புள்ள தேவதை. Goblin என்பது அருவருப்பான தோற்றமுடைய குறும்புத் தேவதை.

Unine எனப்படும் நீர்த்தேவதை பெண் உருவுடையது. இது ஒரு மனிதனை விவாகஞ்செய்து அவன் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டால் மனிதனுக்கு இருப்பது போல் அதற்கும் ஆத்மா கிடைத்துவிடும் என்று நம்பப்பட்டது. இத்தேவதைகளுக்கு மனிதரைப்போல் பிறப்பும் இறப்பும் உண்டு. ஆனால் மனிதனைப் போல் ஆத்மா கிடையாது என்று நம்பப்பட்டது.

இன்னும் கெட்ட ஆவிகளைப் பற்றியும் மேற்கத்திய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பலவீனமான மனது உள்ளவரை நித்திரையில் பீடித்துக்கொள்வது Incubus என்னும் கெட்டஆவி. Succubus என்ற பெண் ஆவி காமவசப்பட்ட மனிதர்கள் நித்திரை செய்யும்பொழுது அவர்களுடன் பால் உறவு வைத்துக்கொள்கிறது என்று நம்பப்பட்டது. மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சிப்பருகி வாழ்வது vampire என்னும் கொடிய ஆவி. இவைகளைப் பற்றி கதைகளும் நாவல்களும் எழுதப்பட்டுள்ளன. சினிமாப் படங்களும் வந்துள்ளன.

இவ்வாறாக மனித சமுதாயம் நீணடகாலமாகவே பேய்கள், பிசாசுகள், ஆவிகள், தேவதைகள் ஆகியன இருப்பதாக நம்பி வந்தன.

கொடிய பாவங்களைப் புரிந்தவர்கள் தமது மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த கீழ்த்தர ஆசைகளை அடைய முடியாத நிலையில் சடுதி மரணமடைந்தால் பேய்கள், பிசாசுகளாக அலைந்து திரிவர் என்று இந்துக்கள் மாத்திரமல்ல, பௌத்தர்களும் நம்புகிறார்கள்.

பேய்களையும் ஆவிகளையும் எல்லோராலும் பார்க்க முடியாது. நுண்நோக்காற்றல் பெற்றவர்களாவும் ஆவியுலகத் தொடர்பு கொள்ளும் ஆற்றலை மனத்தகத்தே வளர்த்துக் கொண்டவர்களாலும் முடியும். ஒருசில நிமிடங்கள் திடீரொளியாக ஒரு சிலருக்குத் தெரிவதும் தானாக விரும்பி எவருக்காகவது ஆவி காட்சி கொடுப்பதும் உண்டு.

கொலைகள் நடந்த இடங்களில் அல்லது கோரமான சடுதி மரணங்கள் நிகழ்ந்த இடங்களில் இறந்த ஒருவரின் பேயுருவை பல வருடங்கள் தொடர்ச்சியாகக் கண்டதாக பலர் கூறக்கேட்டிருக்கிறோம். உண்மையில் அவர்கள் கண்டது ஆவியையல்ல. இறந்தவரின் பலம்வாய்ந்த சிந்தனை, உருப்பெற்று (Thought – Form) நடமாடுவதையே. ஒரு வயோதிக மாது தனது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள தேவாலயத்துக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு வேளைகளில் நடந்து செல்வதை பலர் பார்த்ததாக ஒரு மேறகத்திய நாட்டில் கூறப்பட்டது. அந்த மூதாட்டியின் தெய்வ பக்தியிலிருந்து பிறந்த பலம்வாய்ந்த உணர்ச்சியின் உந்துதல் (Libido) தான் உயிர்பெற்று அவ்வாறு நடமாடியது. காலக்கிரமத்தில் அந்த சிந்தனை உரு (Psychon) வலுவிழந்து அழிந்து விடுகிறது. இந்த சிந்தனை உருவை “Psychon” என்ற ஒரு புதிய சொல்லால் அறிஞர்கள் விபரிக்கின்றார்கள்.
இறந்தவரின் ஆவியை இறக்கும் தறுவாயில் தூர தேசத்திலுள்ள உறவினரோ நண்பரோ காண்பதுண்டு. அது இறப்பவரின் மனோசக்தியின் உந்துதலால் ஏற்படுத்தப்படும் காட்சி (Apparition) இறக்கும் தறுவாயில் மனிதனுக்கு அபூர்வமான மனோசக்தி உண்டாகின்றது.
Leave a Reply