Shadow

நண்பன் விமர்சனம்

Nanba
நண்பன்எந்திரன் என்னும் மிகப் பெரிய முதலீட்டுப் படத்திற்குப் பிறகு.. அமீர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படத்தை அப்படியே சிந்தாமல், சிதறாமல் எடுத்து தமிழ்ப்பட பார்வையாளர்களுக்கு அளித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.  இளைய தளபதி விஜய்யுடன் ஷங்கர் இணையும் முதல் படம் இது. ஷங்கர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொசக்சி பசபுகழ் என்பவர் பஞ்சவன் பாரிவேந்தன் என்பவருக்கு பதிலாக ‘ஐ.இ.சி.’ என்னும் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படிக்கிறார். குருட்டாம்போக்காக மனனம் செய்து பரீட்சையில் வாந்தி எடுப்பதை விட விருப்பம் சார்ந்த துறையைக் காதலுடன் அணுகுவதே சிறந்தது என எண்ணம் உடையவர் கொசக்சி பசபுகழ். அவரது நண்பர்களான சேவற்கொடி செந்திலின் பயத்தைப் போக்கவும், வெங்கட் ராமகிருஷ்ணனின் விருப்பம் சார்ந்த துறையையும் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறார். கொசக்சி பசபுகழ் ஏன் மற்றொருவர் பெயரில் கல்லூரியில் படிக்கிறார் என்றும், கல்லூரி முடிந்த பின் கொசக்சியின் நிலைமை என்ன என்பதற்கும் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

பிரதி இயந்திரங்களை உற்பத்தி செய்யும் கல்வி் அமைப்பையும் அதற்கு ஒத்தோதும் கல்விக் கூடங்களையும் எள்ளி நகையாடி ஹிந்தியில் வந்த படம் ‘3 இடியட்ஸ்’. இப்படியொரு படம் தமிழில் சாத்தியமா என எவரேனும் ஏங்கி இருந்தால், அவர்களை அச்சுறுத்தும் படி தமிழில் ஷங்கரால் அப்படம் மறு உருவாக்கம் ஆகப் போகிறது என்ற செய்தி வெளியானது. ஆனால் தமிழில் இப்படத்தைக் கொண்டு வர விரும்பிய ஷங்கரைப் பாராட்டியே ஆக வேண்டும். சிறுத்தை, வெடி போன்ற மறு உருவாக்க படங்களுக்கு மத்தியில் கண்டிப்பாக தனித்து நிற்கும்.

பேராசியர் விருமாண்டி சந்தானம் (வைரஸ்) ஆக சத்யராஜ் நடித்திருக்கிறார். அவரை விட நிறைவாக நடித்திருக்கவே முடியாத அந்தப் பாத்திரத்தில் அவரை விட குறைவாக எவராலும் நடிக்கவே முடியாது என்று சொல்லும் அளவு நடித்துள்ளார். “ஸ/ஷ” என்று அழுத்தி சொல்லும் பொழுது மட்டும் பிரத்தியேக எச்சில் தெளிக்கும் உச்சரிப்பு ஏனோ தெரியவில்லை. மருந்திற்கு கூட சத்யராஜின் முகம் ‘க்ளைமேக்ஸ்’ தவிர்த்து வேறு காட்சிகளில் சிறு புன்னகையைக் கூட வெளிபடுத்தவில்லை. மாணவர்களை எதிரியாக பாவிப்பது போன்ற சிடுசிடு முகத்துடனே வலிய வலம் வருகிறார். மூல வைரஸ் பரவாயில்லை. அவரது முகத்தில் மாணவர்களின் நலன் மீதான பரிதவிப்பு தெரியும். அதற்கு அவர் நம்பும் முறைமை தான் இலகுவற்று முரட்டுத்தனமாய் இருக்கும். ‘ஏன் அஸ்ட்ரானட்ஸ் பென்சில் உபயோகப்படுத்தாமல் பல கோடி ரூபாய் செலவு செய்து அஸ்ட்ரானெட் பென் கண்டுபிடுச்சாங்க?’ என்ற கேள்விக்கு ஹிந்தி வைரஸ் யோசித்து பார்த்து விட்டு, “I will get back to you on this” என்று சொல்வார். ஆனால் கொசக்சியின் கேள்விக்கு எந்த அடிப்படை பிரக்ஞையும் அற்ற ஆதிக்கராய் மேடையை விட்டு இறங்குவார் தமிழ்ப் படத்தில் வரும் வைரஸ். லொள்ளுக்கு பெயர் பெற்ற நடிகர் என்பதாலோ என்னவோ பொறுப்பான ஒரு பாத்திரத்தை வலிந்து நகைச்சுவை என்னும் பெயரில் சிதைத்து விட்டதாக படுகிறது.

சேவற்கொடி செந்தில் ஆக ஜீவா. மூன்று நாயகர்களில் அதிக வலுவற்ற பாத்திரம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஜீவா இம்மி பிசகாமல் தனக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தை அருமையாக உபயோகித்துள்ளார். விஜய் போன்ற அனுபவசாலி நடிகருடன் சமனற்ற பாத்திரத்தில் நடித்தாலும் படத்தில் தனித்து தெரிகிறார் ஜீவா. ஸ்ரீகாந்தோ பார்த்த கண்களுக்கு பழுதில்லாமல் உள்ளார். இலியானா நாயகியாக. இலியானாவின் அக்காவாக நடித்திருக்கும் அனுயா இலியானாவை விட நன்றாக நடித்துள்ளார். மூன்று நாயகர்களுக்கு மூன்று நாயகிகள் என்ற கணக்கு படத்தில் நேர்படாதது கூடுதல் சிறப்பு.

நன்றாக படிப்பு வர வேண்டும் என்பதற்காக ஞான சூனிய சூரணம் சாப்பிடுபவரான ஸ்ரீவட்சன் (சைலன்சர்) ஆக சத்யன் நடித்துள்ளார். படத்தின் கலகலப்பிற்கு உதவுபவர். தான் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக சில்லுண்டித்தனமான வேலைகளில் எல்லாம் ஈடுபடுகிறார். பரீட்சையில் இரண்டாவதாக வந்து புகைப்படத்திற்காக சத்யராஜின் இடதுப் பக்கத்தில் சத்யன் அமரும் பொழுது,  அகல வாக்கில் சத்யராஜை விட பெரிதாக தெரிகிறார். சில நிமிடங்கள் தான் தோன்றினாலும் எஸ்.ஜே. சூர்யா அவர் நாயகனாக நடித்த படங்களில் தராத நிறைவாய் தருகிறார். வில்லன்களை பறக்க விடாத விஜய் படம் என்பது கண்டிப்பாக ஒரு மாபெரும் அதிசயம் தான். அந்த அதிசயித்தை சாத்தியமாக்க தன்னை முழவதுமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

சேத்தன் பகத் என்ற இந்தியர் எழுதிய ‘ஃபைவ் பாயின்ட் சம் ஒன்’ என்னும் ஆங்கில நாவலின் தழுவல் தான் ‘3 இடியட்ஸ்’ படம் என்று சொல்கிறார்கள். திரைக்கதையின் சுவாரசியத்திற்கு ராஜ்குமார் ஹிரானி, அபிஜாத் ஜோஷி என்பவர்களே காரணம். கெடு விடுக்கப்பட்ட தேதிக்குள் ‘ப்ராஜெக்ட்டை சமர்ப்பிக்க முடியாத மன அழுத்தத்தால் தற்கொலைப் புரிந்துக் கொள்கிறார் பன்னீர் செல்வம் என்னும் மாணவர். பன்னீர் செல்வம் ஆக நடித்திருக்கும் விஜய் வசந்தின் நிறமும், அவரது தந்தை செய்வதாக காட்டப்படும் தொழிலும்.. மூலப் படம் தொட்டிராத வெறொரு முக்கிய பரிமாணத்தைத் தொட்டு செல்கின்றன. படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் ஒரு நொடியாவது தோன்றி விட வேண்டுமென்பது  தமிழ்ப் பட இயக்குனர்கள் மத்தியில் நிலவும் எழுதப்படாத விதி. அதற்கு உட்பட்டு ஷங்கரும் இப்படத்தில் தோன்றி விடுகிறார். ஷங்கர் படங்களில் மட்டுமே சாத்தியம் ஆகும் ஒரு வரைகலை காட்சியும், நாயடி உடனாடும் பெண்களின் உடையில் மட்டுமே சிக்கணம் இருக்கும் பிரம்மாண்டமான பாடல் அமைப்புகளுமே மூலத்திற்கும், மறு உருவாக்கத்திற்கும் இடையில் உள்ள சின்ன வேறுபாடு.

நண்பன் – சத்தியத்திற்கு(!?) கட்டுப்பட்டு தன்னைப் பற்றிய உண்மையை நண்பர்களிடம் மறைக்கும் நாயகன் நடிக்கும் படத்திற்கு பெயர் நண்பனாம். “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு” என்று வள்ளுவர் சொல்கிறார். ஆனால் இங்கே.. சரி வேண்டாம். ALL IS WELL!!

Leave a Reply