Shadow

தொட்டுத் தொடரும் வன்மம்

நாடு, மொழி, இனம், சாதி என எந்தவித பாரபட்சமும் பார்க்காத ஒன்று இருக்கிறது என்றால் அதுதான் பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை. இத்தகைய வன்முறைகள் நடக்காத நாடும் இல்லை, நாளும் இல்லை.

15ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டுக்கு இடைப் பட்ட காலத்தில் சூனியக்காரிகள் என அடையாளப்படுத்தப்பட்டு கொல்லப் பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். ஐரோப்பாவில் தான் இத்தகைய கொடூரச் செயல் மதத்தின் பெயரால் பெரிய அளவில் நிகழ்த்தப் பட்டது. பொதுவில் உலகம் முழுவதுமே சூனியக்காரிகள் என சந்தேகப்பட படும் பெண்களின் நிலை அவலமும், துயரமுமானது.

இன்றும் ஆஃப்ரிக்காவில் பெண்களுக்கு எதிராக இத்தகைய கொலைகள் வாடிக்கையாக இருப்பது கவலை தரும் செய்தி.

சூனியக்காரிகள் என சந்தேகப்படுபவர்களைக் கொல்வது ஒரு சடங்காகவே பாவிக்கப்பட்டது. அவர்களை எங்கு, எப்படிக் கொல்ல வேண்டும் என வழிகாட்டும் ஒரு புத்தகமே லத்தீன் மொழியில் வெளிவந்திருக்கிறது. ஊரின் நடுவில் தண்டித்தால் தான் அனைவரும் பார்த்து ரசிக்க முடியும் என்பது போல திட்டமிட்டு எரித்துள்ளார்கள்.

Day of Wrath என்றொரு டேனிஷ் மொழிப் படம். 1943ல் வெளியானது. சூனியக்காரிகளை அன்றைய ஐரோப்பிய சமூகம் எப்படியெல்லாம் பலிக் கொண்டது என்பது பற்றி தெரிந்துக் கொள்ள உதவும்.

கதை 1623 ல் நடக்கிறது. ஹெர்லோஃப் மார்ட்டே என்ற வயதான பெண்ணை சூனியக்காரி என சந்தேகப் பட்டு சிறைபிடிக்க வரும் போது அவள் தப்பித்துப் போய் ஆன்னே என்பவளிடம் தஞ்சம் கேட்கிறாள். ஆன்னேவின் தாயும் ஒரு சூனியக்காரி. ஆனால் அது ஆன்னேவிற்கு தெரியாது. அந்த ஊரின் வயதான பாதிரியார் அப்சலோன், அழகான ஆன்னேவை கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஆசையில், ஆன்னேவின் தாயாரை காப்பாற்றுகிறார் வயதான பாஸ்டரான . அதைப் போல் தன்னையும் காப்பாற்ற சொல்கிறார் மார்டே. இல்லை என்றால் ஆன்னே ஒரு சூனியக்காரி என எல்லோரிடமும் சொல்லி விடுவேன் என மிரட்டுகிறாள். ஆனால் அதிகாரிகள் மார்ட்டேவை சிறைபிடித்து அவளை உயிருடன் தீயில் தள்ளி தண்டனையை நிறைவேற்றுகின்றனர்.

அப்சலோனின் முதல் மனைவி மகனான மார்ட்டின் ஆன்னேயின் வீட்டிற்கு வருகிறான். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு விடுகிறது. இதற்கிடையில் மார்ட்டேவின் மரணம் பாதிரியார் அப்சலோனைப் பாதிக்கிறது. தான் கடவுளிடம் பொய் சொல்லி விட்டோமே என கவலைப்படுறார். மார்ட்டேவிடமிருந்து உண்மையை வரவைக்க சித்ரவதை செய்த அதிகாரி இறக்கிறார். அதற்கு காரணம் மார்ட்டேவின் சூனியம் தான் என சொல்லி விட்டு இறக்கிறார். அடுத்தது தான் தான் இறக்க போகிறோம் என்கிற பயம் அப்சலோனிற்கு வந்து விடுகிறது. 

ஆன்னே, மார்ட்டினுக்கும் தனக்கும் உள்ள காதலை பாதிரியார் அப்சலோனிடம் சொல்ல, தான் காதலித்த பெண் தன் மகனை காதலிப்பதை அறிந்த அப்சலோன் அதிர்ச்சியில் இறக்கிறார். இப்போது பாதிரியார் அப்சலோனின் தாய் ஆன்னே ஒரு சூனியக்காரி, மார்ட்டினை வசியம் செய்து தன் பிடிக்குள் வைத்துக் கொண்டு, அப்சலோனை ஆவிகளின் உதவியுடன் ஆன்னே கொன்று விட்டாள் என குற்றம் சாட்டுகிறாள். மார்ட்டினிற்கும் இப்போது ஆன்னே மீது சந்தேகம் வருகிறது. காதலனின் சந்தேகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இயலாமையில், “ஆமாம் நான் தான் அப்சலோனைக் கெட்ட ஆவிகளின் துணைகளுடன் கொன்றேன்” என்கிறாள்.

கிழட்டு பாதிரியாரால் இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிகிறது. உயிருக்கு உயிராய் காதலித்த மார்ட்டினால் சட்டென தந்தையின் மரணத்திற்கு ஆன்னேதான் காரணம் என முடிவு செய்து அவளை குற்றாவாளியாக்க முடிகிறது. தங்களுடைய பலவீனங்களை, இயலாமைகளை வஞ்சகத் தனமாக பெண்ணின் மீது சுமத்தி தப்பி விடுகின்றனர். ‘தான் இறக்க விரும்பவில்லை’ என கெஞ்சும் மார்ட்டேவின் கண்களை சந்திக்கும் தைரியம் படம் பார்க்க எவருக்கும் இருக்காது என்றே நினைக்கிறேன்.  

எந்த புண்ணியவான் யோசித்தானோ தெரியவில்லை, சூனியக்காரிகள் ஆவிகள் உலகத்துடன் தொடர்புடையவர்கள் என உறுதியாக நம்பப் படுகிறது. நல்ல ஆவிகளின் உதவியோடு தீர்க்க முடியாத வியாதிகளை தீர்க்க இயலும் என்கிற நம்பிக்கை ஒரு பக்கம் பரவலாக இருந்தது. நடப்பனவற்றை முன் கூட்டியே சொல்லக் கூடிய திறமையையும் இத்தகைய பெண்கள் பெற்றிருந்தனர். இவர்களை நல்ல சூனியக்காரர்கள் என்றும், மரணத்தை உண்டு பண்ணுபவர்களை கெட்ட சூனியக்காரர்கள் என்றும் தரம் பிரித்தனர். முடிந்தால் நல்ல சூனியக்காரர்களையும், கெட்ட சூனியக்காரர்களையும் பிரித்து பார்ப்பார்கள். இல்லையேல் அனைவரையும் கொன்று விடுவார்கள். 

இந்தியாவில் கூட அப்படிப் பலரை கொன்றுள்ளனர். ஆனால் சரியாக ஆவணப்படுத்த படவில்லை. நாம் எதைத்தான் உருப்படியாக ஆவணப்படுத்தினோம். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட வட மாநிலங்களான பீகார், மத்திய பிரதேசத்தில்.. இந்த மாதிரி கொலைகள் சகஜமாக நடந்துள்ளது. 

பெண்கள் மீதான வன்முறைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம், ஆனால் இன்னும் நின்ற பாடில்லை.

– சிம்ம வாகனி

Leave a Reply